பிரபலமான இடுகைகள்

புதன், 6 ஜூலை, 2011

''கவலைகளை இறக்கிவைக்க ட்ரட்மில்!''

'கண்கள் இரண்டால்’ கவர்ந்து இழுத்த சுவாதி, இப்போது 'போராளி’ சசிகுமாருக்கு ஜோடி. உருட்டிப் பார்க்கும் விழிகளும் உதடுகளை மீறி வெளிப்படும் தெற்றுப்பல்லும் சுவாதியின் சூப்பர் அடையாளங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தால், ''ஒரு நிமிஷம்... எங்க அம்மாகிட்ட கேட்டுட்டு வந்துடுறேன்!'' என ஓடுகிறது இந்த ஆந்திரத்துப் பொண்ணு.

''ஸாரிங்க... சின்ன வயசில் இருந்தே அம்மாவைக் கேட்காமல் எந்த வேலையும் பண்ண மாட்டேன். அப்பாவுக்கு நேவியில் வேலை. அண்ணன் பைலட். அதனால், கட்டுப்பாட்டுக்குக் குறைவு இல்லாத குடும்பம். சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம்னு பெல் அடிக்கிறது அம்மாதான். 8 மணிக்கு காலை டிஃபன், மதியம் 12 மணிக்கு சாப்பாடு, இரவு 7 மணிக்கு டின்னர்னு கரெக்ட் டைமுக்கு சாப்பிடுவேன். என்னதான் வேலை இருந்தாலும், இரவு 8.30-க்கு பெட்ல விழுந்துடுவேன். 8 மணி நேர உறக்கம் அவசியம்கிறது அம்மாவோட ஆர்டர்!''



''ஷூட்டிங் நேரத்தில் சாப்பாடு, தூக்கம்னு டைம் மெயின்டெய்ன் பண்றது சிரமம் இல்லையா?''

''இல்லவே இல்லை. 'மணி 12 ஆச்சுப்பா... சுவாதிக்குச் சாப்பாடு கொடுத் துடுங்க’னு ஷூட்டிங் ஸ்பாட்லயே சொல்வாங்க. அந்த அளவுக்குச் சாப்பாடு நேரத்தில் சரியா இருப்பேன். 'சுப்ரமணியபுரம்’ படத்துக்காக என்னை அணுகினப்ப ரொம்ப ஒல்லியா இருந்தேன். சசிகுமார் சார் பார்த்துட்டு, 'ரொம்பப் பரிதாபமா இருக்கியேம்மா... இன்னும் வெயிட் போடணும்!’னு சொன்னார். நாலஞ்சு கிலோ வெயிட் ஏத்திட்டுப் போனால், 'இவங்க சரிப்பட மாட்டாங்க... மதுரை சாப்பாட்டைக் கொடுத்து நாமளே தேத்தினாத்தான் உண்டு’ன்னு சொல்லி தலப்பாகட்டி பிரியாணி, கறிக்கோலா உருண்டைனு வாங்கிக் கொடுத்தார். டைமிங் மிஸ்ஸாகி, கிடைக்கிற நேரம் எல்லாம் சாப்பாடுன்னு மாறி, ஒரு மாசத்துலயே செம வெயிட் போட்டேன். நிறையச் சாப்பிட்டது மட்டும் அதுக்குக் காரணம் இல்லை... டைமிங் தவறி சாப்பிட்டதுதான் காரணம். டைமிங் மிஸ் ஆகும்போது, உடம்போட ஜீரண உறுப்புகளுக்கும் சிக்கல் உண்டாகுது. சாப்பாட்டைத் தவிர்க்கிறப்பதான் நம்ம உடம்பு இன்னும் குண்டாகிடுது. 'சுப்ர மணியபுரம்’ படத்துக்கு அப்புறம் வெயிட்டைக் குறைக்க, மறுபடியும் சாப்பாட்டுக்கு டைமிங் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். தூக்கமும் அப்படித் தான்... யூனிட்ல எல்லாருக்கும் என்னோட டைமிங் நல்லா தெரியும். ஒரு தடவை என்னோட பிறந்த நாளுக்காக நைட் 12 மணிக்குத் தோழிகள் வீடு தேடி வந்துட்டாங்க. நானும் ஆசையா எழுந்து அவங்ககிட்ட பேசுறப்ப, அம்மா எழுந்துட்டாங்க. சகட்டுமேனிக்குச் சத்தம்... பிறந்த நாளில் அவ்வளவு திட்டு வாங்கின ஆள் நானாத் தான் இருப்பேன். 'ஒருநாள் கண் விழிக் கிறது, ஒரு வாரத்துக்குப் பாதிக்கும்’னு அம்மா சொல்வாங்க. அதனால், டைமிங் ரொம்ப முக்கியம்!''

''உடலுக்காக என்னென்ன பயிற்சிகள் பண்றீங்க?''

''ஜிம்முக்குப் போற அளவுக்கு எனக்கு டைம் இல்லை. அதோட, ஜிம் பயிற்சிகள் மேல எனக்குப் பெரிசா நம்பிக்கையும் இல்லை. நம்ம வீட்ல நம்மளைச் சுற்றி இருக்கிற சூழலில் பண்ற பயிற்சிகள்தான் நம்ம உடலை வளப்படுத்தும்.

நான் சின்ன வயசில் இருந்தே ஸ்கிப்பிங் ஆடுவேன். வாக்கிங் மாதிரியான பயிற்சிகளைத் தாண்டி, உடலுக்காக நான் பிரத்யேகமா பண்றது ஸ்கிப்பிங்தான். உடல் குலுங்க கால்களைத் தூக்கி ஆடுறப்ப, வியர்த்துக் கொட்டும். வீட்டு மொட்டை மாடி, தோட்டம், வாசல்னு எங்கே வேணும்னாலும் ஸ்கிப்பிங் ஆடலாம். ஸ்கிப்பிங் ஆட உடம்பு மட்டும் ஒத்துழைச்சாப் போதாது. மனசும் ஒத்துழைக்கணும். டைமிங் ரொம்ப முக்கியம். டைமிங் மிஸ்ஸாகி கயிறு பிசகினால், கால் இடறி விழக்கூட வாய்ப்பு இருக்கு. காலை, மாலை இரண்டு வேளையும் ஸ்கிப்பிங் ஆடுவேன். ஷூட்டிங்குக்காக வெளியே போறப்பகூட, ஸ்கிப்பிங் ஆடுறதில் சிரமம் இருக்காது. அதனால், அதைத் தாண்டிய பயிற்சிகளை நான் பண்றது கிடையாது!''



''அடிக்கடி உங்களை ட்ரட்மில் பயிற்சியில் பார்க்க முடியும்னு சொல்றாங்களே?''

''ட்ரட்மில் பயிற்சியை உடம்புக்காக நான் பண்றது இல்லை. கோபம், வேதனை, சோர்வு மாதிரியான நேரங்களில் ட்ரட்மில் ஏறிடுவேன். என்னோட கோபத்தைக் கட்டுப்படுத்தவும், ஆதங்கத்தை இறக்கிவைக்கவும் ட்ரட்மில்தான் தேவைப்படுது. மனசு ரிலாக்ஸ் ஆகிற வரைக்கும் ட்ரட்மில்ல ஓடுவேன். ஷூட்டிங்கில் யாராவது மனசு வருத்தப்படுற மாதிரி பேசிட்டாங்கன்னா, பதிலுக்கு நான் ஏதும் பேச மாட்டேன். அன்னிக்கு ட்ரட்மில் பண்ண ஒதுங்கிடுவேன். ஒரு மணி நேரம்கூட ஓடுவேன். அதன் மூலமா, யார்கிட்டயும் பகிர்ந்துக்காமலே என்னோட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்குது. 'பகிர்ந்துகொள்ளும் துன்பம் பாதியாகும்’னு சொல்வாங்க. ஆனால், பிரச்னைகளை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கிறப்பதான் ஜாஸ்திஆகுது. நாலு பேரும் நாலு விதமா அட்வைஸ் பண்ணி, நம்மை மேலும் குழப்புவாங்க. அதனால, கொஞ்ச நேரம் அமைதியா வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைச் செலுத்தினாலே, தெளிவு கிடைச்சிடும். அடிக்கடி கோபப்படுற குணம்கொண்ட நான் என்னைச் சரி பண்ணிட்டது இப்படித்தான்!''

''சாப்பாட்டில் எப்படி?''

''சைவம், அசைவம்னு பிரிச்சுப் பார்க்கிறது கிடையாது. ஆந்திராவில் பிறந்து இருந்தாலும் அதிகமா காரம் சேர்க்க மாட்டேன். உடல் பருமனை ஏற்படுத்தாத கொழுப்பு தவிர்த்த உணவுகளை நல்லா சாப்பிடுவேன். எல்லாவிதமான காய்கறிகளையும் சாப்பிடுவேன். என்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்... தண்ணி குடிக்க மறந்துடுறதுதான்! இப்பல்லாம், நிறையத் தண்ணி குடிக்கணும்கிறதுக்காகவே, கண்ணில் படுகிற இடத்தில் எல்லாம் தண்ணி பாட்டிலை வெச்சிருக்கேன். ஜூஸ் நிறையக் குடிப்பேன்!''

''அழகுக்கு?''

''கலைஞ்சுகிடக்குற தலைமுடி... பராமரிக்காத முகம்... ஏனோதானோங்கிற உடைதான் இப்போ அழகுன்னு ஆகிடுச்சு. உடைகளில் எப்பவுமே ரொம்ப எளிமையா இருக்கிற மாதிரியே தேர்வு பண்ணுவேன். வாரத்துக்கு ஒரு தடவை முகத்தை ப்ளீச் பண்ணிக்குவேன். தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான் தெய்வம்!

'தெற்றுப் பல்லை நீக்கிட்டா இன்னும் அழகா இருப்பீங்க’ன்னு சிலர் சொன்னாங்க. உடலை வறுத்தி அழகைப் பெறுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. அழகோ, அசிங்கமோ... நம்ம உடம்புக்கு நாமதான் முதல் ரசிகரா இருக்கணும். யோகாவில் மிக முக்கியமான பயிற்சியே நம்ம உடம்புகளோட ஒவ்வோர் உறுப்பையும் ஆத்மார்த்தமா நினைக்கிறதும் ரசிக்கிறதும்தான்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக