பிரபலமான இடுகைகள்

வியாழன், 23 ஜூன், 2011

சட்டம் உன் கையில்!

நூறு ரூபாய் பொருளுக்கே 'சேஃப்டி மெஷர்ஸ்’ என்ன இருக்கிறது என்று ஆராயும் பெற்றோர், 'வரதட்சணையாகக் கொடுக்கும் பல லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் புகுந்த வீட்டில் தன் பெண்ணுக்கு என்னவிதமான பாதுகாப்பு இருக்கிறது?' என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள். புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் பெண், எதிர்பாராத கணத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்து அனாதரவானால்?

எம்.இ., படித்த ஷர்மிளாவை... நூறு பவுன் நகை, ஐந்து லட்சம் பணம், வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனை சாமான்களும் கொடுத்து, அமெரிக்காவில் பணியாற்றும் சாஃப்ட்வேர் என்ஜினீயர் சுரேஷ§க்குத் திருமணம் செய்து வைத்தார்கள் படாடோபமாக. இரண்டாவது வாரத்திலேயே ஆசைக்கணவன் சுரேஷ் அமெரிக்கா சென்றுவிட, புதுமணக் கனவுகளை சுமந்தபடி மாமியார் வீட்டில் இருந்தாள்.

அடுத்தடுத்த நாட்களிலேயே யுத்த காண்டம் ஆரம்பமானது. 'உருப்படியா ஒரு ரசம் வைக்கத் தெரியல... நீயெல்லாம் படிச்சு என்னத்துக்கு ஆச்சு’ என்று ஆரம்பித்த வசவுகள், நாளுக்கு நாள் 'நாராச’ வார்த்தைகளாக மாறி, தீயாகச்சுட்டன. 'மூணு மாசத்துல அமெரிக்கா போயிடப் போறோமே’ என்று தேற்றிக் கொண்டாள்.

விசா கிடைத்து அமெரிக்கா கிளம்பியபோது, வெறும் ஐந்து பவுன் நகைகளை மட்டும் கையில் கொடுத்து, 'அங்கே இதை மட்டும் போட்டுக்கிட்டா போதும்...’ என்று மாமியார் சொல்ல, 'மற்ற நகைகளைப் பத்திரமாக வைத்திருப்பார்’ என்ற நம்பிக்கையோடும்...



'கணவனின் காதல் அணைப்பில், வாழ்க்கை ரம்மியமாகச் செல்லப் போகிறது' என்கிற ஆசைக் கனவோடும் அமெரிக்கா போய் இறங்கினாள். ஆனால், அந்த ஆசையில் மண் விழுந்தது.

தினம் ஒரு பார்ட்டி... குடி, கொண்டாட்டம் என்று திரிந்த சுரேஷ§க்கு, மனைவி ஷர்மிளா வெறும் அழகு பொம்மை என்றே ஆகிப்போனாள். மனைவியுடன் 'அன்பாக’ இருப்பதற்குக்கூட... அம்மாவின் ஆணையை எதிர்பார்க்கும் 'இன்டலக்சுவல் முட்டாள்' என்றிருக்கும் சுரேஷிடம், அழுது புலம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்தவள், தனிமையைப் போக்க 'மேற்படிப்புக்குச் செல்கிறேன்’ என்றாள். பல அடிதடிகளுக்குப் பின் இரக்கப்பட்டு, 'போய்த் தொலை’ என்ற ஆசீர்வாதம்(?) கிடைக்க... பெற்றோரின் செலவில் எம்.எஸ்., எம்.பி.ஏ. என்று இரண்டு பட்டங்கள் கிடைத்தன ஷர்மிளாவுக்கு.

இவையெல்லாம் சுரேஷின் ஈகோவை குத்திக் கிளற... 'ஒழுங்கா, பொண்ணா இருந்து குடும்பம் நடத்தத் துப்பில்ல... படிக்கிறாளாம் படிப்பு’ என்ற ஈட்டிமுனைத் தாக்குதல்கள் புகுந்த வீட்டிலிருந்து சீறிக்கொண்டு புறப்பட்டன. தினமும் இஷ்டத்துக்கு குடித்துவிட்டு, அடித்து உதைத்தான். உடலால், மனதால் நித்தமும் சித்ரவதையை அனுபவித்தவள், 'இனியும் பொறுக்க முடியாது' என்கிற நிலையில் போலீஸைத் தொடர்பு கொள்ள, அவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டான் போலீஸால்!

உடனடியாக மனைவியுடன் சென்னை திரும்பியவன், சில தினங்கள் தன் வீட்டில் ஜோடியாகத் தங்கிவிட்டு, பிறகு ஷர்மிளாவை பெற்றோரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அடுத்த சில தினங்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா திரும்பிய சுரேஷ், ஷர்மிளாவின் பாஸ்போர்ட், விசா, சர்டிஃபிகேட்ஸ் அனைத்தையும் அள்ளிச் சென்றுவிட்டான்! பலமுறை தொடர்பு கொண்டும், அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

சேர்த்து வைப்பதற்காக பெரியவர்கள் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நதி நீர் பிரச்னை போல் நீள... என்னிடம் வந்தாள் ஷர்மிளா. காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட... மாமனார், மாமியாரைக் கைது செய்ய சம்மன் அனுப்பப்பட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்த மகனை ஏர்போர்ட்டிலேயே வளைத்துப் பிடித்தது போலீஸ்.

'ஒட்டுமொத்தக் குடும்பமும் மெத்தப் படித்தவர்கள்' என்ற பெருமைக்குரிய அக்குடும்பத்தினர், 'அதிகம் படித்திருக்கிறாள்; சமைக்கத் தெரியவில்லை; மாமியாரை மதிப்பதில்லை' எனக் காரணங்களைச் சொன்னார்கள்.

கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அக்குடும்பத்தினருக்கு, ரத்தமும் சதையுமாக கண் முன்னே நடமாடும் மனிதர்களின் மனம் பற்றி அதிகம் தெரியாமல் போனது வேதனைதான். அவையெல்லாம் கவுன்சிலிங் மூலம் புரிய வைக்கப்படவே... புரிந்து, உணர்ந்து, திருந்தியது அந்தக் குடும்பம்! உடனடியாக ஷர்மிளாவின் அத்தனை சொத்துக்களும் திருப்பி ஒப்படைக்கப்பட, 'நான் ஆசைப்பட்டது இதற்காக அல்ல... நல்லதொரு வாழ்க்கைக்குத்தான்' என்று ஷர்மிளா பதில் தர... இன்று சுரேஷ§ம் ஷர்மிளாவும் ஆதர்ஷ தம்பதிகள்!

'அலைபாயுதே' சினிமா ஸ்டைலில் தாலி கட்டிக்கொண்டாள் அந்தப் பெண். 'சட்டப்பூர்வமாக அது செல்லாது' எனும் வாதத்தை முன் வைத்து, அவளுடைய வாழ்க்கையோடு விளையாடியது அவள் கைப்பிடித்தவனின் குடும்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக