பிரபலமான இடுகைகள்

சனி, 30 ஏப்ரல், 2011

இலங்கைப் போர்க் குற்றங்களு​ம் மனித உரிமை மீறல்களும் : ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பட்டியல்

விடுதலைப்புலிகள் உடனான இறுதிகட்டப் போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
அரசின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாகவே அப்பாவி மக்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை, ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என மதிப்பிட்டுள்ளது.
இலங்கைப் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் பட்டியலிடும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் 214 பக்க ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்பட்டது. (முழுமையான அறிக்கையை தரவிறக்கம் செய்ய கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது).
இந்த அறிக்கையில் இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் போர்க் குற்றங்கள் முழுமையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

நிபுணர் குழு நிறைவாக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா., வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு இந்த விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:
* இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிக் கட்டபோரில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் போர்க் குற்றங்களைச் செய்தன.
* போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.


* இலங்கை அரசின் படைகளும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அரசின் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகள்...
* இலங்கை ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளது.
* மருத்துவமனைகள் மற்றும் மனித நேய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
* இலங்கை அரசு மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது.
* போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறப்பட்டுள்ளது.
* போர் வலயத்துக்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்.
புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்...
* பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியது.
* தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தது.
* பொதுமக்கள் நிலைகளுக்கு அருகில் ஆயுதங்களைப் பயன்படுத்தியது.
* பலவந்தமாக சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டது; தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்.
நிபுணர் குழு பரிந்துரைகள்...
* இலங்கைப் போர்க் குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* சர்வதேச விசாரணைகள் கொள்கை அடிப்படையில் அல்லாமல், கட்டயாமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
* போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தன்னிச்சையான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசும், ஐ.நா.வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மேற்கு நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள், வருமானங்கள் போன்றவற்றை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் போய்ச் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, பொதுமக்கள் பலியாகாமல் தடுக்கும் வகையில், சர்வதேச நாடுகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று ஐ.நா. நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை முழுமையாக தரவிறக்கம் செய்ய... http://new.vikatan.com/news/images/Srilanka.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக