பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

"இது இந்தியாவின் கதை"- ஒரு பார்வை

"இது இந்தியாவின் கதை"- ஒரு பார்வை


ஒருவனுடைய வாழ்க்கை எப்பொழுது முழுமையடையும் என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு. ஒருவனின் வாழ்க்கை, அவனது இறப்புக்குப் பின்னரே தீர்மானிக்கப் படுகின்றது. ஒருவனுடைய வாழ்வு வரலாறாகும் போதே அது முழுமையடைவதாகத் தோன்றுகின்றது. வரலாறு என்பது வெறும் நாட்குறிப்பல்ல. அது ஒரு வழிமுறை. வாழ்க்கைப் பாடம். ஒரு தனி மனித வரலாறே இவ்வாறென்றால் ஒரு நாட்டின் வரலாறு எப்படி இருக்கும் ?. அதுவே வரலாற்றின் ஆரம்பமாயிருந்தால் ? ஆம் அப்படி ஒரு வரலாறே நம் இந்திய நாட்டின் வரலாறு.

பெரும்பாலும் நாம் அனைவருக்கும் இந்திய வரலாறு பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தோடு நின்றிருக்கும். ஆர்வமுடையவர்கள் பட்ட படிப்பிலும், மேலும் சிலர் சில புத்தகங்களின் மூலம் தேடியிருப்பார்கள். அதற்கு மேல் முயற்சித்தவர்கள் மிகச் சிலரே. நம் தேசப் பிதாவின் வரலாற்றை படமாக எடுத்து நமக்கு காட்டவே இங்கிலாந்திலிருந்து ஒரு அட்டன் பாராவ் வரவேண்டியிருந்தது.அப்படியிருக்கும் போது நம் நாட்டின் வரலாற்றை நமக்குச் சொல்ல இன்னும் ஒருவர் வானத்திலிருந்துதான் குதித்து வர வேண்டும். யார் செய்த புண்ணியமோ அப்படி குதித்து வந்த ஒருவர் தான் மைக்கேல் வுட். பிபிசி சானல் நிகழ்ச்சிக்காக இந்தியாவின் 10,000 ஆண்டு கால வரலாற்றை தோண்டித் துருவி ஆவணப்படமாக்கியிருக்கிறார். வெறும் காகிதங்களில் அல்ல, ரத்தமும் சதையுமாக நம் கண் முன் நிறுத்துகின்றார். அவரது தேடுதலும், இந்திய வரலாறை அறிந்து கொள்ளும் ஆர்வமும் அவர் கண்களில் மின்னுகின்றது. பார்க்கும் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கிறார். நாம் கூட அப்படி ரசித்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே.

இந்திய வரலாற்றைத் தேடும் அவரது பயணம் ஆப்பிரிக்காவில் தொடங்குகின்றது. அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே திராவிடர்கள். மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில் வாழும் விருமாண்டி என்பவரின் ஜீன்கள் ஆதி மனிதனின் தொடர்ச்சி என்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றார். மலையாளிகளின் ஒரு சடங்கு முறையில் எழுப்பப்படும் ஒலிகள் ஆதி மனிதன் பறவை விலங்குகளோடு உரையாடப் பயன்படுத்தியன என்கிறார். நம் மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு கூட பண்டைய திராவிடர்களின் பெண் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே என்கிறார்.

மனிதனின் நாகரிக வளர்ச்சி விவசாயத்தில் தொடங்கியது. நகரமயமாதல் அதன் உச்சம். கி.பி. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி நாகரிக உச்சம் பெற்ற நகரங்களே இன்றைய பாகிஸ்தானின் ஹராப்பாவும், மொகஞ்சதாரோவும். அங்கு நம் முன்னோர் பயன்படுத்திய சுட்டச் செங்கற் கட்டடங்களைச் சுடச்சுடக் காட்டுகிறார். இந்து நதியின் சமவெளியில் தோன்றிய இந்நாகரிகங்களின் வீழ்ச்சியையும் ஆராய்கிறார். இன்றைக்கு மட்டுமல்ல அன்றைக்கும் நடந்த தட்பவெப்ப மாறுதல்களும், பருவ மழையின் ஏமாற்றமுமே இவற்றின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருக்கின்றன.

இதன்பின் "வுட்"-டின் பயணம் ஆரியர்களின் வருகையை நோக்கித் திரும்புகிறது. அவர் சம்ஸ்கிருத மொழியின் தோற்றத்தையும் அதற்கும் லத்தீன், கிரேக்க மொழிகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்கிறார். ரிக் முதலிய வேதங்களும், இந்திரர் முதலான தெய்வங்களும் ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்து கூஷ் மலை கடந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சோமா செடியிலிருந்து உருவான சோம பானம் இன்றளவும் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் அருந்தப்படுவதை அறிந்து அங்கு சென்று அதையும் சுவைக்கிறார்.ஆரியர்கள் கடந்து வந்த பாதைகளை நம் கண்களுக்குகாட்டுகிறார்.

மகாபாரதம் நடந்த குருசேத்திரம், புத்தர் இறந்த குசி நகரம், அலெக்சாண்டர் முதல் அசோகர் வரையிலான மன்னர்களின் ஆட்சியும் அதிகாரமும் என இவர் பார்வை விரிகிறது. ஆச்சரியத்தில் நம் கண்களும் தான். பூஜ்யத்திலிருந்து வாஸ்தயானர் வரை இந்தியாவின் பெருமைகள் எதையும் இவர் விட்டு வைக்கவில்லை. அருமையான ஒரு ஆவணப் படம்.

இதன் ஒளிபதிவும் இசையமைப்பும் ஆவணப்படத்திற்கே என்று இருக்கும் அனைத்து வரையறைகளையும் தாண்டிச் செல்கிறது. நான் பார்த்த மதுரையா இது என்று ஆச்சர்யப் படுத்துகின்றன.

நம் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு ஆவணப்படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக