பிரபலமான இடுகைகள்

திங்கள், 13 ஜூன், 2011

ஊற்றெடுக்கு​ம் நம்பிக்கை

வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்டு வாழ்ந்து, தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நூல்களையும் படித்தறிந்து வருகிறநம்பிக்கை முதல்வகை.
அறியாப் பருவம் தொட்டு அடிமேல் அடிவாங்கி, வாழ்க்கை தந்த பாடங்ளைப் படித்து, வாழ்வின் அனுபவங்களை வாங்கிச் செரித்து, புகழ் – இகழ், வெகுமானம் – அவமானம், மகிழ்ச்சி – துயரம் அனைத்தையும் கண்டறிந்து கடந்தும் நின்று, பட்டறிவில் வரும் நம்பிக்கை இரண்டாவது வகை.
கவியரசு கண்ணதாசன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். அனுபவங்களின் களஞ்சியமாய் வாழ்ந்தவர். அவரது திரைப்பாடல்களில் தனிப்பாடல்களில் – உரைநடைகளில் காணக்கிடைக்கும் வாழ்க்கை பற்றிய தெளிவுகளை இதற்குமுன் நமது நம்பிக்கை இதழ்களில் இரண்டொருமுறை பார்த்திருக்கிறோம்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பார்கள். தன் வாழ்வில் ஏற்பட்ட எத்தனையோ குழப்பங்களில் இருந்து கவியரசு கண்ணதாசன் மீன் பிடித்திருக்கிறாரோ இல்லையோ – தேனெடுத்திருக்கிறார்.
அனுபவித்தவற்றின் சாரத்தை, கண்ணீரின் ஈரத்தை – வாழ்வியல் ஞானமாய் வடித்துத் தந்தவர் அவர். தன் வாழ்வை அவர் திறந்த புத்தகமாய் வைத்ததே திசைகள் அனைத்தும் பாடம் படிக்கத்தான். திட்டமிடாமல் வாழ்ந்ததனாலேயே திட்டமிட்டு வாழச் சொல்லும் தகுதியை அவர் பெற்றார்.
“செல்லும் பயணத்தில் திட்டமில்லை என்று சொன்னால்
கல்லோடு முள்ளும் உன் காலை உறுத்திவிடும்!
நாளை அறிந்தவர்க்கும் நல்வழி கண்டவர்க்கும்
வேளை பிறப்பதுண்டு! விருந்தும் கிடைப்பதுண்டு!
கூத்தாட்டரங்கத்துக் கோமாளி போலிருந்தால்
பார்த்தால் சிரிப்பு வரும்! பசித்த பசி தீராது!” என்றார் கவியரசு கண்ணதாசன். இது அனுபவத்தின் தெளிவு. பட்டறிவின் விளைவு.
சரியான பின்பலமும், முறையான வழிகாட்டுதலும் இருந்தால் மட்டும்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்கிற எண்ணம், இன்றும் பலருக்கும் இருக்கிறது. தம்முடைய துறையில் துளியும் சிதறாத கவனத்துடன், முழு ஈடுபாடு கொண்டு திறம்பட உழைப்பவர்கள் ஜெயித்தே தீருவார்கள் என்பது கவியரசு கண்ணதாசனின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் நம்பிக்கை. அதையே அவர் உலகத்திற்கும் சொல்கிறார்.
“சத்தியத்தை உன்வீட்டுத் தலையணையில் வைத்திருந்தால்
தத்துவங்கள் காலடியில் தானாக வந்து நிற்கும்:
செய்வதைநீ செய்து திறமையுடன் வாழ்ந்திருந்தால்
தெய்வமெலாம் கைகட்டிச் சேவகமும் செய்திருக்கும்”
என்பது உழைக்கும் உள்ளங்களுக்குக் கவியரசர் உறுதிபடத் தருகிற உத்திரவாதம்.
இதற்கு, இன்னொரு கவிதையில், தன்னுடைய வாழ்விலிருந்தே உதாரணம் தருகிறார் அவர்.
“அறிவும் தெளிவும் ஆய்ந்திடும் பண்பும்
தணியாக கல்வித் தாகமும் விடுத்துக்
கற்றேன் சில நூல்: கற்றவைஎல்லாம்
மற்றவர்க்கெனவே வடித்து வைக்கின்றேன்.
பெற்றவை என்ன? போகும் புகழும்!” என்கிறார்.
அதனால்தான், வாழ்க்கை அவருக்கு விருதுகள் தந்தபோதும் வலிகள் தந்தபோதும், வாழ்க்கையை நிபந்தனையில்லாமல் நேசித்த மகத்தான கவிஞராய் விளங்கினார்.
இந்த உலகத்தை ஊன்றிக் கவனித்து மிக நுட்பமான பாடல் ஒன்றைக் கவியரசர் கற்றுக் கொள்கிறார். அதை நமக்கும் சொல்கிறார்.
ஆணவம் காரணமாகவே மனிதனுக்கு அழிவு வருகிறது. ஆணவத்தால் சிலரைக் குறைவாக எடைபோடுகிறார்கள். அவர்கள் ஜெயிக்கிறார்கள். ஆணவத்தால் சிலர் தம்மைத்தாமே அதிகமாக எடைபோடுகிறார்கள். அவர்கள் தோற்கிறார்கள்.
ஆணவமில்லாத இதயத்தில் அன்பு சுரக்கிறது. அன்பு பல வெற்றிகளை நிகழ்த்துகிறது. கவியரசர் குரலைக் கேளுங்கள்.
“வாழ்ந்து தாழ்ந்தோர் வரலாறு படித்தேன்
தாழ்ந்து வாழ்ந்தோர் சரித்திரம் பார்த்தேன்
ஏறும் போதே இறங்கிய சிலபேர்
ஏறாமலேயே இறந்தவர் சிலபேர்
ஏறிய இடத்தை இறுகப் பிடித்து
இறங்காமலேயே இருந்தவர் சிலபேர்
எத்தனை குதிரைகள்? எத்தனை வண்டிகள்?
எத்தனை யானைகள்? எத்தனை பூனைகள்?
இத்தனை பார்த்தவன் இன்னும் பார்க்கிறேன்.
மமதை என்பது மறையவே இல்லை
ஆணவம் என்பது அழியவே இல்லை
ஆணவம் ஒன்றேஆணுக்கு அவமென
காணும் போதே கனிவுறும் வாழ்க்கை:
சுத்த வீரனாம் தோல்வியைத் தழுவினான்.
கோழை என்றார்கள் குன்றத்தில் ஏறினான்”
இது தான் பார்த்த உலகம் பற்றிய கவிஞரின் சிந்தனைச் சாரம். தன்னுடைய எழுத்துக்களில் எத்தனையோ இடங்களில் மகாகவி பாரதியை ஒரு மகாகவியாய் கவியரசு கண்ணதாசன் சித்தரித்திருக்கிறார். ஆனால் ஒரு நம்பிக்கையாளனாய் பாரதியை அவர் அடையாளம் காட்டுகிற இடம் அற்புதமானது.
இன்று எத்தனையோ திறமையாளர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டாமல் காத்திருக்கிறார்கள். கேட்டால் உரிய வாய்ப்புகளோ போதிய அங்கீகாரமோ இல்லையென்று காரணம் சொல்கிறார்கள். தன்னை அங்கீகரிக்க ஆட்களில்லாத போது, அஞ்சாமல் படைப்புகளில் பாரதி ஈடுபட்டான். பிறகு அங்கீகாரம் தேடிவந்தது. இதை எல்லோருக்கும் தெரிந்த உவமையில் முதலில் சொல்கிறார் கண்ணதாசன்.
“பாட்டைக் கேட்டுப் பரவசப்பட்டு
கைதட்டுவோரைக் காணா நாளில்
தோன்றிய உணர்ச்சியைப் சுடராய் வடித்து
பிற்காலத்துப் பிள்ளைக்கு வைத்தான்
கும்பிடுவார் இன்றிக் கோயில் கட்டினான்:
கும்பிட இந்நாள் கூட்டம் திரண்டது!”
இதனை அடுத்துக் கவியரசு கண்ணதாசன் சொல்லும் உவமை நம்மை உலுக்கியெடுக்கிறது.
இருண்ட குகை ஒன்று அதற்குள் ஓவியன் ஒருவன் சிரமப்பட்டு ஓவியங்களை தீட்டுகிறான். யாரும் காணாமல் இருண்டிருக்கும் அந்தக் குகையில் வெளிச்சமில்லை என்று வருந்தவில்லை. பிற்காலத்தில் அந்த ஓவியம் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவி மக்கள் திரண்டு வர ஆரம்பித்தார்கள். சுற்றுலாத்துறை, அந்த ஓவியங்களை மக்கள் காண்பதற்காகவே விளக்குகள் அமைத்தது. விளக்கு வரும்வரை அந்த ஓவியன் காத்திருந்தால் அவன் தூரிகை ஈரம் படாமலேயே வாழ்வு முடிந்திருக்கும். பின்னாளில் புகழ் வருமா வராதா என்றெல்லாம் எதிர்பாராமல் வேலை செய்த ஓவியனாய் பாரதியை உருவகப்படுத்துகிறார் கவியரசு கண்ணதாசன்.
“ஒளி இலாக் குகையில் ஓவியம் தீட்டினான்
ஓவியமே இன்று ஒளிவிக்கானது”
இரண்டே வழிகளில ஓர் இமயக்கவிஞனின் வெற்றி ரகசியத்தை வெளிச்சமிட்டுக்காட்டி, உழைத்தால் தானாய் உயர்வு வரும் என்பதைக் கவியரசர் காட்டுகிறார்.
எல்லாவற்றையும் விட, இளைய தலைமுறையின் எதிர்காலம், இல்லங்களில் இருக்கும் சூழல்களைப் பொறுத்தே அமைகிறது என்பது அவந்தீர்மானமாய்த் தெரிவிக்கும் கருத்து.
குழந்தைகளை வளர்க்கும் போது கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.
“தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
நோயில்லாமல் காத்து வளர்த்தால்
நூறு வயது வரும்
நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ந்தால்
பாரில் உயர்ந்து விடும்.
பாலைப்போன்றபிள்ளை மனதில்
எதுவும் பதிந்து விடும்
பயந்து பயந்து வீட்டுக்குள் வைத்தால்
பயனின்றி மாறிவிடும்
அன்பை அதிகம் காட்டி வளர்த்தால்
அதுவும் அன்பாகும்
ஐந்து வயதில் கற்பவை எல்லாம்
ஆயுள் வரை வளரும்
பண்பாடுள்ள பிள்ளைகளைத்தான்
பாரதம் வேண்டுவது
பாரத நாட்டுத் தாய்மார்க்கெல்லாம்
வேறென்ன கூறுவது”
அப்படியானால் குழந்தை வளர்ப்பில் தந்தைக்குப் பங்கில்லையா? அதையும் சொல்கிறார் கவிஞர்.
“குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்
குடிக்கப் பழகிவிடும்
கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
குழந்தையும் கற்றுவிடும்
செல்லம் கொடுத்து வளர்ப்பதனாலே
தீமையும் வருவதுண்டு
தினமும் பிள்ளையை அடிப்பதனாலே
சொரணையும் போவதுண்டு:
தண்டவாளம் சரியாய் இருந்தால்
வண்டிக்கு ஆபத்தில்லை
தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
சேய்க்கொரு குற்றமில்லை”
இந்த வரிகள் ஒவ்வொன்றும் இல்லங்கள் தோறும் இடம்பெறவேண்டியவை.
இந்தப் பிரபஞ்சத்தைப் பரிசோதனைக் கூடமாகவும், தன் வாழ்வை பரிசோதனைக்குரியதாகவும் ஆக்கி, நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் வெல்லலாம் என்று தன் படைப்புகள் வழியே கானம்பாடும். வானம்பாடி கவியரசு கண்ணதாசன் நம்பிக்கையின் ஊற்றாய் நம்மை எப்போதும் குளிர்விக்கிறார். அவர் நிரந்தரமானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக