பிரபலமான இடுகைகள்

சனி, 30 ஏப்ரல், 2011

''எல்லோர்க்​கும் பெய்யட்டும் மழை!''

சமீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.
'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’
இந்தக் கேள்விக்கு, 'நேர்மை’ என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.
'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு’ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...’ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!’
நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.
அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!’ என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.
இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்’ என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது’ என்றாள்.
உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.
அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்’ என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.
இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.
இது போதிக்கும் பாடம் என்ன? நேர்மையைக் கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.
திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன் தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!
நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை’ என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.
அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.
ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!
என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத் தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?
நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.
எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?
எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!
அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.
'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.’
ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!
பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!
மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!
__._,_.___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக