பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

புழுங்கல் அரிசிப் பிள்ளையார்

அது ஒரு வறட்சியான காலம். ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை இல்லாமல் வறண்டு போயிருந்தது. மக்களில் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தனர். மீதமுள்ளவர்கள் சிறிதளவே கிடைத்த வரகரிசியை உண்டனர். இந்நிலையில் ஒரு பெரியவர், தனக்கு உணவில்லாத நிலையிலும், அங்குள்ள வில்லிப்புத்தூர் விநாயகருக்கு நைவேத்தியம் பண்ண அரிசியில்லையே என்று வருந்தினார். இதற்காக ஒவ்வொருவரிடமும் அவர் யாசகம் கேட்ட பொழுது ""பொங்கித் தின்ன வரகரிசியே கிடைக்காதபோது பிள்ளையாருக்குச் சாப்பாடு கேட்குதோ?'' என்று சிலர் கேலி செய்தனர். இதனால் மனம் சோர்ந்த பெரியவர், பிள்ளையாரின் முன் வந்தார்; அவரை வலம் செய்து வணங்கி, கண்ணீர் சிந்தினார். உடனே பிள்ளையார் பெரியவருக்காக மனம் இரங்கி, இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சந்நிதியில் வைத்தருளினார். இதைக் கண்ணுற்ற பெரியவர், அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்து வந்து சமைத்து, பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்தார்; தானும் உண்டு மகிழ்ந்தார்! இதைப் பார்த்த அனைவரும், ""உனக்கு மட்டும் புழுங்கல் அரிசி சாதம்! மற்றவர்களுக்கெல்லாம் வரகரிசியா? இந்தப் பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி எங்கிருந்து வந்தது?'' என்று அவரைக் கேள்விகளால் துளைத்தனர். பிள்ளையாரின் திருவருள் திறத்தைப் போட்டு உடைக்க விரும்பாத அந்தப் பெரியவர், மௌனம் காத்தார். இதனால் வெகுண்ட பொதுமக்கள், கோயிலின் முன் மண்டபத்தில் அவரைக் கட்டி வைத்துத் துன்புறுத்தினர். பசி வந்திடப் பத்தும் பறந்திடுமன்றோ! ஆனால் பக்தர்களை பசுபதியின் மகன் கைவிடுவாரா? அன்றைய இரவே எல்லோரின் கனவிலும் விநாயகர் தோன்றி, தானே அரிசி வழங்கியதாகவும் அந்தப் பெரியவர் மீது தப்பில்லை என்றும் கூறியருளினார். உடனே ஊர் மக்கள் மனம் வருந்தினார்கள். அந்தப் பெரியவரை விடுவித்து மன்னிப்புக் கேட்டார்கள். அவரையே அன்றாடம் விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர். அவர் வம்சாவளியினரே இன்றும் பூஜை செய்கின்றனர். அன்றிலிருந்து இப்பிள்ளையார், "புழுங்கல் வாரிப் பிள்ளையார்' என்றும் "புழுங்கல் அரிசிப் பிள்ளையார்' என்றும் அழைக்கப்படுகிறார். ஆண்டாள் கோயிலுக்கு ஈசான்ய மூலையில் இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். புழுங்கல் அரிசிப் பிள்ளையார் கோயிலின் பிரகாரத்தில் நாகலிங்கம், ஆஞ்சநேயருடன் சேர்ந்த விநாயகர், முருகன், குருபகவான், விஷ்ணு துர்கை, நவகிரகம் என்று சந்நிதிகள் உள்ளன. புழுங்கல் அரிசிப் பிள்ளையாரை வணங்கி நம் மனப்புழுக்கங்களைப் போக்குவோம். உண்ண உணவும், இருக்க இடமும், உண்மை பக்தியும், பேரின்ப முக்தியும் பெறுவோம் வருக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக