பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி!

காது கேளாமைக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, 'காக்ளியர் இம்பிளான்ட்’ என்ற காது கேட்கும் செயற்கைக் கருவி இது வரை பொருத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் பேசுவது மட்டுமே கேட்கும்; சுற்றுப்புற ஒலி தெளிவாகக் கேட்காது. இப்போது இசையைக்கூட பிரித்துக் கேட்கும் அளவுக்கு இதில் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கே.கே.ஆர். இ.என்.டி. மருத்துவமனையின் சீனியர் கன்சல்டன்ட் டாக்டர் ரவி ராமலிங்கம் பேசினார். ''பொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக் காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். காக்ளியா என்ற இடத்தில் அது எலெக்ட்ரிக்கல் சிக்னலாக மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். மூளையில் காதுக்கான பிரத்தியேகப் பகுதியில், அந்த சிக்னல் உணரப்படும். இதில் பிரச்னை இருந்தால்... காது கேளாமை ஏற்படுகிறது. பிறவியிலேயே காது கேட்கவில்லை என்றால், தானாகவே வாய் பேச முடியாமலும் போகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான், காக்ளியர் இம்பிளான்ட். இது இன்டெர்னல் மற்றும் எக்ஸ்டெர்னல் என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது. எக்ஸ்டெர்னல் பகுதியில் சவுண்ட் பிராஸசர், ஒலியை அனுப்பும் அமைப்பு, பேட்டரி போன்றவை உள்ளன. இந்த சவுண்ட் பிராஸசர்தான், வெளியில் இருந்து வரும் சப்தத்தைப் பெற்று, அதை டிஜிட்டல் சிக்னலாக மாற்றும். பின்னர் அது டிரான்ஸ்மீட்டர் வழியாக இன்டெர்னல் அமைப்புக்குச் செல்லும். ஸ்டிமுலேட்டர், காந்தம் போன்றவை அடங்கிய இன்டெர்னல் பகுதி, அறுவை சிகிச்சை செய்து காதுக்குப் பின்புறம் பொருத்தப்படும். மூளைக்குச் செல்லும் நரம்பைத் தூண்டும் ஸ்டிமுலேட்டர் என்ற கம்பி அமைப்பு, டிஜிட்டல் சிக்னலை, எலெக்ட்ரிக் சிக்னலாக மாற்றி முளைக்கு அனுப்பி கேட்கும் திறனை செயல்படுத்துகிறது.



முந்தைய இம்பிளான்ட் கருவியில் கேட்கும் திறன் ஓரளவுக்கு மேம்பட்டதே தவிர, முழுமையானதாக இல்லை. முன்புவந்த ஸ்டிமுலேட்டர் நீளமாக இருந்தது. இப்போது சுருள் வடிவத்தில் அமைந்துள்ள இன்டெர்னல் காக்ளியரில், ஸ்டிமுலேட்டர் மிகச்சரியாக பொருந்தும்போது, கேட்கும் திறன் சிறப்பாக அமைகிறது. அதனால் இப்போது சாதாரண மனிதர்களைப் போல, பேச்சுடன் சேர்த்து சுற்றுப்புறங்களில் நிகழும் அனைத்து சப்தங்களையும் ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதன் உச்சகட்டமாக இசையைக் கூட பிரித்துக் கேட்டு ரசிக்க முடிகிறது.

சமீபத்தில் மிக மெல்லிய காக்ளியர் இம்பிளான்ட் அறிமுகமாகி உள்ளது. இதன் அகலம் 3.9 மி.மீட்டர். மற்ற இம்பிளான்ட்களைக் காட்டிலும் இரண்டரை மடங்கு உறுதியானது. இதில் அகற்றக்கூடிய வகையில் காந்தம் உள்ளது. இதனால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், காந்தத்தை அகற்றிக்கொள்ள முடியும். இந்த எக்ஸ்டெர்னல் அமைப்பில், இசை அல்லது தனக்கு எதிரில் உள்ளவர் பேசுவதை மட்டும் கேட்பது அல்லது ஒட்டுமொத்த சப்தத்தையும் கேட்பது என்று தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் ரிமோட் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே, காது மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. செவித் திறன் செம்மையாக உள்ள குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் ஆகின்றன. அது வரை மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு, அதைக் கற்று, பேசப் பயிற்சி செய்த பிறகே, பேசுகிறது. பிறவியிலேயே செவித் திறன் இல்லாத குழந்தைகளுக்கு எதுவுமே கேட்பதில்லை என்பதால், பேசுவதற்கு முயற்சிப்பதே இல்லை. குழந்தை பிறந்த உடனேயே அதற்கு காது கேட்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். பிரச்னை இருப்பது தெரிந்தால், உடனே ஆய்வு செய்து மூன்றரை வயதுக்குள் இந்த இம்பிளான்ட் பொருத்துவது நல்லது. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மூளையில் ஒலியைக் கண்டறியும் பகுதி செயல் இழக்க ஆரம்பித்துவிடும் என்பதால் குணப்படுத்த இயலாது.

சிகிச்சைக்கு வரும்போது எதனால் காது கேட்கவில்லை என்று பல சோதனைகள், ஸ்கேன் எடுத்துப் பார்த்த பின்னரே, இம்பிளான்ட் பொருத்துவது பற்றி முடிவு செய்வோம். சில குழந்தைகளுக்கு காது மண்டல அமைப்பே சரியாக இருக்காது. அவர்களுக்கு இந்த இம்பிளான்ட் பொருத்த முடியாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு புண் ஆறியதும் எக்ஸ்டெர்னல் அமைப்பைப் பொருத்துவோம். அதன் பிறகு குறைந்தது ஓர் ஆண்டு கேட்பதற்கான பயிற்சி எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சையைக் காட்டிலும் இந்த பயிற்சிதான் அந்தக் குழந்தை கேட்கவும் பேசவும் பெரிதும் உதவியாக இருக்கிறது.

இன்னொரு நல்ல செய்தியும் உள்ளது. இன்டெர்னல் மற்றும் எக்ஸ்டெர்னல் பகுதிகள் இரண்டையும் காதுக்குப் பின்புறம் தோலுக்கு அடியிலேயே வைத்துப் பொருத்தும்படி புதிய இம்பிளாண்ட் விரைவில் வரஉள்ளது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் பிறவிக் காது கேளாமை பிரச்னை உள்ள குழந்தைகளும் நம்மைப் போலவே கேட்கும் திறனுடன் இருப்பார்கள்...'' என்றார்.

கேட்டாலே இனிக்கிறதே!

1 கருத்து: