பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 மார்ச், 2011

அனுபவங்கள் பேசுகின்றன !

'முறை அழைப்பு’ முறையாக இருக்கட்டுமே!

முன்பெல்லாம் திருமணம் என்றால், வெளியூரில் இருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பார்கள். திருமணப் பத்திரிகை அனுப்பும்போது, கூடவே ஒரு கடிதம் எழுதி, 'கண்டிப்பா குடும்பமா வந்துருங்கப்பா...’ என்று ஆசையுடன் அழைப்பார்கள். அந்த அன்புக்காகவே... 'தவறாமல் போகவேண்டும்' என்று நினைப்போம். இப்போது கடிதம் எழுதும் பழக்கமெல்லாம் காணாமல் போய்விட்டது. பத்திரிகையை அனுப்பிவிட்டு, போன் செய்து, ''வந்துடுங்க மாமா'' என்று கூப்பிடுகிறார்கள். இதில் சிக்கல் என்னவென்றால், மாமாவைக் கூப்பிடுகிறவர்கள் ''மாமிகிட்ட கொடுங்க... ஒரு வார்த்தை சொல்லிடு றேன்'' என்று சொல்வதில்லை. சித்தியை அழைப்பவர்கள், சித்தப்பாவைக் கண்டுகொள்வதில்லை. இப்படி சம்பந்தப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களை மட்டும் அழைத்துவிட்டு, அவர்களின் துணையை மரியாதைக்குக்கூட அழைக்கமால் விடுவதால், உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது.
உறவுகள் நிலைக்கத்தானே இம்மாதிரியான அழைப்புகள்..? அதை முறையோடு செய்வதுதானே தலைமுறைகள் தாண்டியும் அந்த உறவை உடன் வரச் செய்யும்?!
- இந்திராணி தங்கவேல், மும்பை

எழுதிக் கொடுத்தால்... இல்லை பிராப்ளம்!
ரிப்பேரான என் மொபைல் போனை சரி செய்வதற்காக, ஒரு கடையில் நின்றிருந்தேன். அங்கு வந்த ஒருவர், ''சார்... 100 ரூபாய்க்கு 'டாப் அப்’ பண்ணுங்க... சீக்கிரம்'' என்று தன் மொபைல் எண்ணைச் சொன்னார். கடைக்காரரும் 'டாப் அப்’ செய்தார். ஆனால், அவர் மொபைல் நம்பரில் அது ரீ-சார்ஜ் ஆகவில்லை. டென்ஷனான அந்த நபர், ''அஞ்சு நிமிஷம் ஆச்சு... இன்னும் ஏன் ஏறல..?'' என்று கொஞ்சம் குரலை உயர்த்தினார். ''இல்ல சார்... உங்க நம்பர்ல பணம் ஏறினதுக்கான டெலிவரி ரிப்போர்ட் எங்களுக்கு வந்துடுச்சு'' என்று பதில் தந்தார் கடைக்காரர். மோதல் வெடிக்கும் என்கிற நிலையில்தான் தெரிந்தது ஒரு நம்பர் மாறி, வேறு யாருக்கோ ரீ-சார்ஜ் ஆன விஷயம். ''நான் சரியாதான் சொன்னேன். நீங்க தப்பா போட்டுட்டீங்க'' என்று வந்தவர் கத்தித் தீர்த்தார். கடைக்காரரோ.. ''எனக்கென்ன வேண்டுதலா... தப்பா ரீ-சார்ஜ் செஞ்சு உங்ககிட்ட திட்டு வாங்கணும்னு? நீங்கதான் மாத்திச் சொல்லிட்டீங்க'' என்று பதிலடி கொடுத்தார். வந்தவருக்கு நூறு ரூபாய் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம்!
டாப்-அப் செய்யும்போது, மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்துவிட்டால்... நோ பிராப்ளம்தானே?!
- இரா.சந்திரிகா, குன்னூர்

ஃபண்ட் ரைஸிங்... பண்பு ரைஸிங்!

சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காக 'ஃபண்ட் ரைஸிங்’ செய்யச் சொல்கிறார்கள். குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரிடமும் வசூல் செய்து கொடுக்கிறார்கள். பள்ளிகளும் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என்று முக்கிய நாட்களில் அந்தத் தொகையைத் தொண்டு நிறுவனங் களுக்கு வழங்குகிறார்கள். இது பாராட்டத்தக்க செயல்தான். ஆனால், அதில் அதிகம் வசூல் செய்தவர்களுக்கு விருதும், பாராட்டுச் சான்றிதழும் தருவதுதான் பிரச்னை. எனக்குத் தெரிந்த அப்பா ஒருவர் தன் குழந்தையிடம், ''நீ வீடு வீடா போக வேணாம். நானே கொடுத்துடறேன்...'' என்று சொல்லி ஒரு பெருந்தொகையைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அண்டை வீடுகள், பக்கத்து கடைகள், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என்று ஒவ்வொருவரின் முகமாகப் பார்த்து, கேட்டு வசூலித்த குழந்தைகளின் தொகை, அதைவிட குறைவாகவே இருந்திருக்கிறது. பள்ளியில் நிறைய பணம் தந்த குழந்தைக்கு பரிசும் சான்றிதழும் தந்திருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் மற்ற குழந்தைகள் வாடிப்போய் விட்டன.
நல்ல பண்பு வளரவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு இதுபோன்ற வேலைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதை பெற்றோரும்... பள்ளி நிர்வாகமும் சேர்ந்தே குலைத்துப் போடுவது என்ன நியாயம்?
- ஆர்.ராஜலஷ்மி, சென்னை-42

பக்குவம் சொல்லும் பள்ளி!

எங்கள் தெருவில் ஒரு பெண் பூப்பெய்தி னாள். மூன்றாம் நாளே பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். அவளுடைய பாட்டி யிடம், ''வயசுக்கு வந்த பெண்ணை கொஞ்ச நாளைக்கு வீட்டுல வெச்சு, அந்தச் சமயத்துல ஏற்படற உடல் உபாதைகளைத் தாங்கிக்கற பக்குவத்தையும், நாப்கின் உபயோகிக்கற முறைகளையும் சொல்லிக் கொடுக்காம, அவசரமா ஸ்கூலுக்கு அனுப்பிட்டீங்களே?'' என்றேன்.
அவரோ... ''ஸ்கூல்லயே குறிப்பிட்ட வயசுக்கு மேல உள்ள பெண் பிள்ளைகளுக்கு... உடல்ல ஏற்படற மாற்றங்கள், பூப்படையறது, அதை எதிர்கொள்ற பக்குவம், நாப்கின் பயன்படுத்தறதுனு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. இதுதொடர்பா நமக்குத் தெரியாத விஷயங்களைக் கூட பேத்திகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க லாம். அந்தளவுக்கு பக்குவப்படுத்தியிருக்காங்க ஸ்கூல்ல!'' என்றார்.
பாராட்டப்பட வேண்டிய பள்ளிக்கூடம்தானே!
- மு.ஜெயக்கொடி, விருதுநகர்

__._,_.___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக