பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

வருமானத்தை விட உயர்வானது எது?

சென்ற முறை உடுத்தியிருந்த அதே உடையுடன் மீண்டும் அந்த சிநேகிதி வீட்டுக்குப் போக மாட்டேன்.’ என்ற கொள்கை வைத்திருக்கிறார்கள் சில பெண்கள். இவர்களவது பரவாயில்லை, சிலருக்கு தினமும் மூன்று முறை உடை மாற்றியாக வேண்டும்.

‘என்னோட பட்ஜெட்ல மாசம் மூவாயிரம் ரூபாய்தான் டிரெஸ்ஸுக்கு ஒதுக்க முடியுது. ஷாப்பிங் போறதுன்னா எனக்கு சங்கடமாயிருக்கு’ என்று குறைப்பட்டுக் கொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். மூவாயிரம் ரூபாயில் குடும்பம் நடத்தி அதில் மிச்சம் பிடிக்கிற பெண்களும் இருக்கிறார்கள்.

எவ்வளவு சேமிக்கிறீர்கள்?

இரண்டு நண்பர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மாதம் இருபதாயிரம் சம்பளம். ஒருவர் அந்த ரூபாய் பற்றாமல் மேலும் கடன் வாங்குகிறார். மற்றொரு வரோ கணிசமான ஒரு தொகையை மாதாமாதம் சேமிக்கிறார். அவர் கடன் வாங்குகிற நிலையில், இவர் கடன் கொடுத்து உதவுகிற நிலையில் இருப்பது எப்படி? குடும்பம் நடத்துகிற முறைதான். முதலாமவர் வீட்டில் தாராள செலவு. இரண்டாமவர் வீட்டில் அவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவிடுகிறார்கள், நாம் என்ன சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு சேமிக்க முடிகிறது என்பதுதான்.

‘ஆடம்பரவாழ்க்கைக்கு ஆசைப்படுகிறவர்கள் பின்விளைவுகளை அறியாதவர்கள் எளிய வாழ்க்கை வாழ்கிறவர்களோ எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டவர்கள்’பெறுமானமில்லாதவற்றில் செலவிடுவதால் புதிதாய் எந்தப் பெருமையும் உங்களுக்கு வந்துவிடாது. உங்களுடைய உண்மையான தகுதியை சமூகம் அறிந்து வைத்திருக்கிறது.

ஆடம்பர உடையிலாகட்டும், ஆணவப் பேச்சிலாகட்டும் யாரும் மயங்கிவிடமாட்டார்கள். அது மதிப்பிற்குப்பதிலாக வெறுப்பையே தரும். எளிமையான உடை, இனிய வார்த்தை கட்டாயம் அடுத்தவர் மனதைக் கவர்ந்துவிடும்.

ஊதாரித்தனம் ஒருபோதும் உதவாது

ஆடம்பரத்தின் காரணமாய் கோடிகளை இழந்த தொழில் அதிபர்கள் உண்டு. பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மார்க்கோஸ் பதவியிழக்கவும், நாட்டைவிட்டே ஓடவும் அவருடைய மனைவி இமல்டாவின் ஊதாரித்தனம் காரணமாய் இருந்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஆபிரகாம்லிங்கன் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் அவருடைய மனைவி பகட்டுகளுக்கு ஆசைப்பட்டு கடனாளியானார். லிங்கன் தம்முடைய மாதச்சம்பளம் முழுவதையும் கடனுக்கே அழும்படி ஆயிற்று. அவர்களுக்குள் இது குறித்து கோபதாபங்கள் ஏற்பட் டதுமுண்டு.
சிலர் மனைவியின் செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் லஞ்சம் வாங்கி, கம்பெனி பணத்தில் கைவைத்து வேலையை இழக்கிறார்கள், சிறையில் அடைபட்டி ருக்கிறார்கள்.

கையில் ‘கிரடிட் கார்டு’ இருப்பதால் நட்சத்திர ஓட்டலில் உண்டு களித்து, கண்ணில் பட்ட நகைகளையும், துணிகளையும் வாங்கிக் குவித்து வீட்டுக் கடனை அடைக்க முடியாமல் திண்டாடும் நிலை இன்று பரவலாகவே காணப்படுகிறது.

எளிமையில் அமைதி, ஆரோக்கியம், ஆனந்தம் இருக்கிறது. ஆடம்பரம் இம்மூன்றையுமே அழித்துப் போடுகிறது.

ஒரு குடும்பத்தின் கனவு

நாட்டுப்பற்றுள்ள விவசாயியின் மகன் மேற்படிப்புக்காக நகரத்துக்கு வருகிறான். தன்னையும் ஒரு நாகரிகக் கனவானாகக் காண்பித்துக் கொள்ளும் முயற்சியில் டிரெஸ்களை வாங்கிக் குவிக்கிறான். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான், பெண் சிநேகத்தில் உல்லாசமாய் செலவிடுகிறான். தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் நிறை வேற்றிக் கொள்ள கிராமத்திலுள்ள தந்தையின் உழைப்பை உறிஞ்சுகிறான். அங்கே வயிற்றைக்கட்டி வாயைக் கட்டிப் பணம் அனுப்புகிறது குடும்பம். மகன் பட்டதாரியாக வேண்டும் என்கிற கனவு. முடிவில் பெற்றோரின் கனவும் பலிப்பதில்லை, இவனுடைய ஆசைகளும் நிறைவேறுவதில்லை. இருந்த காடுகரைகளை விற்றுத் தீர்த்துவிட்டு அவர்கள் அடுத்தவர் நிலத்தில் கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

போலித்தனம் வேண்டாம்

எளிமை ஒன்றும் இழிவானதல்ல. மன்னராயிருந்தும் ஔரங்கசீப் எளிய வாழ்க்கைதான் வாழ்ந்தார். மகாத்மாகாந்தி, அன்னை தெரசா இப்படி உலகம் போற்றிய பலரும் மிகவும் எளிமையாய் வாழ்ந்தவர்கள்.

போலிகள் எப்போதும் அசலாகிவிடாது. போலித்தனம் நீண்டகாலம் கைகொடுப்பதுமில்லை. நம்மிடம் இல்லாததை எதற்கு இருப்பது போல் காண்பித்துக் கொள்கிற முயற்சி?

சிலர் - வீட்டில் மனைவிக்கோ மகளுக்கோ செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக செய்யாமல், அந்தப் பணத்தைக் கொண்டு வெளி உலகில் தன்னை சவு கர்யமானவராய் காட்டிக் கொள்வதைப் பார்க்கிறோம். சிலர் - தங்கள் வருமானத்துக்குச் சற்றும் பொருந்தாத அதிக வாடகையில் வீடு பிடிக்கிறார்கள்.

பிறகு, முக்கிய செலவுகளுக்கே பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

அமைதியைக் கொடுக்கும் ஆசைகள்

மற்றவர்கள் உங்களை உயர்வாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் தகுதிக்கு மீறிச் செய்யும் முயற்சிகள் எதிர்மறையான கருத்துக்களையே உருவாக்கும்.

உங்களுக்குத் தெரியுமா, ஆதிகாலத்து மனிதர்களின் வாழ்க்கைமுறை? தொடர்ந்து வாழ்தல் மட்டுமே அவர்களுடைய அக்கறைக்குரிய விஷயமாயிருந்தது. அடிப்படையில் உணவும், உடையும் உறைவிடமும் மட்டுமே அவர்களுடைய தேவைகள். நாகரிக வளர்ச்சிக் கேற்ப இன்று தேவைகள் பெருகிவிட்டன, அதே அளவு கவலைகளும்.

தேவைகளைக் குறைத்துக் கொண்டால் கவலைகளும் குறைந்துவிடும். அதற்காக ஆதிவாசிகளைப்போல் காட்டு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்லவில்லை.

நம்முடைய வசதிகள் கூடிற்றே தவிர அமைதி குறைந்து போயிற்று. பங்களா, கார், ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், மியூசிக்சிஸ்டம் எல்லாம் சரி. அவற்றின் பராமரிப்பு, லைச ன்ஸ், இன்ஷ்யூரன்ஸ், நிர்வாகம், வேலைக்காரர்கள் வங்கிக்கணக்கு, வருமான வரி என்று நாள் முழுக்க மண்டையைப் பிய்த்துக் கொள்கிற மாதிரி எத்தனை சமாச்சாரங்கள். நாம் தேடிக் கொண்ட சவுகரியங்களின் பலன் மன உளைச்சலின்றி வேறே யென்ன? பெண்டாட்டி பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைவாயிருக்கிற து, சமயத்தில் நேரம் கிடைப்பதே அரிதாயிருக்கிறது. படுக்கையில் விழுந்தால் தூக்கம் பிடிக்கிறதில்லை.

ஆசைப்பட்ட வசதிகள் கிடைத்தும் உணவு, உடை, பொழுதுபோக்கு எல்லாவற்றிலும் ரசனை மாறிவிடுகிறது. கவுரவத்துக்காக ‘தண்ணி போடுகிற பழக்கம்’ பிறகு கட் டாயமாகிறது. ‘சுகர் கூடிப்போச்சு கொலஸ்ட்ரால் எகிறிப் போச்சு’ டயட் கண்ட்ரோலா இருக்கணும் என்கிறார் டாக்டர். கடைசியில் விரும்பியதை எல்லாம் விடும்படி ஆகிறது.

எளிய வாழ்க்கை முறை

எளிமையாக வாழ்கிறவருக்கு கடனில்லை, மன இறுக்கமில்லை, படுத்ததுமே தூக்கம் வந்துவிடுகிறது இருதய நோய்க்காக மருத்துவசோதனைக்குப் போகிறதில்லை.

‘எளிமையாயிருங்கள்
எளிமையாய் சிந்தியுங்கள்
சின்னச்சின்ன சந்தோஷங்களில்
மகத்தான அனுபவங்கள்’

மகாத்மா காந்தி வழக்கறிஞர் தொழிலில் நிறைய சம்பாதித்து, ஆடம்பரமாய் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நாட்டின் விடுதலை, சமுதாய மு ன்னேற்றம் போன்ற குறிக்கோள்களுக்காக எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். ஆட்டுப்பால், வேர்க்கடலை என்று எளிமையாக உண்டு, முரட்டுக் கதராடை அணிந்து ஆசிரமத்தில் வாழ்ந்தார். இரயிலில் மூன்றாம் வகுப்பில் தான் பயணம் செய்வார். டெல்லியில் துப்புரவுத் தொழிலாளருக்கான குடியிருப்பில் தங்குவார். இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜை சந்திக்கச் சென்றபோது கூட வழக்கமான உடையில்தான் சென்றார். அரை யாடையும், மேல்துண்டும்தான் அவருடைய உடை. நாமெல்லாம் மகாத்மாவாக முடியாது ஆனால் அவரைப் போல் வாழ்க்கையில் எளிமையைக் கடைப்பிடிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக