பிரபலமான இடுகைகள்

வியாழன், 7 ஜூலை, 2011

காருக்குள்ள 'அலர்ஜி' இருக்கு பார்த்துப் போ...

''ஊர்ல ஆறேழு கார் வெச்சிருக்கவனெல்லாம் சந்தோஷமா ரவுண்டடிக்கிறான். ஆனா, ஒரே ஒரு காரை வெச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே... அய்யய்யயோ...'' - புதிதாய் வாங்கிய காரைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரரின் தினசரி புலம்பல் இது! சஸ்பென்ஸ் தாங்காமல், என்னதான் பிரச்னை? என்று விசாரித்தபோது,





''எங்க அப்பார்ட்மென்ட்ல எல்லா வீட்டுலேயும் கார் இருக்குது. தூரத்துல இருக்குற அம்மா வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வர ஈஸியா இருக்குமேன்னு நாலு மாசத்துக்கு முன்னால லோன் போட்டு காரை வாங்கினேன். ஆறரை லட்சம் கொடுத்து வாங்குன காரை, இதுவரைக்கும் ஆறு தடவைதான் வெளியே எடுத்திருக்கேன். இதுக்கு மெயின் காரணம் என் குழந்தை பிருந்தாதான்!'' என்றவர் தொடர்ந்தார்.

''புது காரை ஓட்டிட்டு முதல் முறையா கோயிலுக்குப் போயிட்டிருந்தப்பவே காருக்குள்ளே வாமிட் பண்ணிட்டா! சாப்பிட்டது ஒத்துக்கலைன்னு நினைச்சு விட்டுட்டேன். அதுக்குப் பிறகு கார்ல போறப்பல்லாம் வாமிட்டிங்தான். 'எனக்கு கார் பிடிக்கலை. வேணாம்’னு ஒரே அழுகை. ஒரே மகளை விட்டுட்டு நாங்க மட்டும் சுத்தவா முடியும். காருல ஏறினதும், குழந்தை படுற அவஸ்தையைப் பார்க்கிறப்ப, கார் வாங்கினதே தப்போன்னு நினைக்க வைக்குது. என்னதான் செய்ய?'' என்று நொந்து கொண்டார்.



இந்தப் பிரச்னை குறித்து பேசினார் மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் தோல் நோய் சிறப்பு மருத்துவர் செந்தில்குமார்.

''இது ஒரு வகையான அலர்ஜி. கழுத்து ஸ்டெடியாக நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கும் குழந்தைப் பருவம் முதல், பள்ளி செல்லும் காலம் வரை பல குழந்தைகள் இப்படிப்பட்ட பிரச்னைக்கு உள்ளாகின்றனர். கலகலவென இருக்கும் குழந்தை கார் ஸ்டார்ட் ஆனதும், அழ ஆரம்பித்துவிடும். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கார் வாங்குபவர்கள், காருக்குள் இருக்கும் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்'' என்றவர், காரினால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க டிப்ஸ்களையும், ஆலோசனைகளையும் சொன்னார்.

காரில் உள்ள சீட்டின் தன்மையால் நிறைய குழந்தைகளுக்கு தொடை, பின் பகுதி, முழங்கையில் தடிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

கார் பழசாகிவிட்டாலும், புது காரைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, சீட் மீது இருக்கும் பாலிதீன் கவரைக்கூட சிலர் அகற்றாமல் இருப்பார்கள். ஆர்டிபிஷியல் லெதர், மற்றும் தரமற்ற சாதாரண கவர்களின் வெப்பத்தால் ஒருவித வாசனை வரும். சீட்டுகளுக்கு ஒரிஜினல் லெதர் அல்லது காட்டன் துணி பயன்படுத்துவது நல்லது. உடம்புக்கு ஒப்புக் கொள்ளாத, உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய மெட்டீரியலில் உள்ள கார் சீட் கவர்களைத் தவிர்த்து விடுங்கள். வேறு வழியில்லை எனில், கார் சீட்டின் மீது சுத்தமான காட்டன் துணியை விரித்துப் பயன்படுத்துங்கள். காரின் சீட் கவர் பருத்தித் துணியால் செய்யப்பட்டதாக இருந்தால், அடிக்கடி எடுத்துத் துவைத்துப் பயன்படுத்தலாம்.

காரை உடனே இயக்காமல், காருக்குள்ளே குழந்தையை அமர வைத்து, காருடன் குழந்தையை சகஜமாக்குங்கள். மிகவும் முக்கியமாக கார் செல்லும் திசையில் குழந்தையை அமர வையுங்கள். எதிர்திசையில் அமர வைத்தால் தலைவலி, தலைச் சுற்றல் போன்ற பிரச்னைகள் தலை தூக்கும்.

காருக்குள் உட்கார்ந்ததுமே காது கிழியும் அளவுக்கு சிலர் மியூஸிக்கைப் போட்டு விடுவார்கள். இதுவும் குழந்தைகளுக்கு அசௌக ரியத்தை ஏற்படுத்தும்.



காருக்குள் உபயோகிக்கும் பெர்ஃப்யூம்கள் சில குழந்தைகளுக்கு அலர்ஜி, மூச்சுத் திணறல், தலைச் சுற்றலை ஏற்படுத்தும். அதனால், மிகவும் கவனமாக குழந்தைகளுக்கு ஏற்றுக் கொள்கிற பெர்ஃப்யூமை உபயோகிப்பது நல்லது.

வெயிலில் காரை நிறுத்தும்போது, கார்களின் டேஷ் போர்டு மற்றும் பிளாஸ்டிக்ஸ் பாகங்களில் இருந்து அதிக வெப்பத்தால், ஒருவித வாசனை வெளியாகும். இதுகூட குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். வெயிலில் நிறுத்தும்போது டேஷ் போர்டை வெள்ளை நிறத் துணியால் மூடி வைத்து விடுங்கள்.

காரின் மிதியடிகளை அடிக்கடி வெளியே எடுத்து மண்ணை உதறி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உட்புறப் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து, தூசி இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

உங்கள் குழந்தைக்கு அலர்ஜி இருந்தால், காரில் செல்லும்போது, ஏ.ஸி பயன்படுத்துவதை பெரும்பாலும் குறைப்பது நல்லது. புறநகர் பகுதிகளில் பயணிக்கும்போது, வயல்வெளி, ஆற்றங்கரை பக்கமாக குழந்தைகளை அழைத்துச் சென்று சுத்தமான காற்றைச் சுவாசிக்க வையுங்கள். இயற்கைக் காற்றோட்டம் காருக்குள் இருக்கும் வாசனை, புழுக்கத்தை வெளியேற்றிவிடும். இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே, உங்கள் குழந்தையும் காரைக் காதலிக்க ஆரம்பித்து விடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக