பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பங்களாவில் ரம்யமாகத் தோட்டம்

பால்கனியில் தோட்டம், மொட்டை மாடியில் தோட்டம்... என்று விதவிதமான தோட்டங்களைப் பற்றிப் பார்த்தோம். இதோ தான் வசிக்கும் பங்களாவில் ரம்யமாகத் தோட்டம் ஒன்றைப் போட்டு அவ்வப்போது அதில் அழகாக ரிலாக்ஸ் செய்துகொள்கிறார் கீதா சிவகுமார். இந்த எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி கார்டன் வளசரவாக்கம் பகுதியில் படு பிரசித்தம்!

``எனக்கு கார்டனிங்கில் ஆர்வம் அதிகம். பங்களா பிளான் போடுவதற்குமுன், நான்குபுறமும் கார்டன் பிளான் பக்காவாக ரெடி பண்ணி வச்சுட்டேன். தவிர இன்டோர் செடிகளை கிச்சனிலிருந்து பெட்ரூம் வரைக்கும் அங்கங்கு வைத்து ரசிக்கிறேன்.

எனக்குப் பொதுவாகவே தனிமை ரொம்பப் பிடிக்கும்; அதுவும் இந்தத் தனிமை கார்டனில் எனும்போது, எனது மனம் செடிகொடிகளுடன் சந்தோஷமான உணர்வுகளோடு அளவளாவிக் கொண்டிருக்கும். நான் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு இந்த கார்டனைத்தான் பயன்படுத்திக் கொள்வேன். நான் கொஞ்சம் வருத்தத்திலிருந்தாலும், எனது செடிகளுடன் மனதிற்குள் பேசியபடியே இலைகளை, பூக்களை என்னையுமறியாமல் தடவிக்கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட பொழுதுகளில் பூக்கள், இலைகள் லேசாக வாடி எனது வருத்தத்தை உள்வாங்கிக் கொள்வதை கண்கூடாகப் பார்த்து உணர்ந்திருக்கிறேன். செடிகளுக்கும் மனிதர்களைப்போல உணர்வுகள் இருக்கின்றன. அதனால் செடி கொடிகளை உங்கள் ஃபிரெண்டாக ஏற்றுக் கொள்ளலாமே!

என்னைப் பொறுத்தவரை செடிகொடிகள் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை உள்வாங்கிக்கொண்டு நேர்மறைச் சக்திகளைக் கொடுத்து நம்மை ஊக்குவிக்கின்றன என்பது எனது அனுபவபூர்வமான உண்மை. அதனால் நீங்களும் இந்த யுக்தியைக் கையாண்டு பாருங்களேன்...'' என்கிறார் கீதாசிவகுமார்.

`ஆளை அசத்தும் இந்தத் தோட்டத்தை வேறு எந்தமாதிரி தேடல்களுக்கெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள்'' என்றபோது

``கார்டன் என்றாலே உணர்ந்து அனுபவிக்கவும், பார்த்து ரசிக்கவும்தான். கார்டனில் புக்ஸ் படிப்பது, கார்டனில் அமர்ந்து டிஸ்கஸ் செய்வது என்பதெல்லாம், என்னவோ எனக்கு கார்டன் தரும் அமைதியான உணர்வுகளை மிஸ் பண்ணுவது போன்ற குற்ற உணர்ச்சியைத் தரும். ஸோ, கார்டன் என்றால் ஒன்லி சந்தோஷம்... சந்தோஷம்... சந்தோஷம்... மட்டும்தான்.

குடும்பத்தோடு கார்டனில் அமர்ந்து `நிலாச்சோறு' சாப்பிடும்போது நான் பிறவிப்பயனை அடைந்ததாக பலமுறை எனக்குள் சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் செடிகளின் சந்தோஷ உணர்வுகளை இதயம் வரை உள்ளிழுத்து சுவாசித்திருக்கிறேன்.'' என்கிற கீதாவின் பேச்சும் அவரது தோட்டம் போலவே ரம்யமாக இருக்கிறது.

``தோட்டம் தரும் நறுமணமும், புதுவண்ணமும், புத்துணர்ச்சியும் வாழ்வியலில் ஆரோக்கியம் தரும் விஷயம். க்ளோபல் வார்மிங் அதிகமாகிவிட்ட இந்தச் சூழ்நிலையில் மரம் வளர்ப்பது மட்டுமே நம் மண்ணைப் பாதுகாக்கும். மாசுபடிந்த நகரக்காற்றை சுத்தமாக்கும். சுகந்தமான தோட்டம் அமைப்பதுகூட ஒரு பொது சேவையுடன் கூடிய அம்சமாகவே நான் கருதுகிறேன். சிறிய இடம் என்றால் சில செடிகள் வைத்தும் பெரிய இடம் என்றால் ஒரு மரம் வைத்தும் இயற்கைச் செழுமைக்கு உதவுங்களேன்.'' என்று வேண்டுகோளும் வைக்கிறார் கீதாசிவகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக