பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 அக்டோபர், 2011

உயர விரும்புகிறவர்களுக்கு ஒரு வழி

நீங்கள் அமர்ந்திருக்கும் போது உங்கள் மனம் அமைதியாய் இருக்கிறதா இல்லையா என்பதும் அதில் புலப்படும். தொடர்ந்து காலை ஆட்டுவதோ அப்படியும் இப்படியுமாய் இழுத்துக் கொண்டிருப்பதோ கூடாது. அடுத்தவர் கவனத்தைக் குலைக்கும் என்பதால் தவிர்க்கவும். மேலும் அது ஒரு மரியாதையற்ற செயலாகவே கருதப்படும்.

அமர்ந்தபடி பேசும்போது உங்கள் உடம்பின் அசைவுகள் ஒத்துப் போவது அவசியம். அது கம்பீரத்தை அதிகரித்து உதவும். புன்னகைத்தல், தலையசைத்தல் போன் றவைகளும் இத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.

நிற்கும் நிலை

சில நேரங்களில் உட்கார்ந்திருப்பதைவிட நிற்பது சங்கடம். காரணம் அதில் சிரமம் அதிகம். நிற்பதிலும் பல விதங்கள்.

கைகளைப் பக்கவாட்டில் தளர்வாகத் தொங்கவிட்டுக் கொண்டு நேராக நிற்றல்.

பைதங்கள் சற்றே விலகியிருக்க கைகளைப் பின்புறமாய்க் கட்டி நிற்பது.
சைற்று முன்புறமாய் குனிந்தோ, வளைந்தோ நிற்பது (மரியாதையைக் குறிக்கும்)

சிலருக்கு இடுப்பில் கைவைத்து நிற்கப்பிடிக்கும். அது நிற்றலில் ஒரு மோசமான வகை ‘கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாத ஆள்’ என்று மற்றவர்கள் நினைக்கும்படி இருக்கும். அலட்சியமான தோரணை, மரியாதையற்ற செயல் ஆகும்.

ரொம்பவும் முக்கியமானவர்களுடன் இருக்கும்போது எச்சரிக்கை நிலையில் இருக்க வேண்டும்.

இருவராய் நின்று கொண்டு பேசும் போது உங்கள் கவனம் வேறு பக்கம் திரும்பக்கூடாது. நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையில் அடுத்தவர் நின்றபடி பேசினால் நீங்களும் எழுந்து நின்று கொண்டு பேச்சைத் தொடர வேண்டும். அது ஒரு விருந்தாக இருந்து, விருந்து கொடுப்பதும் நீங்களாக இருக்கும் பட்சத்தில் மற்ற விருந்தினர்கள் பக்கம் உங்கள் கவனம் செல்லலாம்.

நிமிர்ந்து உட்காருவது, நிற்கும்போது பாதங்கள் சற்றே விலகிய நிலையில் நிற்பது, நடக்கும்போது தலையை நிமிர்த்தி நடப்பது இவை நல்ல தோற்ற அமைவுகளாயிருக்கும்.

அங்க சேஷ்டைகள்

தோற்ற அமைவு என்பது ஒருவருடைய இயல்போடு சம்பந்தப்பட்ட விஷயம், உட்கார்ந்திருக்கும்போது மூக்கு அல்லது காதுகளைத் தொடுவது, தலைமுடியை தடவிவிட்டுக் கொள்வதும், விரல்களை சொடக்கு எடுப்பதும், கோர்த்துப் பிரிப்பதும் விரும்பத்தகாத செய்கைகள். இவை உங்களுடைய குழப்ப நிலையையே மற்றவர்களுக்கு வெளிப்படையாய் தெரிவிக்கும்.

சிலரைப் பார்த்திருப்பீர்கள், அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருப்பார்கள்.

காதைச் சொறிவதும், மூக்கைத் தோண்டுவதும் அடிக்கொரு தடவை கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் இருப்பார்கள். அது அவசரத்தில் இருப்பதை வெளிக்காட்டும். பொறுமையின்மை தோற்ற நிலைகளில் வெளிப்படுகிறது. அடிப்படை நாகரிகமே அவர்களுக்கு மறந்து விடுகிறது.

சில நிமிட காத்திருப்பில் குடி முழுகிவிடாது. ஒரு ஐந்துநிமிடம் விரயப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நாசமாகி விடுவதில்லை.

உடைகளை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

நீங்கள் விலை உயர்ந்த உடைகளை அணிந்தால் மட்டும் நேர்த்தியான தோற்றம் வந்துவிடாது. முதலில் ஆடையின் நிறம் அடுத்து உங்கள் அளவுகள் பொருத்தமாயிருக்க வேண்டும். துணிகளை (உடைகள்) தேர்ந்தெடுக்கும்போது உங்கள் உடம்பின் நிறம், உருவ அமைப்பு முகத்தோற்றம் இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். உடைகள் உங்களை மேன்மைப்படுத்துவதாய் உங்களுக்குக் கண்ணியமான தோற்றத்தை அளிப்பதாயிருத்தல் அவசியம்.

உடை எப்படி இருக்கலாம்? விலை உயர்ந்ததாய் இருக்கலாம். ஆனால் பகட்டாய் தெரியக்கூடாது. உங்கள் உடம்புக்கும் பொருத்தமாய் இருந்தால் மட்டும் போதாது, பர்ஸிற்கும் பொருந்துவதாய் இருக்க வேண்டும்.

ஆடையும் அணிகலன்களும் ஒருவரின் அந்தஸ்தைப் பறைசாற்றுவதாய் இருக்கலாம். ஆனால் உடம்பை அப்பட்டமாய் வெளிக்காட்டும் உடை அணிவதும், பிடிபிடியாய் நகைகளை வாரி பூட்டுக் கொள்வதும் நாணத்தக்கவை. அவை மதிப்புக்குப் பதிலாக அருவருப்பை ஏற்படுத்தும். மாறிவரும் ஃபேஷன்களுடன் அல்லாடிக் கொண்டிரு ப்பதைவிட நமக்கேற்ற உடையை அணிவது நல்லது. உடை கச்சிதமாய் தூய்மையாய் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். முதல் பார்வையில் எதிராளிக்கு உங்களைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் ஏற்படவேண்டும்.

சிறந்ததை மட்டுமே கொடுங்கள்

உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் ஒரு தரம் இருக்கவேண்டும். ஆடம்பர ஓட்டலில் விருந்துண்பதும் தனக்குள்ள உயர்ந்த இடத்துத் தொடர்புகளைப் பற்றி ஜம்பமடித்துக் கொள்வதும் தரமாகிவிடாது. உங்களுடைய நேர்மை, கண்ணியம், நன்னடத்தை, மரியாதை காட்டும் போக்கு இவையே உங்கள் தரத்தை நிர்ணயிப்பவை.

நடை, உடை, பாவனை மாதிரி நம்முடைய வேலையிலும் தரம் இருக்க வேண்டும்.

சிலர் எந்த சம்பளத்துக்கும் வேலை செய்யத் தயார். சிலரோ எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கள் எதிர்பார்க்கிற சம்பளம் இல்லையென்றால் வேலையை ஒப்புக் கொள் ளமாட்டார்கள். இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களல்ல. வேலையை ஈடுபாட்டுடன் செய்பவர்கள், தாங்கள் எதிர்பார்க்கிற நேர்த்தி கிடைக்கும் வரை ஓயமாட்டார்கள். அவர்கள் சிறந்ததை மட்டுமே வாழ்க்கையில் ஏற்பவர்கள். அதற்குக் குறைந்தவற்றுடன் சமரசம் செய்து கொள்வதில்லை.

மோசமான வேலையைச் செய்வதன் மூலம் உங்களுடைய முதலாளி (மேலதிகாரி)யை நீங்கள் ஏமாற்றுவதில்லை. உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். முதலாளிக்கு சில ரூபாய்கள் தான் நஷ்டம். உங்களுக்கோ சுயமரியாதையும், சிறப்பியல்பும் பாதிக்கப்படும்.

நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் உங்கள் ‘ட்ரேட்மார்க்’ இருக்க வேண்டும்.

தொழிலதிபர் என்றால் நேர்த்தியானதை உலகத்துக்குக் கொடுங்கள், உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் நற்பெயர் கிடைக்கும் வியாபாரம் பெருகும்.

வேலையில் ஒரு ஒழுங்கும் அக்கறையும் இருப்பது அவசியம். அப்போதுதான் நீங்கள் மற்றவர்களை விஞ்சி நிற்க முடியும்.

தன்னுடைய தொழிலில் யார் தேர்ச்சி பெற்றவரோ அவர்தான் முன்னணியில் இடம் பெற முடியும்.

எதைச் செய்தாலும் அதில் முழுமை இருக்கிற மாதிரி, உங்கள் செயல்திறன் வெளிப்படுகிறமாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.

கடிதத்தை தட்டச்சு செய்து உறையில் இட்டு மூடுவது வரை எதிலும் கவனம் இருக்க வேண்டும். கடிதம் யாருக்குப் போகிறதோ அவருடைய முழுப் பெயரையும் முக்கியமான பட்டம் விருது அல்லது பதவியையும் முறையாகக் குறிப்பிட வேண்டும். கடிதத்தில் அடித்தல் திருத்தல் இருக்கக்கூடாது. ஒரு வார்த்தையின் எழுத்துகளில் பிழையேதும் இல்லாதிருப்பது நல்லது. எதையும் அலட்சியமாய் விட்டுவிட வேண்டாம். அஞ்சல் முத்திரையை தலைகீழாய் ஒட்டுவது கூட அலட்சியம்தான். ரொம்பவும் சின்ன சமாச்சாரம், இதற்கென்ன முக்கியத்துவம் என்று எண்ணுவது தவறு.

நீங்கள் எதனை அற்ப சொற்பமாய் நினைக்கிறீர்களோ, அதுதான் உங்களை அடையாளம் காட்டும்.

‘என்ன சார் பெரிய சம்பளம், பீத்தல் மூவாயிரம், இதில் மெனக்
கெட்டு சிரத்தையா பண்ணணுமா? சம்பளத்துக்கேத்தாப்பல தான் வேலையும் இருக்கும்’ என்று சொல்கிற ஊழியர்கள் நிறையப் பேர். நல்லவிதமாய் செய்தாலும் அதே சம்பளந்தானே கிடைக்கப்போகிறது என்பது அவர்கள் எண்ணம். ஆனால் மோசமான வேலைமுறை தங்கள் முன்னேற்றத்துக்கே முட்டுக்கட்டையாகி விடும் என்பதை அவர்கள் அறிவார்களா? ரொம்பப் பேர் முன்னேறாமல் இருப்பதற்கு இதுவும் (அலட்சியப் போக்கு, அசிரத்தை) ஒரு காரணம்.

எண்ணிப் பாருங்கள், வேலையின் தரத்துக்கும் ஊதியத்துக்கும் என்ன சம்பந்தம்? அரைகுறைவாக அக்கறையில்லாமல் வேலை செய்துவிட்டு ஊதியக்குறைவை சுட் டிக்காட்டுவது சமாதானம் ஆகுமா?

வேலைக்கும் ஊதியத்துக்கும்
உள்ள தொடர்பைவிட
வேலைக்கும் மனச்சாட்சிக்கும்
உள்ள தொடர்பு அதிகம்
நீங்கள் நல்ல சம்பளம் பெற்றுக்கொண்டு செய்தாலும் மோசமான வேலை, அரைகுறை வேலை, அக்கறையில்லாத வேலை விரைவிலேயே உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும்.

வெற்றியின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று நேர்மைப் பண்பு. அதை எப்படியும் உங்கள் நிறுவனத்தலைவரோ உயர் அதிகாரியோ கவனத்தில் கொள்வார். அது உங்களிடம் இல்லையென்றால் மற்ற நிறுவனங்களிலும் உங்களுக்கு வரவேற்பு இருக்காது.

உயர விரும்புகிறவர்களுக்கு ஒரு வழிதான் இருக்கிறது, ‘எதையும் சிறப்பாகச் செய்வது’.

ஓர் ஓவியனின் கவனமும், சிற்பியின் உழைப்பும், கவிஞனின் முனைப்பும் உங்கள் வேலையில் உங்களுக்கு இருக்க வேண்டும். வண்ணத்தைப் பூசுவதும், கல்லைப் பொளிந்து தள்ளுவதும், வார்த்தைகளைப் புனைவதும் படைப்பாகி விடுமென்றா நினைக்கிறீர்கள்? எது எண்ணற்ற இதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, தடம் பதிக்கிறதோ, காலத்தை வென்று சாசுவதமாகிறதோ அது படைப்பு.

படைப்புகள் நேர்த்தியானவை

நேர்த்தியான எல்லாமே படைப்புகள்தாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக