பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மகாகஞ்சன் முல்லா நஸ்ருதீன்

முல்லா நஸ்ருதீன் அவரது கிராமத்தில் மகாகஞ்சன் என்று பெயர் பெற்றிருந்தார்.

எல்லோரும் முல்லா நஸ்ருதீன் மகாகஞ்சன் என்று சொல்லச் சொல்ல அவருக்கு கர்வமாக இருந்தது. அந்த மிதப்பிலேயே அவர் இருந்து வந்தார். நாளடைவில் மக்கள் பக்கத்து ஊர்க் கஞ்சனைப் பற்றி பேச ஆரம்பித்தனர். அவன்தான் மாபெரும் கஞ்சன் என்று பேச ஆரம்பித்தனர்.

இதைக் கேட்டதும் நஸ்ருதீனுக்கு பொறாமை ஏற்பட்டது. அவரும் அந்த கஞ்சனை பார்க்க விரும்பினார். அவன் எப்படி தன்னை விட பெரிய கஞ்சனாக இருப்பான் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அவரை சந்திக்கச் செல்லும்போது வெறும் கையில் போகலாமா? ஒரு காகிதத்தில் ஆப்பிள் பழத்தை வரைந்து ஒரு பையினுள் போட்டு எடுத்துச் சென்றார்.

அந்த கஞ்சனின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். கஞ்சனின் மகனான சிறுவன் கதவைத் திறந்தான். யாரென்று கேட்டதும் தான் பக்கத்து ஊரில்தான் இருப்பதாகவும், அவனது தந்தையை பார்த்துச் செல்ல வந்ததாகவும் நஸ்ருதீன் கூறினார்.

உடனே வீட்டின் உள்ளே அழைத்துச் சென்ற அந்த சிறுவன், என் தந்தை வெளியில் சென்றுள்ளார், திரும்பி வர நேரமாகும். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்றான். ஒன்றுமில்லை, நான் இன்னொரு நாள் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன நஸ்ருதீன் தான் கொண்டு வந்திருந்த பரிசான ஆப்பிள் பழத்தின் படத்தை எடுத்துக் கொடுத்தார்.

வந்துதான் வந்தீர்கள், வெறுங்கையில் அனுப்ப மாட்டேன், என் தந்தையின் சார்பில் இந்த பரிசை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னான் அந்த சிறுவன். பையை திறங்கள் என்று சொன்ன அவன் கைகளால் காற்றில் மாம்பழ உருவத்தை செய்து அந்த பையினுள் போட்டான்.

வீட்டை விட்டு வெளியேறிய நஸ்ருதீன் சிந்தனையில் ஆழ்ந்தார். ஊர் மக்கள் சொன்னது சரிதான் போலிருக்கிறது. நாமாவது ஒரு காகிதம், வண்ணம் செலவு செய்து பரிசை எடுத்துச் சென்றோம். இந்த சிறுவன் வெறும் காற்றில் மாம்பழத்தை உருவாக்கித் தந்துவிட்டானே. இவனே இப்படி என்றால் இவனது தந்தை எப்படி இருப்பான். இவ்வாறு அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அங்கே, மாபெருங்கஞ்சன் வீட்டிற்கு திரும்பினான். நடந்தது என்ன என்று கேட்டறிந்தான். பின்னர் அந்த சிறுவனின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்ட அவன் கோபத்தில் கத்தினான். “ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீ என் சொத்தையே அழிச்சிருவடா. கொடுத்துதான் கொடுத்த இவ்வளவு பெரிய மாம்பழத்தை யார் கொடுக்கச் சொன்னது? சின்னதாக கொடுத்திருக்கலாம் இல்லையா?“

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக