பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

களை கட்டுது... சீஸன் எட்டு !

டிசம்பர் மாதம்... சென்னையில் இசைக் காலம்! இந்த சீஸனில், திருவையாறையே, சென்னைக்கு அழைத்து வந்து, காமராஜர் அரங்கில், அமர வைத்து கடந்த எட்டு ஆண்டுகளாக 'சென்னையில் திருவையாறு’ என்று அசத்தி வரு கிறார்... 'லஷ்மன் ஸ்ருதி’ ஆர்க்கெஸ்ட்ரா நிறுவனர் லஷ்மணன்! சென்னை மாநகரில் இருக்கும் ஒவ்வொரு சபாவிலும் ஒவ்வொரு விதமான இசை வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்க... மூத்த தலைமுறையோடு, இளைய தலைமுறையும் சங்கமிக்க வைப்பதுதான் 'சென்னையில் திருவையாறு' ஸ்பெஷல்! ''அந்தக் காலத்தில் கர்னாடக சங்கீத கச்சேரி என்றாலே, பெரியவர்கள்தான் ரசித்து வந்தனர். இன்று குழந்தைகளும் இளைய தலைமுறையினரும் கச்சேரிகளுக்கு அதிகமாக வருவது சந்தோஷத்தைத் தருகிறது. காரணம், பாட்டு, நடனம், கதாகாலட்சேபம், உபன்யாசம், சிதார் என நிகழ்ச்சியை கலகலப்பூட்டுவதுதான். மேலும், கண்களைக் கவரும் விதத்தில் மேடையை மெருகூட்ட, வித்தியாசமான பேக்கிரவுண்ட், நேர்த்தியான அலங்காரம், சவுண்ட் செட்டிங், மணம் வீசும் சூழல், 'எல்.இ.டி. ஸ்க்ரீன்’ என மெனக்கெடுவதுடன் நாவுக்கு விருந்தாக உணவுத் திருவிழாவும் இணைந்திருப்பதால் கச்சேரி களைகட்டுகிறது'' என்று குஷியோடு சொல்லும் லஷ்மணன், ''ஒவ்வொரு வருடமும் 500-க்கும் மேல் விண்ணப்பங்கள் வந்தாலும், தகுதியின் அடிப்படையில் புதிதாக 14 பேருக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். இசை மேதைகளான உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ, சௌம்யா போன்ற பிரபலங்கள் தொடர்ந்து 8 வருடங்களாக இதில் பாடி பெருமை சேர்த்துள்ளனர்'' என்றார் உற்சாகமாக! இதோ... டிசம்பர் 18 முதல் 25-ம் தேதி வரை நடக்க இருக்கும் 'சீஸன் எட்டு’க்கான 'சென்னையில் திருவையாறு’ கச்சேரிகளை... இந்த வருடம் கலகலப்பாக்க வரும் புதுவரவுப் பெண்களின் இசை வார்த்தைகள் இங்கே..! -------------------------------------------------------------------------------- பூஜா முருகன் (பரதம்): ''நான் வித்யாமந்திர் பள்ளியில ப்ளஸ் ஒன் படிக்கிறேன். பத்து வருடங்களா நீரஜா ஸ்ரீநிவாசன்தான் என் குரு. நிறைய மேடைகளில் ஆடியிருந்தாலும்... காமராஜர் அரங்கத்துல ஆடப் போறதை நினைச்சா, பெருமையா இருக்கு. தினமும் ரெண்டு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். நேரம் கிடைக்கறப்பல்லாம் பேட்மின்டன், பேஸ்கட் பால் விளையாடுவேன். நிறைய ஓவியப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கேன். பாட்டு கிளாஸும் போயிருக்கேன். ஆனா, பரதம்தான் எனக்கு முழு மூச்சு. இந்தக் கச்சேரியில ஆடறதுக்கு பெருமாள் பாடல்களா தேர்ந்தெடுத்திருக்கேன். நிச்சயம் எல்லாரும் ரசிப்பாங்க!'' -------------------------------------------------------------------------------- சாஸ்வதி பிரபு (பாட்டு): ''நான் எம்.எஸ்சி சைக்காலஜி கிராஜுவேட். சங்கீதத்துல லால்குடி ஜெயராமன் சார்தான் என் குரு. நானே கம்போஸ் பண்ணி, சில ஆல்பங்கள் வந்திருக்கு. அப்புறம்.... சூப்பரா சமைப்பேன்! கர்னாடக சங்கீதத்தை அதன் அழகு மாறாம பிரதிபலிக்கிற விதமா நிறைய நிரவல், ராகம், ஸ்வரம் போட்டு பக்தி மார்க்கத்துக்கு அழைச்சுட்டு போற மாதிரியான பாடல்கள், அம்பாள் பாடல்கள்னு தேர்ந்தெடுத்திருக்கேன் இந்தக் கச்சேரியில் பாடறதுக்கு. இப்ப இருக்கற தலைமுறைகிட்டயும் மார்க் வாங்கணும்னு ஆவலோட காத்திட்டு இருக்கேன்!'' -------------------------------------------------------------------------------- சுகன்யா கவுர் (பரதம்): ''என் குரு... ஊர்மிளா சத்யநாராயணன். பரதத்தோட யோகா, உடற்பயிற்சி, கைடன்ஸ்னு அத்தனையையும் கத்துத் தருவாங்க. அப்பா பஞ்சாபி, அம்மா தமிழ். நான் ஆர்க்கிடெக்சர் மாணவி. டான்ஸ் கிளாஸ், யோகா, ஸ்விம்மிங்னு உடம்பை பத்திரமா பார்த்துக்குறேன். எப்போ எல்லாம் கச்சேரி வருதோ, அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலயே ஜங்க் ஃபுட்ஸ், சாஃப்ட் டிரிங்ஸ் எதுவும் குடிக்காம, வீட்டுச் சாப்பாட்டை மட்டுமே சாப்பிடுவேன். நிறைய ஊர்களில் டான்ஸ் புரோகிராம் நடத்தியிருக்கேன். அதேபோல மத்தவங்களோட கச்சேரியையும் மிஸ் பண்ணிடாம பார்க்க நினைப்பேன். ஒவ்வொருத்தரோட நடனத்துலயும் ஏதாவது ஒண்ணு ஸ்பெஷலா இருக்குமே?! 'கீப் லேர்னிங் அண்ட் கீப் ஆன் லேர்னிங்'தான் என் பாலிஸி!'' -------------------------------------------------------------------------------- ராகினிஸ்ரீ (பாட்டு): ''இங்க பாடற வாய்ப்புக் கிடைச்சது... என் பாக்கியம். கச்சேரியில் பாட தமிழ்ப் பாடல்களா தேர்ந்தெடுத்திருக்கேன். 'அர்த்தம் புரிஞ்சு பாடறப்ப, பாடறவங்களுக்கும் சரி... கேட்கறவங்களுக்கும் சரி... ஒருவித திருப்தி இருக்கும்’னு என் குரு, கலைமாமணி ஸ்ரீவசந்த்குமார் சார் சொல்லியிருக்கார். பி.ஏ.சோஷியாலஜி முடிச்சுருக்கும் நான்... வெஸ்டர்ன், லைட் மியூஸிக், கர்னாடக சங்கீதம், தமிழ்ப் பாடல்கள்னு இசையில் என்னவெல்லாம் இருக்கோ.... அத்தனையையும் கத்துக்கிட் டிருக்கேன். நிறைய கச்சேரிகளும் பண்ணியிருக்கேன். பியானோ கூட வாசிப்பேன். நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும்கூட. குரலை வெச்சு என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ, அத்தனையும் கத்துக்கிட்டு அசத்தணும்!'' --------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக