பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 21 ஜூன், 2011

கண்ணுக்குள் ஒரு கள்வன் !

''என்னனு தெரியலை... கொஞ்ச நாளா தலைவலி இருந்துட்டே இருக்கு. கண்ணும் வலிக்குது. குமட்டல் வருது. ராத்திரி நேரத்துல பார்க்கற வெளிச்சத்தைச் சுத்தி ஒரு வட்டம் தெரியுது''...

''தலைவலினு டாக்டர்கிட்ட சொல்லி கண்ணாடி போட்டேன். ஆனா, தலைவலி தீர்ந்தபாடில்ல. கண்ணாடியை மாத்திப் பார்த்தேன். அதுவும் சரிப்படல. பக்கவாட்டுல இருக்கற ஒண்ணும் தெரியல. சில நேரத்தில பாக்கறதெல்லாம் மங்கலாத் தெரியுது''...





மேற்கண்ட புலம்பல்களை ஆங்காங்கே கேட்டு இருப்பீர்கள்தானே!

''இத்தகைய பிரச்னைகளுக்கு, 'க்ளாக்கோமா’ (Glaucoma)எனப்படும் 'கண்ணின் உள்நீர் அழுத்த நோய்'கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல்துறை மேலாளர், முனைவர் அ.போ. இருங்கோவேள்.

''கண்ணில் பூ, பவர் பிரச்னைகள் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன கண்ணின் உள்நீர் அழுத்தம்..?'' என்ற கேள்விக்கு விளக்கமாகவே பதில் தந்தார் இருங்கோவேள்.

''க்ளாக்கோமா என்பது... கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா’ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையி லிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது. இந்தியாவில் கிராமப் பகுதியில் 4.17 சதவிகித மக்களையும், நகரப்புறத்தில் 5.4 சதவிகித மக்களையும் இந்நோய் பாதித்திருப்பதாக தெரிவிக்கிறது சமீபத்தில் சங்கர நேத்ராலயாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம்'' என்ற இருங்கோவேள், இந்நோயின் குறிப்பிடத்தக்கத் தன்மையான மறைந்திருந்து தாக்கும் ஆபத்து பற்றித் தொடர்ந்தார்.



''ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரி யாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா’வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந் திருந்து தாக்கும் கள்வன்’ என்கிறார்கள். ஒரு கட்டத் தில், தீராத கண் பிரச்னை களால் மருத்துவரிடம் செல்லும்போது, அவர்களுக்கு 'க்ளாக்கோமா’ முற்றிய நிலைக்கு சென்றுவிடுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட வர்கள் இந்தியாவில் மட்டும் 11.2 மில்லியன் பேர். முற்றிய நிலைக்கு செல்லும் 'க்ளாக் கோமா’, பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்பது, அதி முக்கியத் தகவல்'' என்று அதிர்ச்சி தந்து முடித்தார்.

இந்நோயின் அறிகுறிகள், இதைக் கண்டறி வதற்கான பரிசோதனை பற்றிப் பேசிய சங்கர நேத்ராலயாவின் 'க்ளாக்கோமா’ துறையின் இயக்குநரும், இந்திய க்ளாக்கோமா சங்கத்தின் தலைவருமான டாக்டர் எல். விஜயா, ''50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந் தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா’வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா’ பாதிப்பை அறியலாம்'' என்ற டாக்டர்,

''ஒருவேளை க்ளாக்கோமா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போது அதிர்ச்சி அடையத் தேவை யில்லை. சொல்லப் போனால், தனக்கு இந்நோய் இருப்பதையே அறியாமல் கண்ணுக்குள் நோய் வளர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோ ரோடு ஒப்பிடும்போது, நோயை அறிந்து கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும்'' என்று நம்பிக்கை அளித்தார் விஜயா!

உங்கள் கண்ணுக்குள் இருக்கிறானா கள்வன்?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக