பிரபலமான இடுகைகள்

புதன், 5 அக்டோபர், 2011

இனிப்பு என்றதும் இதயம் வரை மனம் உவக்கும்.

இனிப்பு என்றதும் இதயம் வரை மனம் உவக்கும். மூளையில் எண்டார்ஃபின்கள் சுரந்து களிப்பை உண்டாக்கும். நம் மகிழ்வை பறைசாற்ற தொன்றுதொட்டு வழங்கப்படும் விஷயம் இனிப்புதான்!

இனிப்பாக இல்லையெனில் ஒருவேளை ஏவாளுக்கு ஆப்பிளைக் கடிக்க எண்ணம் வந்திருக்காது... அதேபோல், இளவல் கடவுள் முருகனுக்கும் மாழ்பழத்துக்காக கோபித்துக் கொண்டு பழனிக்கு படியேற வேண்டியிருந்திருக்காது. உயிர் காக்கும் மருந்தாயினும், உடல் தேற்றும் உணவாயிருந்தாலும் சரி, அன்று முதல் இன்று வரை இனிப்பு கலந்துதான் தயாரிக்கப்படுகிறது. உலகை நகர்த்தும் ஒரு முக்கிய விஷயம் இனிப்பு.

குளுக்கோஸ் மூலக்கூறுகள் தான் அந்த இனிப்புச் சுவையை நமக்குத் தருகின்றன. இவை தனியாகவோ, ஒன்றிரண்டாக கைகோர்த்தோ, கூட்டணியாகவோ இருப்பதைப் பொறுத்து, குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் (பழங்களில் இருப்பது), அமைலோஸ் (அரிசியில் இருப்பது), எனவும் மோனோ சாக்கரைடு, பாலிசக்கரைடு என்றும் பல பெயருடன் அழைக்கப்படுகின்றன. தனியே தன்னந் தனியே குளுக்கோஸாக இருக்கும் போது அது நம் இரத்தத்தில் தடாலடியாக வெகு விரைவில் கலந்து விடும். கூட்டணியுடன் வரும் போது கொஞ்சம் தாமதத்துடன் இரத்தத்தில் சேரும்.

வெள்ளை கிரிஸ்டல் சர்க்கரை தனி குளுக்கோஸ். ஆனால், பனை வெல்லமும் கரும்பு வெல்லமும் பாலி சாக்கரைடு வகையறாக்கள்.

இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக சேர்ப்பதால் தான் பனைவெல்லம் மற்றும் கரும்பு வெல்லமானது, ‘அஸ்கா’ எனும் வெள்ளைச் சர்க்கரையை விட மேல் என்கிறோம்.

‘கெமிக்கல் சேர்த்து தயாரிக்காத’ வெல்லமோ அதையும்விட உயர்ந்தது..

வெல்லத்தில் கெமிக்கலா என பதட்டமா? கரும்பைப் பிழிந்து சாறெடுத்த பின், carbonization அல்லது phospotaisation செய்ய எலும்பு (bone char) சேர்த்து, அழுக்குகளை(?) நீக்கி, வெளுப்பாக்கி, பின் vaccum மூலம் கிரிஸ்டல்களாக்கித்தான் வெள்ளைச் சர்க்கரை வருகிறது. இந்த கெமிக்கல், எலும்புக் கறி சமாச்சாரமெல்லாம் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் கரும்பு வெல்லம், கலர் ‘கம்மி’ என்றாலும் நம் உடலுக்கு மிக நல்லது.

வரும் தீபாவளிக்கு இந்த கெமிக்கல் சேர்க்காத வெல்லத்தை (வாய்ப்பிருந்தால் உரம், பூச்சிக்கொல்லி கெமிக்கல் சேர்த்து வளர்க்காத கரும்பிலிருந்து தயாரான ஆர்கானிக் வெல்லத்தை) தேடி வாங்கி, வகை வகையான தின்பண்டங்களைச் செய்து நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக மகிழலாம். வெல்லம் இனிக்கும் என்பது தெரியும். வெல்லத்தில் செய்த தின்பண்டம் உடலுக்கு எப்படி ஆரோக்கியம் தரும் என்று ஆச்சரியமா?

பல் துலக்கும் பொடியில் இருந்து, சாப்பிட்டபின் குதப்பும் வெற்றிலை வரை ஆரோக்கியச் சிந்தனை நம் பாரம்பரியத்திற்கு உண்டு. அதனால் தான் அடுப்பங்கரையே ஸைரன் இல்லாத ஆம்புலன்ஸ் போல் அன்றைய வீடுகளில் இருந்தன. மாடுலார் கிச்சனாகி விட்டாலும், சற்றே மெனக்கெட்டால், ‘உன் சமையலறையில் நான் மருந்தா? மாத்திரையா?’ என உங்கள் வீட்டுக்காரரை காதலுடன் ஆரோக்கியமாக பாட வைக்க முடியும். உங்கள் வீட்டில் இதோ இவை தீபாவளி ரிலீஸாக இருக்கட்டும்...

அதிரசம்
முந்திரிக்கொத்து
வெல்ல மோதகம்/சுகியம்
குழிப்பணியாரம்
அடைபிரதமன்
நேந்திரம்பழ ஜாம்(செண்ட முறியன் மோகன்லால் சேட்டன் வீட்டில் சாப்பிடுவது)

இனிப்பு எப்போது சேர்த்தாலும் ஏலம் கண்டிப்பாக அதில் போட வேண்டும். இனிப்பு கபத்தை வளர்த்துவிடுமாதலால், சளி பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு உள்ளது.. நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை.. நாட்டுச் சர்க்கரையான கரும்பு வெல்லம் தேன் சேர்ந்த இனிப்பு சாப்பிடலாமா?’’ என்றால்.. ரொம்ப சாரி! எல்லாரும் இனிப்பு சாப்பிடும் போது நீங்கள் கொஞ்ச நேரம் கண்களை மூடி, இஷ்ட தெய்வத்தை வேண்டி தியானம் செய்யலாம். அல்லது ‘ஏழாம் அறிவு’ ‘வேலாயுதம்’ படம் பார்க்கப் போகலாம். இப்போதைக்கு இனிப்பு வேண்டாம்..

‘பனைவெல்லம் நல்லது.. தேன் கொஞ்சம் சேர்ப்பதில் தவறில்லை’ என சாலமன் பாப்பையாக்களை வைத்து இப்போது மருத்துவ உலகில் பெரும் விவாதமே நடந்து வருகிறது.. அந்த நாட்டாமைகளின் தீர்ப்பு வரும் வரை நீரிழிவுக்காரரிடம் இருந்து எந்த வகை இனிப்பையும் ஒளித்து வைப்போம்!

நோஞ்சானாக இருக்கும் குழந்தைக்கும், ரப்பர் பேண்டை இடுப்பு பெல்ட்டாக போட்டுச்செல்லுமளவிற்கு உள்ள மெல்லிடையாளருக்கும் இனிப்பு, உடலை வளர்க்கும் பொருள். அவர்கள் இந்த திருவிழா நாளில் வெல்லத்து இனிப்புடன் உடலைத் தேற்றத் துவங்கலாமே!

சுகியன்

ஒரு கப் கடலைப் பருப்பை ஊற வைத்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். இத்துடன் பொடித்த வெல்லம் முக்கால் கப், லு கப் தேங்காய்த் துருவல், 1 டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு இதனை வதக்கவும். பின்னர் சிறிய உருண்டைகளாக்கிக் கொள்ளவும். ஒரு கப் மைதா மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து உருண்டைகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குழிப்பணியாரம்

ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கலரிசி, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து, 1 டீஸ்பூன் வெந்தயம் இவற்றை நன்கு ஊறவைத்து அரைத்து தோசை மாவு பதத்தில் புளிக்க வைக்கவும். இந்த மாவோடு சுத்தம் செய்த ஒரு கப் வெல்லம், லு கப் தேங்காய்த் துருவல் 1 டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து கரைத்து குழிப்பணியார சட்டியில் நெய்விட்டு ஊற்றி எடுக்கவும்.

வெல்ல ரெசிபிகள்

அதிரசம்

அரைகிலோ பச்சரிசியை நன்கு ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். 2 டீஸ்பூன் கசகசாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 400 கிராம் வெல்லத்தை சுத்தம் செய்து கம்பிப் பதத்தில் பாகு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் அரிசிமாவு, கசகசா, 1 ஸ்பூன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கிளறவும். மாவு பூரி பதத்திற்கு வந்ததும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பின் வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நேந்திரம்பழ வெல்லப்பாகு

நன்கு பழுத்த 4 நேந்திரம் பழங்களை தோல் நீக்கி சிறிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 1 கப் வெல்லத்தை பாகாக காய்ச்சி அதில் பழத்துண்டுகளைப் போட்டு, 1 டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்து நன்கு மசித்து சூப் போல் சாப்பிடலாம்.

முந்திரிக் கொத்து

அரைகிலோ பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து மாவாக பொடித்துக் கொள்ளவும். பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை அரை கப் எடுத்து வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு மாவுடன் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடி, சேர்க்கவும். 2 டீஸ்பூன் வறுத்த எள் ஆகியவற்றைச் சேர்க்கவும். 400 கிராம் வெல்லத்தை சுத்தம் செய்து பாகு காய்ச்சவும். இதில் மாவைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் காயவிடவும். 100 கிராம் பச்சரிசி, ஒரு டீஸ்பூன் உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து மாவாக்கி அதில் சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

காய்ந்த எண்ணெயில் ஒவ்வொரு உருண்டைகளையும் மாவில் போட்டு எடுத்து பொரித்து எடுக்கவும். கொத்தாக வேண்டுமெனில் 2 அல்லது 3 உருண்டைகளை ஒரே நேரத்தில் கொத்தாக பொரிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக