பிரபலமான இடுகைகள்

வியாழன், 7 ஜூலை, 2011

சிறகை விரி...சிகரம் தொடு...

'ஆண்களுக்கு போட்டியாக, களம் இறங் கினார் பெண்' என்றுதான் பெரும்பாலும் ஆச்சர்ய செய்திகள் வரும். இவரோ... 'ஆண் களுக்கும் முன் உதாரணம்' எனப்படுபவர் என்றால், ஆச்சர்யம்தானே!

ஆம்! சாதனை விளையாட்டுகளில் ஒன்றான 'ஸ்கை டைவிங்'கில், இந்தியாவின் முதல் வீரர், ரேச்சல் தாமஸ் எனும் 57 வயதான பெண். கடந்த 23 ஆண்டுகளாக வானிலிருந்து குதித்து, காற்றில் மிதந்து சாகசங்கள் நிகழ்த்தியிருப்பவரை, டெல்லியில் சந்தித்தோம்.





''பறவைகள், பட்டங்கள், மேகக்கூட்டம் என சிறு வயதிலிருந்தே வானம் பார்க்கும் நேரம் எனக்குப் பிடித்தமானது''- வெகு ரசனையுடனேயே பேச்சையும் ஆரம்பித்தார் ரேச்சல்.

''அந்தப் பிரியத்தால்தான் 'பைலட்’ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், 17 வயதிலேயே மணம் முடித்து விட்டனர். கணவர், ராணுவத்தில் 'பாரா செய்லர்' எனும் 'ஸ்கை டைவர்’ பணியில் இருந்தார். அதைப் பற்றி அத்தனை சந்தோஷப்பட்டு, அடிக்கடி அவரிடம் பேசுவேன். 'நான் பறப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டால் போதுமா... நீயும் பறக்க வேண்டாமா..?’ என்று அவர் கேட்டபோது, குழந்தையென குதூகலித்தது என் மனம். 1979-ல் அவர் ஆக்ராவில் பணியாற்றியபோது 'ஸ்கை டைவர்'களின் பயிற்சியாளராக இருந்த ஃபிரெஞ்சு பெண்மணி, பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்க... நானும் அதில் சேர்ந்தேன்.

பறந்து கொண்டே இருக்கும் ஏர்கிராஃப்ட் அல்லது போர் விமானங்களில் இருந்து கீழே குதிக்கவேண்டும். குறிப்பிட்ட வினாடி களுக்குள் பாராசூட்டை நாம் திறக்கா விட்டால்... உயிருக்கு உத்தரவாதமில்லை. தவறுதலாக பாராசூட் ஏர்கிராஃப்டில் பட்டுவிட்டாலும் ஆபத்துதான். எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில்தான், முதன் முறையாக 1,500 அடி உயர வானத்திலிருந்து குதித்தேன்!'' என்று சிரித்த ரேச்சல் தொடர்ந்தார்.

''அடுத்த கட்டமான 'ஃப்ரீ ஃபால்ஸ்’ எனும் வானத்தில் டைவ் செய்து குதிப்பதையும் விரைவாகக் கற்றுக் கொண்டேன். 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதிக்கும் இந்த அனுபவம், நம்ப முடியாதது. கிட்டத்தட்ட ஒரு பறவைக்குச் சமமாக மாறிவிடுவோம்.

ஒரு பெண்ணாக இந்த சாகசங்களை நான் செய்ததில் பலருக்கும் அளவிடாத ஆச்சர்யம். குறிப்பாக, ஆஸ்திரேலிய ஸ்கை டைவிங் கூட்டமைப்பின் தலைவர், எனக்கு ஸ்பான்சர்களுடன் அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அடுத்தக்கட்ட பயிற்சி கிடைக்க மிகவும் உதவினார். இல்லை எனில், மிகவும் காஸ்ட்லியான இந்த விளையாட்டை இவ்வளவு தூரம் கற்றிருக்க முடியாது. ஒரு பாராசூட்டின் விலை... ரூபாய் மூன்று லட்சம். பாதுகாப்பு கண்ணாடி 12 ஆயிரம் ரூபாய். ஒரு முறை குதிக்கச் செலவாகும் தொகை ரூபாய் 15 ஆயிரம். அப்போதையை பிரதமர் ராஜீவ் காந்தி, நான் பணியாற்றிய ரயில்வே இங்கிருந்தெல்லாம்கூட உதவிகள் கிடைத்தன'' என்று நினைவு கூர்ந்தவர்,


''மகன் டாம்னிக் மற்றும் மகள் ஆனி தாமஸ் இருவருமே... 'என் அம்மா எனக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுப்பவளாக இருக்க வேண்டும்' என்று எண்ணாமல், ஒரு சாதனையாளராக வேண்டும் என்று விரும்பியதும் என் சிறகுகள் அகல விரிந்ததற்கு முக்கிய காரணம்!'' எனச் சொன்னபோது பூரிப்பில் கண்களில் நீர் பூக்க நின்றார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ரஷ்யா, துருக்கி, ஜோர்டான் மற்றும் சீனா உட்பட 15 நாடுகளில் சுமார் 670 முறை ஸ்கை டைவிங் செய்து சாதனை புரிந்திருக்கும் ஒரே இந்தியரான ரேச்சலின் சாகச சாதனைகளுக்காக ரயில் அமைச்சக விருது, பத்மபூஷண் விருது, அர்ஜுனா விருது (இதை பெற்ற முதல் பெண்மணி) உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

''பேரக் குழந்தைகள் எடுத்துவிட்ட பின்பும், ஸ்கை டைவிங் செய்த ஒரே பாட்டியும் நானாகத்தான் இருக்கும்!'' என்று சிரித்த ரேச்சல், அடுத்து சொன்ன விஷயம் சோகமயம். அது-

''சொந்த மாநிலமான கேரளாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாக்களில் ஸ்கை டைவிங் செய்து வேடிக்கை காட்டச் செல்வேன். அப்படி ஒரு விழாவில் 2003-ல் குதித்த போது ஏற்பட்ட விபத்தில் இடது கால் துண்டாகி உயிர் பிழைத்தேன். தற்போது 13 ஸ்க்ரூக்களுடன் இணைக்கப்பட்ட காலின் மூலம் என்னால் நடக்க முடிந்தாலும், டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி ஸ்கை டைவிங் செய்வதை நிறுத்திவிட்டேன். அதனால் என்ன... புதியவர்களை உற்சாகப்படுத்துவதை நான் என்றும் நிறுத்தப் போவதில்லை''

- தன் மாணவர்கள் வழியாக அவர் மனம் இன்னும் பறந்துகொண்டுதான் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக