பிரபலமான இடுகைகள்

சனி, 25 ஜூன், 2011

சிறுவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சையா?

அகமதாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்யப்பட்டது. இது மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சின்ன வயதில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் காரணமாக, எதிர்பாராத பல பக்க விளைவுகள் உண்டாகலாம் என்று மருத்துவர்களில் ஒரு பிரிவினர் எதிர்க்க... இன்னொரு பிரிவினரோ ஆதரவு தெரிவிக்கின்றனர்!



உடல் பருமனுக்கான பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி என இரண்டு வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்யும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் இது குறித்துப் பேசினோம்.

''அந்த சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி அறியும் முன்பாக, இப்போது நடைமுறையில் உடல் பருமனுக்கு இருக்கும் சிகிச்சைகளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். முன்பு, அதிக எடைகொண்டவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மட்டும்தான் சிறந்த தீர்வு. அதனால் 45 - 50 பி.எம்.ஐ. உள்ளவர்கள் அதாவது 150 - 200 கிலோ எடை இருந்தவர்கள் மட்டுமே, இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சையில் இரைப்பையின் அளவைக் குறைத்துவிட்டு, உணவு செல்லும் குடலின் அளவும் பாதியாகக் குறைக்கப்படும். அதனால், சாப்பிடும் அளவும், உணவில் இருந்து ஊட்டச்சத்து கிரகிக்கும் அளவும் குறைவாக இருக்கும்.

இந்தக் குறைபாட்டை நீக்கிய புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி சிகிச்சையில் இரைப்பை அளவு மட்டுமே குறைக்கப்படும். பொதுவாக இரைப்பையின் கொள்ளளவு 500 மி.லிட்டரில் இருந்து 1 லிட்டராக இருக்கும். இந்த அறுவை சிகிச்சையில் இரைப்பையின் 75 சதவிகிதத்தை வெட்டி எடுத்துவிடுவோம். மேலும், பசியைத் தூண்டும் க்ரெலின் என்ற சுரப்பியையும் அகற்றிவிடுவோம். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவை சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும்.

சிறுவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்பதை தகுந்த பரிசோதனை செய்து உறுதிப்படுத்திய பின்னரே முடிவு செய்ய முடியும். பொதுவாக 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பேபிபேட் என்ற கொழுப்பு இருக்கும். இது டீன்ஏஜ் வயதில் கரைந்துவிடும். எனவே, டீன் ஏஜ் காலம் வரை இத்தகைய உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சைகளைத் தவிர்ப்பது நல்லது. சின்ன வயதில் உடல் பருமன் கூடினால், ஹார்மோன் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. ஹார்மோன் பிரச்னையால் எலும்பு, தசைகள் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த நிலை தொடர்ந்தால், உயிருக்கே ஆபத்து என்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே, சிறுவர்களுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சையை செய்யலாம்.

ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி சிகிச்சை மூலமாகச் செய்யப்படும் உடல் எடை குறைப்பு என்பது நிரந்தரம் இல்லை. ஏனென்றால், இரைப்பை வளர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 100 கிலோ இருந்தவர் சிகிச்சைக்குப் பிறகு 60 கிலோ ஆகிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில ஆண்டுகள் கழிந்த பிறகு, 70 கிலோ என்று உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், மீண்டும் பழையபடி 100 கிலோவைத் தொட்டுவிடுவார் என்று பயப்படத் தேவை இல்லை.

பைபாஸ் அறுவைசிகிச்சை நிரந்தர எடை குறைப்புக்கு வழிவகுப்பதுடன், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்பார்கள். ஆனால், இந்த அறுவை சிகிச்சை மூலம் 85 சதவிகிதம் பேருக்குத் தீர்வு ஏற்பட்டு உள்ளது என்பதும் உண்மை. சர்க்கரை நோய் முழுமையாகக் குணமாகவில்லை என்றாலும்கூட, அதனால் ஏற்படும் சிறுநீரகம், கண் பிரச்னைகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. இதனால் வாழ்க்கைமுறை மேம்படுகிறது.

ஒரு நோயாளிக்கு பைபாஸ்தான் செய்ய வேண்டும் அல்லது ஸ்லீவ் முறையில்தான் செய்ய வேண்டும் என்பதை, முழுப் பரிசோதனை செய்த பின்னர், டாக்டர்கள் முடிவு எடுப்பார்கள்.

முன்பு லேப்ராஸ்கோப்பியில் 5-6 துளைகள் போடப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும். இப்போது, புதிதாக ஒரு துளை லேப்ராஸ்கோபி மூலம் இந்த இரண்டு வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்ய முடியும். இதற்காக தொப்புளில் துளையிடப்பட்டு, கருவிகளை உள்ளே செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், ஆபரேஷன் நடந்ததற்கான அடையாளமே இருக்காது. வலி, ரத்த இழப்பு குறைவு என்பதால், ஓய்வில் இருந்து மீண்டு வருவதும் விரைவாக நடைபெறுகிறது. தழும்பு தெரியாது என்பதால், இள வயதினர் அதிக அளவில் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகின்ற னர். ஆனால், இந்த இரண்டு சிகிச்சைகளையும் செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குறைவாக இருப்பதுதான், இப்போதைய பிரச்னை!'' என்றார்.

அளவான உணவு, போதுமான உறக்கம், மிதமான உடற்பயிற்சி போன்றவற்றில் உறுதியாக இருந்தால், உடல் பருமன் வராமலே தடுக்க முடியும். அப்படியே செய்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக