பிரபலமான இடுகைகள்

புதன், 6 ஜூலை, 2011

ரத்த அழுத்தம் சீராக முத்தான் டிப்ஸ்...

நாற்பது வயதை நெருங்குவதற்குள்ளேயே இன்றைய இளைய தலைமுறையை ரத்த அழுத்த பாதிப்பு எட்டிவிடுகிறது. நம் வாழ்க்கை முறையும், உணவு பழக்கத்தினால் ஏற்பட்ட அதீத மாற்றங்களும்தான் இதற்கு காரணம்.

மும்பையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளரும் பிஃபை (BFY- Better Fitness For You) அமைப்பின் கல்வி டெக்னிக்கல் டைரக்டருமான டாக்டர் ருசித்ரா டென்டூல்கர் ரத்த அழுத்த பிரச்னை பறந்தோட இங்கே வழி சொல்கிறார்...

''மன உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்கு கொடுக்காதததுதான் ரத்த அழுத்தத்துக்கு காரணம்.

உயர் ரத்த அழுத்தம் (Hyper Tension), குறைந்த ரத்த அழுத்தம் (Hypo Tension) என்று இரண்டு வகை உண்டு. வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் இயல்பான ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவுதான் இருக்க வேண்டும். இதில் சுமார் 20-30 மி.மீ. பாதரச அளவு குறையும் போது, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை தலைதூக்கும். இந்த அளவு குறையும்போது, அதிக ரத்த அழுத்த பிரச்னை தாக்கும். ரத்த அழுத்தத்துக்கான எல்லைக்கோடு 130/85 என்று சொல்லலாம். இந்த அளவில் வந்துவிட்டால் நாம் உஷாராகி, உடனடியாக உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.

140/90-க்குமேல் வந்த பிறகுதான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிட்டால் அதுவே ஆபத்தில் முடியலாம். பொதுவாக, உடல்நலம் தொடர்ந்து பாதிக்க ஆரம்பித்தாலே ரத்த அழுத்தத்தை பரிசோதித்து கொள்ளவேண்டியது முக்கியம்.

பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்ததைப் பரிசோதிப்பது அவசியம்!'' - ரத்த அழுத்தத்தின் அளவுகளை அடுக்கிய ருசித்ரா, உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கான உணவு, பயிற்சி முறைகள் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.



''உடல் பருமன், தொப்பை உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. பருமனைக் குறைக்கவில்லை என்றால், இருதய நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம். வேகமாக ஓடுவது, கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும். மிதமான உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி நல்ல பலனைத் தரும்.

கோதுமை, ராகி, கம்பு போன்ற நார்ச்சத்துள்ள முழு தானியங்களை அதிகமாகவும், பாதாம், பிஸ்தா போன்றவற்றை குறைவாகவும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உணவில் குறைவான உப்பு மற்றும் குறைவான சோடியத்தைப் பயன்படுத்த வேண்டும். அதிக உப்பு சேர்த்த உணவுகள் மற்றும் பண்டங்களைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சட்னி, ஊறுகாய், பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்'' - என்றவர் குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் விவரித்தார்.

''ஒருவருக்கு உடல் சோர்வு, சுறுசுறுப்பின்மை, மந்த நிலை தொடர்ந்து இருந்தாலே, குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருக்கக்கூடும். இதற்கு உடனடி பலனை தருவது உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த அழுத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கும். தினசரி 45 முதல் 60 நிமிடங்கள் நடை, சைக்கிள் ஓட்டுதல் போன்றபயிற்சிகளை மேற்கொள்ளலாம். எடை தூக்கும் பயிற்சி செய்வதும் நல்லதுதான் என்றாலும், தோளுக்கு மேல் அதிக எடையை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தவிர்க்கச் சொன்ன உணவுகளை இவர்கள் சாப்பிடலாம். அதிக உப்பு சேர்த்த உணவை எடுத்துக் கொள்ளலாம். பேரிச்சம் பழம், அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். தினசரி குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தாலும் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை குறையவில்லை என்றால் மருத்துவர்களை அணுகுவதுதான் நல்லது!'' என்றார் அறிவுறுத்தலாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக