பிரபலமான இடுகைகள்

வியாழன், 7 ஜூலை, 2011

ஆரோக்கியமான கண்கள்தான் அழகான கண்கள்

'கல்வி கண் போன்றது’ என்கிறோம். ஆனால், கருவளையங்கள், உப்பிய கீழ் கண் இமைகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் 'கண் கல்வி’ பற்றி அறிந்து வைத்திருக்கிறோமா! கண்களின் அழகைக் கெடுக்கும் பிரச்னைகளையும், அதிலிருந்து மீள்வதெப்படி என்பதையும் தெரிந்து கொள்வதுதான் மிக முக்கியம். கண்களை கவர்ச்சியாக வைத்துக் கொள்வது, மேக்கப் போட்டுக் கொள்வது என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான்!



கண்களின் கீழ் இமைகள் உப்பும்போது?



வயது கூடும்போது கண்களுக்குக் கீழே இருக்கும் இமையே ஒரு பை போல உப்பலாகிவிடும். கண்களுக்கு அடியில், தேவையில்லாத நீர் சேர்வதுதான் முக்கிய காரணம். அவ்வளவாக வயதாகாதவர்களுக்கும், இளம் வயதினருக்கும் தூக்கமின்மை காரணமாக இப்பாதிப்பு வரும். வழக்கத்தைவிட சற்றே உயரமான தலையணையைப் பயன்படுத்தித் தூங்குவது பலன் தரும். 'முதுகு வலி உள்ளவர்கள், தலையணையே வைத்துப் படுக்கக்கூடாது' என்று டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர்கள் என்றால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தெடுத்த உருளைக்கிழங்கு பத்தையை, மூடிய கண்களின் மீது வைத்தபடி சுமார் பத்து நிமிடம் படுத்திருப்பது பலன் தரும். உப்பு கலந்த சுடுநீரில் நனைக்கப்பட்ட இரண்டு பஞ்சு உருண்டைகளால் கண்களின் கீழ் இமைகளில் ஒத்தடம் கொடுப்பதும் பலன் கொடுக்கும்.

கருவளையத்திலிருந்து விடுதலை பெற..!

கருவளையம், பரம்பரை சார்ந்தது. வெயிலில் அலைவது, தூக்கமின்மை, மாதவிடாய், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் பெண்களின் முகம் வெளுத்துப் போய் காட்சியளிக்கும். இந்த சமயங்களில் கருவளையம் 'ஹைலைட்’டாகி பளீரென்று தெரியும். இரவு தூங்கப் போவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், பாதி டீஸ்பூன் தேனை கலந்து கருவளையத்தின் மீது தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிக்கொண்டு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கருவளையத்தின் மீது தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை நன்கு கழுவிவிட்டு, கற்கண்டு அளவுக்கு அதை பொடிப்பொடியாக நறுக்கி, பேண்டேஜ் துணியில் வைத்து கருவளையத்தின் மீது வைத்து, சுமார் அரை மணி நேரம் படுத்து எழுந்து முகத்தைக் கழுவினாலும் கருவளையம் மறைந்துவிடும்.

முகச்சுருக்கங்கள் மறைய!

இளம்பெண்கள் சிலருக்கு கண்களை அடுத்திருக்கும் பக்கவாட்டுப் பகுதிகளில் சுருக்கங்கள் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் 'க்ரோ’ஸ் ஃபீட்' (சிக்ஷீஷீஷ்’s யீமீமீt) என்பார்கள். அந்தச் சுருக்கங்கள் காக்கையின் காலடி தடத்தைப் போல இருக்கும் என்பதால் இந்தப் பெயர். இதிலிருந்து விடுதலை பெற, தினமும் காலையில் எழுந்ததும் சில்லென்ற தண்ணீரில் நனைக்கப்பட்ட ஒரு துணியை கண்களின் மீது வைத்துக் கொண்டு சிறிதுநேரம் படுத்திருக்க வேண்டும். பிறகு, சுருக்கங்கள் நீளும் வாட்டத்திலேயே அதை நீவி விடுவது நல்ல பலன் தரும் (மேலும் கீழுமாக நீவி விடக்கூடாது). விருப்பப்பட்டால், 'ஆன்ட்டி ரிங்கில் க்ரிம்' பயன்படுத்தலாம்.

கண்களுக்கு புத்துணர்ச்சியூட்ட!

வெகுநேரம் கண்விழித்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு, கண்கள் சோர்ந்துவிடும். இவர்கள் குளிர்ந்த நீரால் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொள்வது, ஓரளவுக்கு பலன் கிடைக்கும்.

கண்கள் அழகாக மட்டுமல்ல, தெளிவான பார்வையோடும் இருப்பதற்கு, சில பயிற்சிகள் அவசியம். 'கண் களுக்கு கூடவா எக்ஸர்சைஸ்?’ என்று ஆச்சர்யப்படாமல் இந்தப் பயிற்சிகளை செய்து பாருங்கள். நாள் முழுவ தும் துறுதுறுவென்று சுறுசுறுப்பான உயிரோட்டம் கொண்ட கண்களுக்கு நான் கியாரன்டி!

கண்களை மூடிக்கொண்டு, தோள்களை அசைக்காமல் தலையை மட்டும் இடது வலமாக இருபது முறை சுழற்றுங்கள். இதேபோல வலது இடமாகவும் இருபது முறை செய்யுங்கள்.

கண்களை மூடியபடி சந்தோஷமான நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கியிருங்கள். பிறகு, மெல்ல கண்களைத் திறந்து தூரத்தில் இருக்கும் மரம், செடி, கட்டடம் போன்றவற்றைப் பாருங்கள். பிறகு, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பாருங்கள். இப்படி மாறி மாறி தூரமாக இருக்கும் பொருளையும் அருகில் இருக்கும் பொருளையும் பாருங்கள்.

தலையை நேராக வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக கொஞ்ச நேரம் நில்லுங்கள். பிறகு, தலையை கொஞ்சமும் அசைக்காமல் விழிகளை மட்டுமே உருட்டி தலைக்கு நேர் மேலே இருக்கும் வானத்தைப் பாருங்கள். பிறகு தலையை அசைக்காமல் உங்கள் பார்வையை கால்களுக்கு அடியில் இருக்கும் பூமியை நோக்கி திருப்புங்கள். அதேபோல தலையை அசைக்காமல் வலதுபுறத்தில் தூரமாக இருக்கும் ஏதோ ஒரு மரம் அல்லது கட்டடத்தைப் பாருங்கள். அதன் பின் இடது பக்கமாக இருக்கும் ஏதாவது ஒரு மரம் அல்லது செடியைப் பாருங்கள். இந்த பயிற்சியை எத்தனை முறை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யுங்கள்.

மையும், மஸ்காராவும் பூசும் கண்கள் அல்ல... ஆரோக்கியமான கண்கள்தான் அழகான கண்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக