பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

கீரை- சிறுகீரை

மருத்துவ குணம் கொண்ட சிறுகீரை.
சிறு கீரைக்குச் சில்லி, சாகினி, மேகநாதம் என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவர இயல் பெயர் (Amaranthus Polygonoides) இது தண்டுக் கீரை இனத்தைச் சேர்ந்தது என்றாலும் கீரைத்தண்டைப்போன்று உயர்ந்து வளராது. இது எந்தக் காலத்திலும் கிடைக்கும் கீரை. சீக்கிரமாக வளரும் தன்மையுடையது. கோடை காலத்திலும் பயிரிட ஏற்றது. இதைத் தினந்தோறும் சாப்பிட்டுவந்தால் ரத்த விருத்தி ஏற்படும். இக்கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புத்திக் கூர்மையும் நினைவாற்றலும் பெருகும்.

நூறு கிராம் சிறு கீரையில் புரதம் 2.8 கி, கொழுப்பு 0.3 கி, மாவுப் பொருள் 4.8 கி., கால்சியம் 251 மில்லி கிராம், பாஸ்பரஸ் 55 மில்லி கிராம், இரும்புச்சத்து 27.3 மில்லி கிராம் உள்ளன இதிலுள்ள சக்தி 33 கிலோ கலோரிகள்.

சிறு கீரை நமது உடலில சேர்ந்துள்ள நச்சுக்களை முறிக்கும் தன்மை கொண்டது. இன்றைய நச்சு மயமான நவீன வாழ்க்கையில் உணவு, உடை, தொழில், சுற்றுப் புறச் சூழல் என அனைத்துமே நச்சு நிறைந்துள்ளன. இதன் காரணமாக நமது உடலில் சேரும் நச்சுத் தன்மையை மாற்ற சிறு கீரை பெரிதும் உதவுகிறது. இக்கீரை சீரான குளிர்ச்சியைத் தருவதால், உடல் நோய்களுக்கு நாம் சாப்பிடும் மருந்துகளினால் ஏற்படும் உடல் எரிச்சல், சூடு ஆகியவற்றைத் தணிக்கும்.

சிறுகீரையின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து சமைத்து உண்பதால் உடல் வலிமைபெறும். முகம் பொலிவடையும். உடல் வனப்பை கூட்டும். பித்தம், வாத நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிர்க்கு மிகுந்த நன்மை தரும். எலும்புகள் வளர்ச்சியடைய உதவும். மூத்திரப் பை கோளாறுகளை நீக்கும். மது குடிப்பதால் உண்டாகும் குடல், மூத்திரப்பை சம்பந்தப்பட்ட உபாதைகளைக் குணமாக்கும். சோகையைப் போக்கும். காச நோயைப் போக்க உதவும். உடலில் ஏற்பட்ட புண்களை விரைவில் குணமடையச் செய்யும். வீக்கம் குறைய உதவும்.

சிறுகீரையைப் பருப்போடு சேர்த்து சமைத்து உண்டால் சிறு நீர் சீராக வெளியேறும். உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

வாரம் ஒருமுறை சிறுகீரையை உணவில் சேர்த்துவந்தால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம், கண்கட்டிகள் ஆகியவை குணமாகும். நீடித்த மலச்சிக்கல் தீர இக்கீரை அற்புதமான மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோய் குணமாகவும் இது உதவுகிறது. தொடர்ந்து சிறுகீரையை உட்கொண்டுவருவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதால் சிறுநீரிலும் ரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும்.

சிறு கீரையின் வேரை ஒரு பிடி அளவு எடுத்து நீர்விட்டுக் கஷாயமாக்கி கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயம், ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்து நெய் விட்டுத் தாளித்து சூப் தயாரித்து அருந்திவந்தால் சிறு நீரக நோய்கள் குணமாகும்.

சிறு கீரையில் கால்சியம் சத்து அதிகமிருப்பதால் எலும்பைப் பலப்படுத்தும் சக்தி இதற்கு அதிகம் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக