பிரபலமான இடுகைகள்

புதன், 12 ஜனவரி, 2011

பொங்கல் பண்டிகை பிறந்தது எப்படி?

எக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத <உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையில் "இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது. காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத்திய போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.
இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத்தோரணங்கள் கட்டப்பட்டன. அன்றையச் செல்வச் செழிப்பிற்கேற்ப தங்கத்தூண்களில் முத்துமாலைகள் தொங்க விடப்பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புதுமணல் பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின்பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத்தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள் வேண்டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப்பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்சலுக்கு காரணம் அவரே என நம்பினர். பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத்ததால், இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக