பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நல்லன தரும் நல்லெண்ணெய் குளியல்

தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு... 'கங்கா ஸ்நானம்’ எனப்படுகிற எண்ணெய்க் குளியல்! திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம். சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஜீவா சேகருக்கு, அதைப் பற்றிப் பேசுவதில் அத்தனை ஆர்வம்!

''அதிகாலை குளியல் என்பது உடம்புக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும். கடவுளின் பெயரால்



சொல்லி வைத்தால், தவறாமல் பின்பற்றுவார்கள் என்பதற்காகத்தான் அதிகாலை எண்ணெய்க் குளியலுக்கு ஆன்மிக காரணத்தைச் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்'' என்று அடிப்படையைப் புரிய வைத்த ஜீவா சேகர்,

''தீபாவளி மட்டுமில்லை... கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருப்பது, பஜனை செய்வது, கோலம் போடுவது போன்ற சடங்குகளும், அதற்காக அதிகாலை குளியல் போடுவதும் என எல்லாமே உடல் நலத்துக்கு உகந்த விஷயங்களே! முந்தைய காலங்களில் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நல்ல உடல் நலம் கிடைக்கப் பெற்றனர்!'' என்றவர், அதன் நன்மைகளை விரிவாகவே விளக்கினார்.



''எண்ணெய்க் குளியல் கிட்டத்தட்ட மசாஜ் போலத்தான். அன்றைய ஆயுர்வேத மருத்துவப் பிதாமகன் சுஸ்ருதா துவங்கி, இன்றைய நவீன 'ஸ்பா’க்கள் வரை... அனைவரும் ஏற்றுக்கொண்ட, உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான உடல் நலக்குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. உடல் சூடு தணியும், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, எலும்புகளும் மூட்டுகளும் லகுவாகும். உடலின் இறந்த தோல் செல்கள் நீங்கி, சருமம் மிருதுவாகி, போஷாக்கும் பெறும்.

கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு கண் எரிந்து கிடப்பவர்கள் மற்றும் தூசு, புகை என சுற்றுப்புறச் சீர்கேட்டால் அவதிப்படும் எல்லோருக்குமே நல்லெண்ணெய் குளியல் புத்துயிர் தரும். இன்றைய இளம்தலைமுறை, தீபாவளியை முன்னிறுத்தியாவது ஒரே ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் போதும், உடல் புத்துணர்ச்சி, உள்ளத்திலும் பிரதிபலிக்க உள்ளமும் தீபமாய் சுடர்விடும். பாரம்பரிய பெருமையையும் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்!'' என்று அழகாக அடுக்கினார் ஜீவா சேகர்.

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தைச் சேர்ந்த, தமிழாசிரியை சௌந்தரம்மாள், தீபாவளி எண்ணெய்க் குளியல் பற்றிய நம்பிக்கைகளைப் பகிர்ந்தபோது... ''முதல்நாள் இரவே தண்ணீரில் ஆல், அரசு, அத்தி, மற்றும் மாவிலைகளைப் போட்டு வைத்திருந்து, காலையில் அவற்றை அகற்றிவிட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பொறுக்கிற சூட்டில் வெந்நீர் தயாராகும். அதேபோல், தேய்த்துக் கொள்ளும் நல்லெண்ணையைத் தயார் செய்வதிலும் தனிக்கவனம் உண்டு. இஞ்சித் துண்டு, பூண்டுப் பற்கள், மிளகு, விரலிமஞ்சள், சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறியதும், வீட்டின் மூத்தவர்கள் கையால், எல்லார் தலையிலும் சில சொட்டுகள் வைத்துத் தொடங்கிவைக்க, எண்ணெய் குளியல் உற்சவம் இனிதே ஆரம்பிக்கும்!

பல சந்தர்ப்பங்களில் முட்டல், மோதல் வர வாய்ப்புள்ள மாமன் - மச்சான் உறவை... துவக்கத்திலேயே இனிமையாக்க, தீபாவளி எண்ணெய் தேய்ப்பை மச்சான்கள் வசம் ஒப்படைத்துவிடுவார்கள். அப்படித் தேய்த்துவிடும் போது மாப்பிள்ளையின் அவயங்களில் சங்கடமேற்படும் குறிப்புகளை வைத்து, எதிர்காலத்தில் அவருக்கு வரப்போகும் நோய்க்குறிப்புகளை அனுமானித்து, சகோ தரியின் தாலிக்கு தடங்கல் இல்லாதிருக்க முன்னேற்பாடுகளும் சத்தமின்றி மேற் கொள்ளப் படும்'' என்று சௌந்திரம்மாள் சொன்ன தகவல், சுவாரஸ்யம்!

நலமும், நன்மகிழ்ச்சியும் தரட்டும் நல்லெண்ணெய் குளியல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக