பிரபலமான இடுகைகள்

புதன், 6 ஜூலை, 2011

வாழ்க்கையை நொறுக்கிய விதி... நம்பிக்கையை இழக்காத ப்ரீத்தி !

'வாழ்க்கையின் சந்தோஷங்களுக்கு என்றுமே நிரந்தர உத்தரவாதம் இல்லை' என்பதற்கு வாழும் சாட்சி... ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். 'எந்த இக்கட்டான நிலையிலும் வாழ்க்கையை தொடர வேண்டும்’ என்பதற்கும் அவரே சாட்சி!

அப்பாவின் அமெரிக்க வேலை காரணமாக 'ஓஹோ' என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் லேசாக தடுக்கி விழுந்து, கழுத்துக்கு கீழே எந்த இயக்கமும் இன்றி 'வீல் சேரே கதி' என முடக்கிப் போட்டாலும், அதில் அமர்ந்தபடியே தன்னம்பிக்கையோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் ப்ரீத்தி - பலருக்கும் பாடமாக!





'சென்னை, தி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் ரிசர்ச்’ மாணவர் களுக்கு, தன்னம்பிக்கை வகுப்பெடுக்க சமீபத்தில் வந்திருந்தார் ப்ரீத்தி, தன் வீல் சேரில் அமர்ந்தபடி! அவரின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அந்த எம்பிஏ மாணவர்களின் நெஞ்சங்களில்! அந்தச் சூழலில் அவருடன் பேசினோம்!

''சொந்த ஊர், சென்னைதான். அப்பா ஸ்ரீனிவாசன், சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்தார். அம்மா விஜயலஷ்மி, ஹோம் மேக்கர். திருமணமாகி ஒன்பது வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை நான். அதனால, அவ்வளவு கொண்டாடி வளர்த்தாங்க. நீச்சல்ல மாநில அளவுல ரெண்டாவது பரிசு, எல்லாரும் ஆச்சர்யப்படற அளவுக்கு எட்டு வயசுலயே 'ஸ்டேட் வுமன்ஸ் கிரிக்கெட் டீம்' ப்ளேயர்னு பெருமையோட வளர்ந்தேன்'' எனும் ப்ரீத்தி, படிப்பிலும் பயங்கர ஷார்ப்.

''அப்பாவோட டிரான்ஸ்ஃபர்களால இந்தியாவுல ஒன்பது மாநகரங்கள், மூணு வெளிநாடுகள்னு படிப்பும் இடம் மாறிச்சு. அமெரிக்காவுல இருக்கற பிரபல பல்கலைக்கழகங்கள்ல படிக்கறதுக்கு தேர்வாகியும், 'ஊர்லயே படிக்கறேன்!’னு பாட்டி வீட்டுக்கு வந்துட்டேன். அஞ்சு வருஷ இன்டக்ரேட்டட் கோர்ஸான எம்.பி.ஏ., சேர்ந்தேன். தேவதைக் கதையில வர்ற மாதிரி ஹேப்பியா போயிட்டு இருந்தது என் நாட்கள். 'வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமானதா?!’னு அப்போ ருசிச்ச நான், சில மாதங்களுக்குள்ள 'வாழ்க்கை இவ்வளவு நரகமானதா?!’னு வெறுக்கற நிலமைக்கு ஆளானேன்''

- பதிமூன்று வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்தப் பெருந்துயரை சொல்வதற்கு முன் சிறு மௌனம் ப்ரீத்தியிடம்.

''ஃபர்ஸ்ட் இயர் செமஸ்டர் லீவ்ல பாண்டிச்சேரிக்கு டூர் கூட்டிட்டுப் போனாங்க. காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பீச்ல இடுப்பளவு தண்ணியில நின்னு சந்தோஷமா விளையாடிட்டு இருந்தோம். திடீர்னு கால் தடுக்கி குப்புற விழுந்துட்டேன். நீந்தறதுக்காக கைகள முன்னால நீட்டினா, முடியல. உடம்புல கரன்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஒரு உணர்வு. கழுத்துக்கு கீழ அசைக்க முடியல. அலை என்னை அடிச்சுட்டுப் போறதைப் பார்த்து ஓடி வந்து ஃபிரெண்ட்ஸ் தூக்க, எனக்கு என்ன ஆகியிருக்குங்கறத ஓரளவுக்கு யூகிச்சிட்டேன். 'உடம்பை அசைக்காம ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போங்க’னு அலறினேன்'' என்பவருக்கு நிகழ்ந்திருந்தது, தன் வாழ்க்கையையே முடக்கும் அளவுக்கான ஒரு பெருவிபத்து என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.



''ஏடாகூடமா விழுந்ததால கழுத்து எலும்பு உடைஞ்சு, முதுகெலும்புத் தொடர் நரம்பை கிழிச்சிருக்கு. ஒட்டுமொத்த உடம்பும் செயல்படாமா போயிட, எங்கப்பாவும், அம்மாவும் நடை பிணமாயிட்டாங்க. சிகாகோவுல 'ஸ்பைனல் கார்டு'க்கென ஸ்பெஷலா இருக்கற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகும்... முன்னேற்றம் இல்ல. குளிக்க வெச்சு, சாப்பாடு ஊட்டினு மறுபடியும் என்னை குழந்தையா வளர்க்கற கொடுமையை அப்பா, அம்மாவுக்குத் தந்தேன்'' எனும் ப்ரீத்தியின் குடும்பம், பின் திருவண்ணாமலையில் தஞ்சமடைந்திருக்கிறது.

''நாங்க, விசிறி சாமியாரோட பக்தர்கள். எங்கப்பா யு.எஸ். வேலையை விட்டுட்டு, திருவண்ணாமலைக்கே கூட்டிட்டு வந்துட்டார். இடையில, ஹார்ட் அட்டாக்ல அப்பா இறந்துட்டார். எங்களுக்கு இருந்த ஒரே வெளிச்சமும் எங்களை விட்டுப் போயிடுச்சு'' - தான் சொல்வதைக் கேட்டு உடைந்து அழும் அம்மாவை ஆறுதல்படுத்தித் தொடர்ந்தார் ப்ரீத்தி...

''அப்பாவோட அக்கவுன்ட் எந்த பேங்க்ல இருக்குனுகூட தெரியாம முழிச்சோம். மலை மாதிரி சேர்த்து வெச்சிருந்த பணம் எல்லாம் கடுகு மாதிரி காணாமப் போச்சு. உலகம் இத்தனை கொடூரமானதுனு பல மனக்காயங்களோடதான் புரிஞ்சுக்கிட்டோம். மீளவே முடியாத பெருஞ்சோகத்துல அம்மா மூழ்கிட... 'இனி நாமதான் மீட்கணும்’னு நானே மனசுக்குள்ள மந்திரமா ஓதிக்கிட்டேன். 'என் பொண்ணு அப்படி வருவா, இப்படி வருவா’னு என்னை வளர்த்தெடுத்த எங்கம்மாவுக்கு, வீல் சேர்லயே என் வாழ்க்கை அடங்கறதைப் பார்க்கற கொடுமையை கொடுக்கக் கூடாதுனு முடிவெடுத்தேன்.''

- தேடுபவர்களுக்கு திசைகள் தெரியும்தானே?

''ஒரு கட்டத்துல, வாயாலயே பிரஸ் பிடிச்சி ஓவியங்கள தீட்டக் கத்துக்கிட்டேன். அடுத்து ஏதாச்சும் வேலை செய்தே ஆகணும்கற தேடல்ல இறங்கினேன். நாம பேசறதை ஒலியா வாங்கி கம்ப்யூட்டர்ல எழுத்தா டைப் பண்ற சாஃப்ட்வேர் இருக்கறது தெரிஞ்சுது. அதைப் பயன்படுத்தி ஆங்கில பத்திரிகைகளுக்கு 'ஆன்லைன் எடிட்டிங்' செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். பத்திரிகையில என் எழுத்துக்களைப் பார்க்கும்போது நானும் எங்கம்மாவும் ரொம்ப வருஷங்கள் கழிச்சு சில சந்தோஷமான தருணங்களை உணர்ந்தோம்.இப்பவும் அந்த வேலை தொடர்ந்துட்டு இருக்கு. ஆனா, குறைவான சம்பளமே கிடைக்குது. எனக்கு நம்பிக்கையிருக்கு... என் தகுதிக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்!'' என்ற ப்ரீத்தி,

''அப்பாவோட நண்பர்தான், 'தி இன்டர் நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் ரிசர்ச்’ நிறுவனத்தோட டைரக்டர் அச்சுத் குமார். அவர்தான் தன்னோட மாணவர்களுக்கு நான் வகுப்பெடுக்கணும்னு கூட்டிட்டு வந்தார். முன்ன பின்ன தெரியாத இந்தப் பசங்க என்னைக் கொண்டாடின விதத்தையும், எனக்காக வருந்தின, பிரார்த்திச்ச அவங்க கண்களையும் பார்த்தப்போ... மறுபடியும் நினைக்கத் தோணுது... வாழ்க்கை அழகானது!''

- கண்கள் மின்னுகிறது ப்ரீத்திக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக