பிரபலமான இடுகைகள்

புதன், 15 ஜூன், 2011

குரல்வளத்தை முதலீடாக்கும் குஷியான பயிற்சி!

''மாற்றுத் திறனாளியான நான், இளநிலைக் கல்வி முடித்தவள். பள்ளி மற்றும் கல்லூரி மேடைகளில் எனது குரலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, இதை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தைத் திட்டமிட விரும்புகிறேன். குரல் உச்சரிப்பில், தொகுத்து வழங்கும் முறை போன்றவற்றில் பயிற்சி பெற அகில இந்திய வானொலியில் உதவி செய்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதுபற்றிய தகவல்களை அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்'' என்று கோரிக்கை வைத்திருக்கும் பேராவூரணியைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு, பதில் தருகிறார் திருச்சி, அகில இந்திய வானொலி நிலைய உதவி இயக்குநர்

வி.சீனிவாசன்.

''குரலை மூலதனமாக வைத்து வாழ்க்கையை நிர்மாணிக்க தற்போது ஏராளமான வழிகள் இருக்கின்றன. இதற்குக் குரல் இனிமை மட்டுமல்லாது... உச்சரிப்புத் தெளிவு, சமயோஜிதம், நிகழ்கால செய்திகளை அப்டேட் செய்து வைத்திருப்பது, மொழிபெயர்ப்புத் திறன், மற்றவர்களோடு உரையாடும் கலை என வேறு பல திறமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

புதிது புதிதாக முளைக்கும் எஃப்.எம். ரேடியோக்கள், டி.வி. சேனல்கள், ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையங்களுக்கான அறிவிப்பு பணிகள், விளம்பரங்கள், சீரியல்கள், திரைப்படங்கள் என பின்னணி குரல் தரும் பணி, ஈவன்ட் மேனேஜ்மென்ட் என பட்டைத் தீட்டிய குரலுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு சிவப்புக் கம்பளம் காத்திருக்கிறது.



நிறைய பேர் குரல் இனிமையைத் துருப்புச் சீட்டாக்கி இந்தத் துறைகளில் ஒன்றில் நுழைந்து விடுவார்கள். பிறகு, இதர திறமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். அடிப்படை பயிற்சினைப் பெற்று, அடுத்த படியில் கால் வைப்பதன் மூலம் ஸ்திரமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

இதற்காக அகில இந்திய வானொலி நிலையங்கள் 'வாணி’ என்கிற சான்றிதழ் பயிற்சியை அளிக்கின்றன. இந்தச் சான்றிதழை இதர பிற குரல் வேலை வாய்ப்புகளுக்கு பாஸ்போர்ட் என்று சொல்லலாம். இந்தச் சான்றிதழ் பயிற்சிக்கான அறிவிப்பு, உரிய காலத்தில் அந்தந்த வானொலி நிலையங்களால் அறிவிக்கப்படும். உங்கள் ஏரியா வானொலி நிலையத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். உரிய வயது வரம்போடு ஆண், பெண், மாற்றுத்திறனாளி எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரியாக இருப்பது நல்லது. பணிபுரிபவர், படிப்பவர், இல்லத்தரசிகள் என யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைப் பெற முடியும்.

குரல் தேர்வுக்குச் சிறிய அளவிலான 'ஆடிஷன்’ நடக்கும். இது குரல் இனிமையைப் பரிசோதிக்கும் அடிப்படைத் தேர்வு. பயிற்சிக் காலம்... 5 தினங்கள் மட்டுமே! உயிரோட்டத்துடன் பேசும் முறை, தெளிவான உச்சரிப்பு, பேச்சு மொழிக்கான இலக்கணங்கள் என குரலுக்கு மட்டுமல்லாது நிகழ்ச்சித் தயாரிப்புக்கான பயிற்சியும் இதில் உள்ளடங்கி இருக்கும். ஸ்கிரிப்ட் எழுதும் முறை, லைவ் புரோகிராம் சாமர்த்தியங்கள், 'ஆர்டிகுலேஷன்’ எனப்படும் பேசும் முறை, பல்வேறு தரப்பினருக்கும் புரியும்படி பேசுவது, பொறுப்பாக பேசுவது, வானொலிக்கான நன்னடத்தைகள், மொழிபெயர்ப்பு உத்திகள், செய்தி வாசிப்புப் பயிற்சி என பலவற்றையும் படிப்படியாக பயிற்சி பெற்று உரிய தேர்வுக்குப் பின் அகில இந்திய வானொலி டெல்லி தலைமையகத்திலிருந்து உங்களுக்கான 'வாணி’ சான்றிதழ் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிக்குப் பின்னர் வானொலியின் பகுதி நேர பணிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் முழுநேரப்பணியை பெறவும் முடியும். இந்தப் பயிற்சியோடு நிறைய படிப்பது, பிறமொழிகளை அறிந்து வைப்பது, திறமையான அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்களை உற்றுக் கவனிப்பது போன்றவையும் உங்கள் திறமையை மேலும் செதுக்கிக் கொள்ள உதவும்!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக