பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

'மாதவிடாய்’... ஆண்களுக்கான பெண்களின் படம்!

''இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!'' - 'மாதவிடாய்’ என்கிற தலைப்பில், விழிப்பு உணர்வு படத்தை சமீபத்தில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.ஏ.ராமசாமி ராஜா ஹாலில் வெளியிட்டபோது கீதா - இளங்கோவன் தம்பதி பகிர்ந்த நம்பிக்கை வார்த்தைகள் இவை! இளங்கோவன், தென்னக ரயில்வேயில் துணைப் பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார். கீதா, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தில், ஊடக தகவல் அலுவலராக பணியாற்றுகிறார். படத்தைப் பற்றி பேசிய அதன் இயக்குநர் கீதா இளங்கோவன், ''மாதவிடாய் என்று சொல்லக்கூடிய மாதாந்திர ரத்தப்போக்கு, பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு நிகழ்வு. அதைப் பற்றிய அறிவியல் புரிதல், எல்லா பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கிறதா? மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் என்ன? இந்த வசதிகள் சரிவர கிடைக்கின்றனவா? இப்படி மாதவிடாய் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதும், அதைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவதும்தான் நோக்கம். 38 நிமிடம் ஓடக்கூடிய இந்த ஆவணப் படத்தில், 55 பெண்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். இதை, ஆவணப்படம் என்பதைவிட, ஆண்களுக்கான பெண்களின் படம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றி, அதிகமான ஆண்களுக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. தெரிந்தால்தானே புரிந்துகொண்டு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள். அதற்கு இந்தப் படம் நிச்சயம் வழி வகுக்கும்'' என்றவர், ''மாதவிடாய் குறித்து செயற்கையான பல கற்பிதங்கள் சமுதாயத்தில் இருப்பதால், இது தொடர்பான விஷயங்களும், சவால்களும் வெளிப் படையாகப் பேசப்படுவதில்லை. இதனால் பெண்களுக்கு ஏற்படுகின்ற உடல்நிலை குறைபாடுகளும், அசௌகரியங்களும் உரிய முக்கியத்து வத்தையும், கவனத்தையும் பெறாமலே போய்விடுகின்றன. மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் துணி அல்லது நாப்கினை அகற்றும் வசதி, சுகாதாரமான, போதுமான தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை நகரங்களில்கூட அமைக்கப்படுவதில்லை. இதன் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்று... கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரை இட்டுச் செல்லக் கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் என்பது புதிர் அல்ல, அசுத்தமோ தீட்டோ அல்ல என்பதை எல்லோருக்கும் உரக்கச் சொல்லி, உதிரப் போக்கின் போது பெண்ணுக்குத் தேவைப்படும் வசதிகளைப் பெறுவது அவளின் உரிமை, அதை செய்து கொடுப்பது இந்தச் சமுதாயத்தின் கடமை என்பதை இந்த ஆவணப்படம் வலியுறுத்தும்'' என்ற கீதா, ''இப்படி ஒரு படம் எடுக்கப் போவதை என் கணவர் இளங்கோவனிடத்தில்தான் முதன் முதலில் சொன்னேன். உடனேயே புரிந்துகொண்டு 'சரி' என்று சம்மதித்ததோடு, இந்தப் படத்தை எடுத்து முடிக்கும் வரை எனக்கு உதவிசெய்தார். இதை எடுத்து முடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டோம், ஒரு குழுவாக நாங்கள் இணைந்து இதை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் இந்தப் படம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது'' என்று இந்தப் படத்தை எடுக்க பக்கபலமாக இருந்த கணவர் இளங்கோவன் மற்றும் தன் குழுவுக்கு நன்றி கூறினார். ''பெண்களுக்கு நன்மை விளைய, இந்த ஆவணப்படத்தை ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டும்! இந்தப் படம், நிச்சயம் ஆண்கள் மத்தியில் மாதவிடாய் பற்றிய சந்தேகங்களை தீர்ப்பதோடு... சரியான விழிப்பு உணர்வும் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை'' - படத்தைப் பார்வையிட்ட அனைவரின் மனதிலும் 'மாதவிடாய்’ குறும்படம் விதைத்த நம்பிக்கை இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக