பிரபலமான இடுகைகள்

புதன், 17 ஆகஸ்ட், 2011

அரை விநாடியில் இதயத்தின் படம்!

இதயத் துடிப்பு பொதுவாக நிமிடத்துக்கு 60 முதல் 100 ஆக இருக்கும். வயது, பாலினத்துக்கு ஏற்ப இது மாறுபடலாம் என்றாலும், விநாடிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை இதயம் துடிக்கிறது. அப்படித் துடிக்கும் இதயத்தை, துல்லியமாகப் படம் எடுப்பது கொஞ்சம் சிக்கலானது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் இந்த விநாடிக்கும் குறைந்த காலத்துக்குள், முழு இதயத்தையும் படம் எடுக்க இயலாது. இந்த படத்தைக்கொண்டே இதய ரத்தக்


குழாயில் உள்ள பிரச்னைகளை டாக்டர்கள் கண்டறிவார்கள். புதிதாக 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் முழு இதயத்தின் அதி துள்ளியமான படத்தை அரை வினாடியில் கொடுத்துவிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னை அப்போலோ மருத்துவமனையில் மட்டுமே இந்தக் கருவி உள்ளது.

இந்தக் கருவியின் செயல்பாடு குறித்து அப்போலோ ஹார்ட் சென்டரின் மூத்த ரேடியாலஜிஸ்ட் கன்சல்டன்ட் டாக்டர் ரோச்சிதா வெங்கட்ரமணன் சொல்கிறார்...

''இப்போது உபயோகத்தில் இருக்கும், நவீன உடல் உறுப்புகளைப் படம் பிடிக்கும் கருவிகளில், 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் என்பது மிகவும் மேம்பட்டது. இதில், உங்களின் தலை முதல் கால் வரை ஒரு நிமிடத்துக்குள் ஸ்கேன் செய்து படம் எடுத்துவிட முடியும். இதன் மூலம், இதயம் மற்றும் மூளையில் உள்ள பிரச்னைகளை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம். இந்த ஸ்கேன் கருவியில், எக்ஸ் ரே கதிர் வீச்சைப் பயன்படுத்தி படம் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் குறுக்குவெட்டாக (கிராஸ் செக்ஷனல் இமேஜ்) 3டி படம் எடுக்க முடியும்.



64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் கருவி மூலம் 3.2 செ.மீ. பரப்புக்குத்தான் படம் எடுக்க முடியும். ஆனால், இதயத்தின் பரப்போ 13 செ.மீ. எனவே துண்டு துண்டாக எடுக்கும் படத்தை கம்ப்யூட்டரில் ஒன்று சேர்த்துப் பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நிதானமாகப் பார்த்தே, பிரச்னையின் தீவிரத்தை டாக்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், மிகத் துல்லியமான தகவலைக் கஷ்டப்பட்டு சேகரிக்க வேண்டும்.

ஆனால், 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனில் அந்தக் குறைபாடு முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் 16 செ.மீ. பரப்புக்கு ஸ்கேன் செய்து படம் எடுக்க முடியும். அதுவும் அரை விநாடியில் முழு இதயத்தின் படமும் கம்ப்யூட்டர் திரையில் தெரிந்துவிடும். அரை விநாடியில் படம் எடுத்து முடித்துவிடுவதால், கதிர் வீச்சின் நேரமும் குறைகிறது. இதன் மூலம் இதயத் தசைகளுக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக நீடித்துள்ளது? என்பதைக்கூடக் கண்டறிந்துவிட முடியும். மேலும், எதிர்காலத்தில் ரத்தக் குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். அதாவது, ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்கு கொழுப்பு படிந்திருந்தால்கூட, கண்டுபிடித்துவிட முடியும். மிகவும் எளிமையானது; வலி இல்லாதது; விரைவானது.

ஸ்கேன் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், எதுவும் சாப்பிடக் கூடாது. ஆனால், அதிக அளவு தண்ணீர், ஜூஸ் குடிக்கலாம். ஸ்கேன் செய்ய வேண்டிய நபருக்கு இன்ஜெக்ஷன் மூலம் மருந்து செலுத்தப்படும். ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் தவிர்த்து, மற்ற மருந்து மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். ஸ்கேன் செய்ய வேண்டிய நபரை 320 சி.டி. ஸ்கேன் கருவியின் குகைபோன்ற அமைப்புக்குள் படுக்கவைத்து, தேவைப்படும் பகுதியின் வரைபடத்தை எடுத்துவிடுவோம்.

சாதாரணமாக மூச்சுவிடும் நேரத்திலும் படம் பிடிப்பதில் பிரச்னை எதுவும் இல்லை என்பதால், எந்த வயதினரும் ஸ்கேன் செய்துகொள்ளலாம். மார்பில் வலி உள்ளவர்கள் மட்டுமல்ல, பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, அதிக எடை, புகைபிடிக்கும் பழக்கம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம் உள்ளவர்களும் டாக்டர்களின் பரிந்துரைப்படி, இந்த ஸ்கேன் செய்து பார்த்து தங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறியலாம். அப்படி ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்தாலோ... அல்லது முழுவதும் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலோ... டாக்டரிடம் சிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம்!'' என்றார்.

இதுவும் நல்ல செய்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக