பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

வாழ்க்கையின் தத்துவம்

சின்ன காடு அது.
இளைஞன் ஒருவன் மரம் வெட்டிக் கொண்டிருந்தான். அவன் ஒரு கடுமையான உழைப்பாளி. தெய்வ நம்பிக்கை மிகுந்தவன். தன்னம்பிக்கையும் நிறைந்தவன்.

தினமும் குளித்து முடித்து, கடவுளை வணங்கிவிட்டு, நம்பிக்கையுடன் காட்டுக்கு விறகு வெட்ட வருவான். நெடு நேரம் உழைப்பான். நிறைய மரங்களைச் சேகரித்துக் கொண்டு, நகரத்துக்குக் கொண்டு போய் விற்பான். பணம் நிறைய கிடைக்கும். உணவு சமைத்து, கடவுளை வணங்கி, ஏழைகளுக்கும் கொஞ்சம் உணவை தர்மம் செய்துவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்வான்.

அவன் மிகுந்த சந்தோஜத்துடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டான். அவன் முகமே தெய்வீகமாக இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒரு நாள், அவன் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, அந்த நாட்டின் மன்னன் அந்தப் பக்கம் வந்தான். கடமையே கண்ணாக இருந்த அவனைக் கண்டதும் மன்னன் அவன் அருகில் வந்தான்.

வந்த மன்னன் அரண்டு போனான். காரணம், கொடிய விஜமுள்ள ராஷநாகம் ஒன்று மரம் வெட்டிக்கு அருகில், சீற்றத்துடன் படமெடுத்து நின்றது. எந்த நேரமும் கொட்டிவிடும் நிலைமை.

பதறிய மன்னன் கத்தினான். “தம்பி, திரும்பாமல் சடக்கென முன்னே ஓடி வந்து விடு. கொடிய பாம்பு, கொத்தும் நிலையில் உன் பின்னால் இருக்கிறது.”

இளைஞன் பதறவே இல்லை. திரும்பிப் பார்த்தான்.எந்த தயக்கமும் இன்றி, அந்தக் கொடிய ராஷநாகத்தைத் தன் கையால் பிடித்துத் தூக்கி, சற்றுத் தொலைவில் வீசி எறிந்தான். பின் அலட்டிக் கொள்ளாமல் மரம் வெட்டத் துவங்கினான்.

ஆடிப் போய்விட்டான் மன்னன். ‘‘அந்தப் பாம்பு உன்னைத் தீண்டியிருந்தால் நீ இந்நேரம் செத்துப் போயிருப்பாய்.”

இளைஞன் சிரித்தான். “அரசே, இது போல் தினம் பல ஆபத்துகளை நான் சந்திக்கிறேன்.இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?” என்று கணீரென்று பதில் சொன்னான்.

ஆஹா, இவனல்லவா வீரன் என்று மகிழ்ந்த அரசன், அவனை அரசவைக்கு அழைத்துச் சென்று, ஏராளமான பரிசுகளையும், பொற்குவியல்களையும் அளித்து, அவனுக்கு ஒரு பங்களாவையும் அன்பளிப்பாக அளித்தான். ஏராளமான பணியாளர்கள் வேறு.

அவ்வளவுதான். இளைஞனின் நிலைமையே மாறியது.

அவன் கடவுளை மறந்தான்.கடுமையான உழைப்பை மறந்தான். ஏழைகளுக்கு உதவுவதையும் மறந்தான். நிறைய செல்வம் இருந்ததால் சொகுசுப் பேர் வழியாக வலம் வர ஆரம்பித்தான்.

சில மாதங்கள் சென்றன. மன்னன் அந்தப் பக்கம் வந்தான். அந்த இளைஞன் காலில் ஒரு கட்டுப் போட்டு உட்கார்ந்திருந்தான்.

‘‘என்னப்பா ஆச்சு?”

‘‘தோட்டத்தில் சுற்றி வந்தபோது, நெருஞ்சி முள் குத்திவிட்டது. அதுதான் மருத்துவர் சிகிச்சை தந்திருக்கிறார்.” என்று சொன்னான் அவன்.

அவன் முகத்தில் இது வரை இருந்த தெய்வீக களை காணாமல் போயிருந்தது. உழைக்காமல் உடம்பு பருத்து விகாரமாயிருந்தான்.

இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்?

கடவுள் பக்தியுடன், கடுமையாக உழைத்து, ஏழைகளுக்கு உதவிய வரை அவன் ஆரோக்கியமாக இருந்தான். பயங்கர பாம்பைக் கூடக் கையால் பிடித்துத் தூக்கியெறிந்தான். ஆனால் உழைக்காமலே காசு வந்தவுடன் அவனது பக்தி போய்விட்டது. உழைப்பு போய்விட்டது. உதவும் எண்ணமும் போய்விட்டது. நெருஞ்சி முள் கூட அவனை நோயாளியாக்கிவிட்டது.

வாழ்க்கையின் தத்துவம் மன்னனுக்குப் புரிந்தது. அந்த இளைஞனின் சொத்துகளையெல்லாம் பறிமுதல் செய்தான் மன்னன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக