பிரபலமான இடுகைகள்

புதன், 20 ஏப்ரல், 2011

ப்ளஸ் டூ - வுக்குப் பிறகு..!?

'ப்ளஸ் டூ தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும்? இன்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? அதுவும் நல்ல கல்லூரியில் கிடைக்குமா? ஒருவேளை இன்ஜினீயரிங் கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? கல்லூரியில் ராகிங் கொடுமையை எப்படி எதிர்கொள்வது? ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் வெளி வரும் பட்டதாரிகள் இடையே எனது வேலை வாய்ப்புத் திறனை நான் எவ்வாறு மெருகேற்றிக் கொள்வது?’ - இப்படி யும் இதைத் தாண்டியும் ப்ளஸ் டூ தேர்வு எழுதி, முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்கள் அலை அடிக்கும்!
இன்னொரு பக்கம்... பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி, ஜாலி ஹோலி கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்ட மாகக் கழிக்கத் திட்டமிட்டு இருப்பார்கள் பலர். இந்த இரண்டு வித மனநிலை யும் ஆரோக்கியமானது அல்ல!
கொஞ்சம் கவனமாகத் திட்டமிட்டால், ப்ளஸ் டூ -வுக்குப் பிறகான உங்கள் எதிர்காலத்துக்கு நீங்களே சிவப்புக் கம்பளம் விரித்துக்கொள்ளலாம். அதற்கேற்ப உங்களுக்கு இங்கே வழிகாட்டுகிறார்கள் பல்துறை நிபுணர்கள்!

சரி... மனசுக்குப் பிடித்த பாடப் பிரிவில் விருப்பமான ஒரு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. இனி, கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். படபடப்பு, ஆர்வம், பயம், பரவசம்... 'இனி, நான் சின்னப் பிள்ளை இல்லை. காலேஜ் ஸ்டூடன்ட்டாக்கும்!’ என்று முதல் ஆண்டின் சில மாதங்களைக் கழிப்பீர்கள். அதிலும் சீனியர்களின் ராகிங்கில் சிக்கநேர்ந் தால், கல்லூரி வாழ்க்கையின் அவஸ்தை, அத்தியாயமாகப் பதிவாகும் கலக்கமும் உங்களிடம் இருக்கலாம். அதன் பிறகும், விடுதி வாசம், ஆரோக்கியம் இல்லாத உணவு கள், வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமைத் துயர் போன்ற மனரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்வது என வழி நடத்துகிறார் மனநல மருத்துவர் தேவகி.
''ஆபத்து இல்லாத ராகிங் மூலம் நட்பு பாராட்டுவதுதான் பெரும்பாலான சீனியர்களின் நோக்கமாக இருக்கும். தரையில் நீச்சலடி, பாடு, ஆடு என்று சொன்னால், தயங்காமல் செய்யலாம். கூச்சம்,சங்கோஜம் ஆகியவற்றை அதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில், உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்யச்சொல்லும் போது... தயங்காமல், 'ஸாரி... இதில் எனக்கு விருப்பம் இல்லை’ என்று உறுதியாகமறுத்து விடுங்கள். அதையும் மீறி உங்களைக் கட்டாயப்படுத்தினால், பேராசிரியரிடமோ, கல்லூரி முதல்வரிடமோ புகார் செய்யலாம். இது போன்ற எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவை... துணிச்சல். அந்தத் துணிச்சலை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் தேவகி.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் மாணவர்களுக்கோ, தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்தில் படிக்க நேரும் மாணவர்களுக்கோ, ஆரம்பத்தில் சில சங்கடங்கள் இருக்கலாம். நகரம் என்பது வேற்றுக் கிரகம் அல்ல! கிராமத்தைக் காட்டிலும் அடர்த்தியாக மக்கள் நிறைந்த ஒரு பெரிய பகுதி. கிராமத்தைவிட, நகரத் தில் தொழில்நுட்ப வசதிகள் அதிகம். அவ்வளவே! ஆங்கிலம் என்பது தமிழைப் போல ஒரு மொழி. அதை மிகச் சுலபமாகக் கற்கலாம். ஆங்கிலம் என்பது அறிவுஅல்ல. அது ஒரு மொழிப் புலமை! ஆகவே, ஆங்கில அறிவு என்று நாம் சொல்வது தவறு. ஆங்கிலப் புலமை என்பதே சரி. சித்திரமும் கைப் பழக்கம்... ஆங்கிலமும் நாப் பழக்கம்!
''கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். நவநாகரிக உடைகள் அணியும் நகரத்து மாணவர்களைப் பார்த்து, குற்றவுணர்ச்சியால் குறுகுறுக்கத் தேவை இல்லை. வசதிக்கு ஏற்ப ஆடை அணிவதுதான் அவசியம். நாம் அணியும் உடை எந்த விதத்திலும் நமது கண்ணியத் தைக் குலைப்பதாக இருக்கக் கூடாது.'ஹோம் சிக்’ பாதிப்பு கடந்து, ஹாஸ்டல் பாதுகாப்பு குறித்த சந்தேகமும் அவர்கள் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். யாருமற்ற உலகில் தனித்துவிடப்பட்டதுபோல இருக்கும். தனது எண்ண ஓட்டத்துடன் பொருந்திப் போகும் நபர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வது, நகரைச் சுற்றிப் பார்த்து ஊரைப் பரிச்சயப்படுத்திக்கொள்வது என்று புதிய சூழலை உங்களுக்கு நெருக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

ஆரம்ப நாட்களில் உடலுக்கு செட் ஆகாத உணவுப் பழக்கம், சின்ன வசிப்பிடத்தைப் பலருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பிரச்னைகள் இரண்டொரு வாரங்களில் சரியாகிவிடும். அதனால், பயம் தேவை இல்லை. சிலர் வீட்டில் ஆறு தோசை சாப்பிடுவார்கள். ஆனால், விடுதியில் மூன்று தோசைக்கு மேல் சாப்பிட்டால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சத்தில், கால் வயிறும் அரை வயிறுமாகச் சாப்பிடுவார்கள். உணவு விஷயத்தில் மட்டும் எங்கேயும் எப்போதும் கூச்சம் வேண்டாம்.
கல்லூரிப் பருவத்தில் பல சமயம் நீங்களே தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். இரண்டாம் ஆண்டு விருப்பப் பாடம் துவங்கி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்று பல விஷயங்களைப்பற்றி தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது பல சமயங்களில் மன உளைச்சலை உண்டாக்கி, தூக்கம் கெடுத்து, குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படி முடிவெடுக்க முடியாத சமயங்களில் தனிமை தவிர்த்து, பெற்றோர் அல்லது விவரம் தெரிந்த சீனியர், பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள். நாளை நீங்களே ஒரு வழிகாட்டி ஆகலாம்!'' என்று நன்னம்பிக்கை முனை சுட்டுகிறார் தேவகி.



கவுன்சிலிங் கவனம்!
''பெரும்பாலும் பள்ளிகளில் ப்ளஸ் ஒன் வகுப்பில் நான்கு மாதங்கள் மட்டுமே ப்ளஸ் ஒன் பாடத் திட்டத்தை நடத்துகிறார்கள். பள்ளிக்கு நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்பதற்காக, ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் ஒன் சமயமே நடத்தத் தொடங்கிவிடுவதால், பொறியியல் படிப்பில் சேருபவர்கள், கணிதத் திலும் இன்ஜினீயரிங் கிராஃபிக்ஸ் பாடத்திலும் அடிப்படை தெரியாமல் கஷ்டப் படுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இதற்கான பாடத் திட்டம் இருக்கிறது. பொறியியல் ஆர்வம் உள்ள மாணவர்கள், கல்லூரியில் சேருவதற்குள், கிடைக்கும் சில மாத இடைவெளியில்இவற்றைப் படிப்பது நல்லது. இது எனது சின்சியர் அட்வைஸ்!'' என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர். பொறியியல் கவுன்சிலிங்கின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்...
''தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் 41 விதமான பொறியியல் படிப்புகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு அதிகம் பேர் தேர்ந்தெடுத்த எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் துறை, அநேகமாக அனைத்துக் கல்லூரிகளிலும் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருப்பது, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு 2,20,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். விண்ணப்பிப்பவர்களின் மதிப்பெண்கள் உண்மை தானா என்பதை கல்வித் துறையோடு ஊர்ஜிதப்படுத்தும் பணி முதலில் நடக்கும். கடந்த ஆண்டு 38 நாட்கள் கவுன்சிலிங் நடந்தது. இந்த ஆண்டு கவுன்சிலிங் மே 16 வாக்கில் தொடங்கலாம். 10.30 மணிக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது என்றால், ஒரு மணி நேரம் முன்னதாகவே மாணவர்கள் வந்துவிட வேண்டும். அதிகாலையிலேயே பல்கலைக்கழக வளாக வங்கிக் கிளை திறந்திருக்கும். அங்கு எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் என்றால் 2,500-ம் மற்றவர்கள் 5,000-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு மாணவர் மதுரையில் இருந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஏற்கெனவே எந்தக் கல்லூரி யில், என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருப்பார். ஆனால், நாம் நினைத்த கல்லூரியில், குறைந்த கட்டணத்தில், நினைத்த பாடப் பிரிவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அந்தச் சமயம், நம் முன்னுரிமை கல்லூரிக்கா அல்லது பாடப் பிரிவுக்கா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் இருக்கும் கல்லூரியில்தான் இடம் இருக்கிறது என்பதற்காக, விருப்பம் இல்லாத பாடப் பிரிவைத் தேர்ந்து எடுப்பது உங்கள் கேரியருக்கு நல்லது அல்ல. விருப்பமான பாடம் குறைந்தபட்சத் தூரத்தில், தரமான கல்லூரியில் எங்கே இருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அப்படியான தகவல் திரட்ட முடியாதவர்கள், கவுன்சிலிங் அரங்கில் இருக்கும் ஆலோசகர்களின் வழி காட்டுதலுக்கு ஏற்ப நடந்துகொள்ளலாம்.
ஒரு கல்லூரியின் தரத்தை நிர்ணயிப்பது, அதன் ரிசல்ட் மட்டும் அல்ல... அங்கு உள்ள பேராசிரியர்கள், லேப், நூலகம், கணினி, உள்கட்டமைப்பு வசதிகள் என எல்லாவற்றையும் பார்த்துதான் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்!'' என்கிறார் மன்னர் ஜவஹர்!



வேலைவாய்ப்புத் தகுதிகள்!
இத்தனை போராட்டங்களும் எதற்காக?
கௌரவமான ஒரு வேலையைக் கைக்கொள்ளும் இலக்கை எட்டுவதற்காகத்தானே! கல்லூரிப் பருவத்திலேயே தங்களின்வேலை வாய்ப்புத் திறனை அதிகரித்துக்கொள்வது எப்படி? ''கல்லூரியில் விருப்பப் பாடங்களைத் தேர்ந்து எடுப்பதில் உள்ள நிதானமும், உத்வேகமும் வேலை குறித்து முடிவு செய்வதிலும் வேண்டும்!'' என்கிறார் 'கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர்’ நிறுவன இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, வேலை வாய்ப்புச் சந்தையில் தன்னை முன்னிறுத்த, சில சிறப்புத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள என்ன செய்வது?
''பல கல்லூரிகளில் இறுதி ஆண்டுசமயம் தான் மாணவர்களிடம் வேலைவாய்ப்புத் தகுதியை உருவாக்க முனைகிறார்கள். இந்தப் பழக்கம் இரண்டு வாரங்களில் வரன் பார்த்து திருமணம் முடிப்பதற்குச் சமமானது. 25 வருடங்கள் வளர்ந்த ஒருவன், வெறும் 20 நாட்களில் முழுமையாகத் தன்னை திருத்தி வடிவமைத்துக்கொள்ள இயலாது. அப்படியே மாறினாலும், அது செயற்கையான, தற்காலிகமான மாற்றமாகத்தான் இருக்கும். அதனால், கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்தே எதிர்காலத்துக்கு ஏற்பத் தன்னை மெருகேற்றிக்கொள்வதில், மாணவர் கள் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் உலகத்தையே கட்டி ஆளலாம் என்று இதுவரை கற்பனைகோட்டை கட்டி இருந்தால், அதற்கு இப்போதே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். நேர்முகத் தேர்வுகளில் ஆங்கிலத்தைவிட, டெக்னிக்கல் சம்பந்தமான அறிவையும், இண்டஸ்ட்ரி தொடர்பான விழிப்பு உணர்வையும்தான் சோதிக்கிறார் கள்.
இறுதி ஆண்டில் புராஜெக்ட்களைத் தங்கள் கைப்படச் செய்து முடிப்பது, கேம்பஸ் இன்டர்வியூக்களில் உங்களுக்குக் கூடுதல் மதிப்பை அளிக்கும். விலைக்கு வாங்கும் புராஜெக்ட்கள் உங்களின் இயல்பான திறமையைக்கூடமறைத்து, எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கும். பொதுவாக, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும்போது, வெளியுலக அனுபவம், விளையாட்டு, நாடகங்கள் என படிப்பைத் தவிர்த்த பிற துறை ஆர்வங்க ளையும் கணக்கில்கொள்வார்கள். ஆல் தி பெஸ்ட்!'' என்று வாழ்த்துகிறார் கார்த்திகேயன்.
கல்லூரி மாணவர்களை வளாகத் தேர்வின் மூலம் தேர்ந் தெடுக்கும் சி.டி.எஸ். நிறுவனத்தின் ப்ளேஸ்மென்ட் செல்லில் இருக்கும் பாலசுப்ரமணிய ராஜாவின் டிப்ஸ்....
''பொதுவாக, எந்த செமஸ்டரிலும் அரியர் இல்லாமல் இருப்பது நலம். தகுதியுடைய மாணவர்கள் அதிக அளவில் இருந்தால், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் சராசரிகளும் கணக்கில்கொள்ளப்படும். மதிப்பெண்கள் தவிர, விளையாட்டு, என்.எஸ்.எஸ் போன்ற தனித் திறமைத் தகுதிகளுக்கும் அங்கீகாரம் உண்டு. தனித் திறமைகொண்டவர்கள் மற்றவர்களிடம் எளிதில் கலந்து பழகுவார்கள் என்ற லாஜிக்தான் இதற்குக் காரணம். உங்களது 'ரெஸ்யூம்’களில் உங்களின் ப்ளஸ் பாயின்ட் என்று நீங்கள் எவற்றை எல்லாம் நினைக்கிறீர்களோ, அவற்றை எல்லாம் தயங்காமல் குறிப்பிடுங்கள். நேர்முகத் தேர்வில் முகம் பார்த்து சாதுர்யமாகப் பதில் சொல்லும் திறனும் உங்கள் தகுதியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்!''
__._,_.___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக