பிரபலமான இடுகைகள்

புதன், 12 ஜனவரி, 2011

கிழங்குக்குள்ளே இவ்ளோ விஷயம் இருக்கா

பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?
சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள் அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை. மண் எத்தனை தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக் கொண்டு, அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்துவிடும். இதைப்போலவே, மணப்பெண்ணும் தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். அதையே தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக் கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் கொடுக்கும் வழக்கம் உள்ளது. சிறுகிழங்குகள் திருநெல்வேலி பகுதியிலும், பனங்கிழங்குகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மார்கழி, தை மாதங்களில் விளையும் என்பது குறிப்பிடத்தக்கவை.

பச்சரிசி காட்டும் தத்துவம்
பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா?
பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். அதைப் பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசைகளைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான். பொங்கல் நாளில் பச்சரிசி காட்டும் இத்தத்துவ உண்மையை உணர்ந்து நம்மை நாமே பக்குவமாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக