பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 மார்ச், 2011

பகிர்தலின் பலம்

செல்வ செழிப்பு தந்த அகங்காரம் கொண்ட ஒரு பெரிய மனிதரைப் பார்த்து, ஒரு துறவி, "உங்களுக்கு கடவுள் அளித்துள்ள பெரும் செல்வம், ஏதுமற்ற லட்சகணக்கான குழந்தைகளுக்கு நல்லது செய்யவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றவர்களுக்கு அளிக்க பழகுங்கள்!" என்றார்.

இதைக் கேட்ட செல்வந்தருக்கு கோபம் வந்தது. "எனக்கு புத்திமதி சொல்ல இந்த சாமியார் யார்? என்று நினைத்து சென்று விட்டார்.

ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் வந்து, பொதுநல தொண்டு ஒன்றுக்காக, தான் பெரும் தொகை வழங்கியது குறித்து துறவியிடம், "என்ன திருப்தி தானே? இப்போது எனக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்!" என்றார்.

உடனே துறவி, "நன்றி சொல்லவேண்டியது நானல்ல, நீங்கள் தான்!" என்றார் அமைதியாக.

"துறவி ஏன் அவ்வாறு கூறினார்? என்பது அந்தப் பெரிய மனிதருக்கு புரியவில்லை. எனினும் அன்றில்லிருந்து தனது திரண்ட செல்வத்தை வறியவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வாரி வாரி வழங்க தொடங்கினார்.

செல்வராகிய அந்த பெரிய மனிதரை வள்ளலாக மாற்றிய துறவி- சுவாமி விவேகானந்தர். வள்ளலாக மாறிய செல்வந்தர் - ஜான் டி ராக்பெல்லர் என்ற அமெரிக்க தொழிலதிபர்.

தொழில் துறையில், தனக்கு சவால் விடுபவர்களை ஒழிக்க ராக்பெல்லர் தயங்கியதே இல்லை. இரக்கமற்ற அவரது போக்கால், நசிந்து போன தொழில்களும், அழிந்து போன குடும்பங்களும் ஏராளம்.

19-ஆம், நூற்றாண்டின் பிற்பகுதியில், அமேரிக்காவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் அவரே. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது கொடும்பாவியை எரித்தனர். அனால், அவர் மாறவில்லை.

வேடிக்கை, விளையாட்டு எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் உறவினர்களோ, நண்பர்களோ... எவரும் இல்லை, அவருக்கு தெரிந்தது எல்லாம் தொழில், போட்டி,வெற்றி, பணம் ஆகியவை மட்டுமே!

விளைவு... மன அழுத்தம், கவலை, பயம் யாவும் ஒன்று சேர்ந்து அவரின் உடல்நிலையை கடுமையாக பாதித்தன. நரம்பு மற்றும் ஜீரணம் தொடர்பான நோய்கள், அவரது ஆரோகியத்தை முழுவதுமாக அழித்தன.

டாக்டர்கள் சொற்படி, கஞ்சி, பால் மட்டுமே மட்டுமே சாப்பிட்ட அந்தக் கோடீஸ்வரர், ஓர் பிச்சைகாரரைப் போல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த சூழலில்தான் சிகாகோ நகரில், சுவாமி விவேகானந்தரை சந்தித்தார். அந்த சந்திப்பு, ராக்பெல்லர் பெரும் அசாதாரணமான மாற்றத்தை ஏற்படுத்தியது.

தானம் செய்வது, அவ்வளவு எளிதல்ல. " கரை படிந்த பணம்" என்று அவர் கொடுத்ததை பலரும் வாங்க மறுத்தனர். அனால், கலங்காமல், கொடுத்துக் கொண்டே இருந்தார். பணம் இல்லாமல் தவித்த சிறு கல்லூரி ஒன்றை, தனது கொடையால் உலகப் புகழ் பெற்ற " சிகாகோ பல்கலைக்கழகம்" ஆக்கினார்.

தவிர... உலகெங்கும் மக்கள் நலனுக்கான அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகள், மூளை காய்ச்சல், மலேரியா, போன்ற மோசமான வியாதிகளுக்கு மருந்துகள் இவரின் பண உதவியால், கண்டுபிடிக்கப்பட்டன.

மோசமான தொழிலதிபர் என்ற நிலையில் இருந்து, கருணை உள்ள பரோபகாரி என்ற நிலைக்கு மாறிய ராக்பெல்லருக்கு கிடைத்தது என்ன? மன அமைதி, ஆனந்தம் , உடல் ஆரோகியம்!

"இவ்வாறு செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி சொல்ல வேண்டியவர் நீங்கள்தான்!" என்று சுவாமி விவேகானதர் சொன்னதன் பொருள், அப்போதுதான் ராக்பெல்லருக்கு விளங்கியது.

53 வயதிலேயே, மருத்துவர்களால் கைவிடப்பட்ட ராக்பெல்லர், பிறகு நல்ல உடல் ஆரோகியத்துடன் வாழ்ந்து, 1937 -ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 98

சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால், அது இரட்டிப்பாகும். துக்கத்தைப் பகிர்ந்தால், பாதியாகக் குறையும். அன்பை பகிர்ந்தால் அது, ஆண்டவனை அடைய வழிகோலும்!.

ஆகவே, செல்வம் இருப்பவர்கள், இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு அறிவு புகட்டுங்கள். செல்வத்தைப் பகிர்ந்த கர்ணன், ஞானி ஆனான். வாழ்க்கையைப் பகிர்ந்த காந்தி, ஒப்புயர்வற்ற தலைவர் ஆனார்.

உடலில் உறுதியுடன், உள்ளத்தில் அன்பும் உள்ள அனைவரும் பிறருக்கு எந்த வகையிலாவது இயன்ற சேவைகளை செய்து கொண்டே இருக்க முடியும். நிம்மதியை இழந்தவர்களது வாழ்வில் இன்பத்தை ஏற்படுத்துவதால் கிடைக்கும் அமைதியும் ஆரோகியமும் அலாதியானவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக