பிரபலமான இடுகைகள்

சனி, 23 ஏப்ரல், 2011

நவீன லேப்ரோஸ்கோ​பி சிகிச்சை

அறுவை சிகிச்சை என்றாலே, ஏகப்பட்ட தழும்புகளைச் சுமந்தது அந்தக் காலம். இப்போது தழும்பே இல்லாத அறுவை சிகிச்சை வந்தாச்சு. ஆம், ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறிமுகத்துக்குப் பின் அறுவைச் சிகிச்சைகளில் தழும்புகளே தெரிவது இல்லை.
இந்த ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையை தமிழகத்தில் அறிமுகம் செய்த சென்னை

குளோபல் மருத்துவமனையின் பேரியாட்டிக் மற்றும் ஜிஐ லேப்ராஸ்கோபி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் தனக்குமாரிடம் பேசினோம்.
''ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் குடல்வால், பித்தப்பை, சிறுநீரகம், கர்ப்பப்பை, குடல், குடல் ஏற்றம், மண்ணீரல் போன்ற பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்ற லேப்ரோஸ்கோபி போன்று இல்லாமல், இந்த முறையில் தொப்புள் வழியாக செய்யப்படுவதால், அறுவை சிகிச்சை செய்த தழும்பு தெரிய வாய்ப்பு இல்லை. இதனால் நோயாளிகள் குறிப்பாக பெண்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்பி ஏற்கின்றனர்.
பழைய லேப்ரோஸ்கோபி சிகிச்சையில், தொப்புளில் துவாரம் இடுவார்கள். வெளிச்சத்துக்காக பல்புடன் கூடிய கருவியை செலுத்திவிட்டு, பக்கத்தில் அரை செ.மீ. அல்லது 1 செ.மீ. அளவுக்கு சில துவாரங்கள் போடுவார்கள். அது வழியாக அறுவைச் சிகிச்சை கருவிகள் செலுத்தப்படும். பின்னர், கார்பன் டை ஆக்சைட் வாயுவைக்கொண்டு வயிற்றை நிரப்பி, அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுப்பது, தையல் போடுவது, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்துவது எல்லாமே அந்த துவாரங்கள் வழியாகவே செய்யப்படும். அறுவை சிகிச்சை முடிந்ததும், வயிற்றில் நிரப்பப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடை வெளியே எடுத்துவிட்டு, சிறிய துவாரங்கள் மூடப்படும். வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதைவிட, இது சிறந்தது என்றாலும் தழும்புகள் தெரியும்.
ஆனால், ஒரு துளை லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் தழும்பு தெரியாது. மேலும், அதிகப்படியான ரத்த இழப்பும் தவிர்க்கப்படுகிறது. இந்த சிகிச்சையில், தொப்புளில் ஒரு துவாரம் போட்டு லைட் மற்றும் கேமராவுடன் இணைக்கப்பட்ட டெலஸ்கோப் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கான கருவிகள் எல்லாமே ஒன்றாக உடலுக்குள் செலுத்தப்படும் என்பதால் வேறு எந்தப் பகுதியிலும் தழும்பு ஏற்படாது.
இந்த சிகிச்சை உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க லேப் பேண்ட், லேப் ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி மற்றும் லேப் கேஸ்ட்ரிக் பைபாஸ் போன்ற மூன்று வகையான சிகிச்சைகள் இருக்கின்றன.

லேப் பேண்ட் அறுவை சிகிச்சையில் இரைப்பையின் மேல் பகுதியில் வட்ட வடிவிலான எலாஸ்டிக் பேண்ட் ஒன்று போடப்படும். இது சாப்பிட்ட உணவு நேராக குடலுக்குச் செல்லாமல் தடுத்து, போதுமான உணவு சாப்பிட்டதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த அறுவை சிகிச்சையை 30 முதல் 60 நிமிடங்களில் செய்துவிடுவோம்.
இரண்டாவதான ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி அறுவை சிகிச்சையில், இரைப்பையின் அளவை உணவுக் குழாய் அளவுக்குச் செய்துவிடுவோம். பொதுவாக இரைப்பை 60 முதல் 100 மி.லி. அளவு உணவை எடுக்கும். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் அளவு 30 மி.லி. முதல் 50 மி.லி. வரையே இருக்கும். மேலும் வயிற்றில் பசியை உண்டாக்கும் க்ரிலின் என்ற ஹார்மோன் சுரப்பையும் அகற்றிவிடுவோம். இதனால் பசி குறைந்துவிடும். இந்த அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் உடலின் அதிகப்படியான எடை 60 முதல் 80 சதவிகிதம் குறைந்துவிடும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் 80 சதவிகிதம் வரை குணம் அடையும். கொழுப்புப் பிரச்னைகளும் 85 சதவிகிதம் சரியாகிவிடும். கால் மூட்டு வலி, தூங்கும்போது மூச்சுவிடுவதில் உள்ள பிரச்னைகளும் சரியாகிவிடும்.
அடுத்த கேஸ்ட்ரிக் பைபாஸ் சிகிச்சையில், இரைப்பை மற்றும் குடலையும் ஷார்ட் சர்க்யூட் செய்துவிடுவோம். உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துகள் இவர்களுக்குக் கிடைக்காது என்பதால், வாழ்நாள் முழுவதும் இவர்கள் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அழகுக்காக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றும் லிப்போசக்ஷன் அறுவை சிகிச்சையும் இந்த முறையில் செய்யப்படுகிறது. மார்பு, இடுப்பு, வயிறு, தொடை, பின்புறம், முகம் போன்ற உடலின் பல பகுதிகளில் இருந்தும் அளவுக்கு அதிகமான கொழுப்பு அகற்றப்படுகிறது. எங்கே கொழுப்பை எடுக்க வேண்டுமோ, அங்கு மட்டும் சிறு துளையிட்டு, தோல் மற்றும் தசைக்கு இடையே உள்ள அதிகப்படியான கொழுப்பு உறிஞ்சு பம்ப் மூலம் எடுக்கப்படுகிறது. ஐந்து கிலோ வரையிலான கொழுப்பை இந்த சிகிச்சை மூலம் வெளியே எடுக்க முடியும். புற நோயாளிகளாகவே இந்த சிகிச்சையைச் செய்துகொள்ள முடியும்.
பொதுவாக ஒரு துளை லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில், வயிற்றுக்குள் அறுக்கப்பட்ட இடத்தில் தையல் போடுவது இல்லை. ஒரே ஓர் இயந்திரக் கையை மட்டும் பயன்படுத்துவதால் தையலுக்குப் பதிலாக கிளிப் போடுவார்கள். ஆனால், தையல் போட்டால்தான், விரைவில் குணம் கிடைக்கும், மேலும் குடல் ஒட்டும் பிரச்னையும் இருக்காது. அதனால் நாங்கள் ஒரு துளை லேப்ராஸ்கோப்பியில், ஒரே ஒரு கருவியைக்கொண்டே தைப்பது மற்றும் முடிச்சுப் போடுவதை முதன்முறையாகச் செய்து உள்ளோம். இது சர்வதேச மருத்துவ ஆய்வு அறிக்கையிலும் வெளியாகி இருக்கிறது...'' என்கிறார்.
குறைந்த ரத்த இழப்பு, மிகக் குறைந்த வலி, விரைவான குணம்... வேறு என்ன வேண்டும் நோயாளிகளுக்கு?
__._,_.___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக