பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நம்பிக்கையூட்டும் 'நல்விதைகள் !

'நல்விதைகள்’ அமைப்பின் ஃபவுண்டர் அசாருதீன், ''நண்பர்கள் சிலரோடு இணைஞ்சு, கடந்த ஏழு வருஷமா தமிழ்நாடு ஊனமுற்றோர் நல சங்கத்துல இருக்கற மாற்றுத்திறனாளிகளுக்கு என்னாலான உதவிகளை செய்துட்டு வர்றேன். ஒருமுறை என் நண்பன் கிருஷ்ணன், 'நாம ஏன் தனியா ஒரு அமைப்பு தொடங்கி, அதன் வழியா சமூகத்துக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளைச் செய்யக் கூடாது?’னு ஒரு தடவை கேட்டார். ஒரு வருஷத்துக்கு முன்ன அந்த எண்ணத்துக்கு நண்பர்கள் பலருமா சேர்ந்து வடிவம் கொடுத்தப்போ உருவானதுதான் 'நல்விதைகள்’ அமைப்பு. சேவையில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள், அவர்களின் நண்பர்கள்னு எங்க வட்டம் விரிஞ்சது. கூடவே, 'ஃபேஸ்புக்’ல 'நல்விதைகளுக்’காக ஒரு பேஜ் கிரியேட் செய்தோம். அது இன்னும் பலரை எங்களுடன் இணைய வெச்சுது. இன்னிக்கு எங்க உறுப்பினர்களோட எண்ணிக்கை நூறுக்கும் மேல தாண்டியிருக்கு. இதில் பாதிக்கும் மேற்பட்டவங்க பெண்கள்தான். 90 சதவிகிதம் கல்லூரி மாணவர்களைக் கொண்டு இயங்கும் எங்க அமைப்புல, வேலைக்குப் போறவங்களும் ஆர்வமா முன்வந்து சேர்ந்திருக்காங்க'' என்று அமைப்பின் அறிமுகம் சொன்னார். பிர்தோஷ் பாத்திமா, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு ஹோமியோபதி மாணவி. ''சின்ன வயசுல இருந்தே சேவை செய்றதுல எனக்கு விருப்பம் உண்டு. அப்படி ஒரு களத்தில்தான் 'நல்விதைகள்’ அமைப்பை பற்றித் தெரிய வந்தது. நான் சேர்ந்ததோட, என்னைப் பார்த்து என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் 20 பேருக்கும் மேல இதுல சேர்ந்தாங்க. எங்க ஓய்வு நேரங்கள் எல்லாம் வீணாகாம, பிறருக்கு பயன்படும் விதமா இருக்கு. கோடம்பாக்கத்துல இருக்குற நவ பாரதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள்ல வகுப்புகள் எடுக்க, அந்த ஸ்கூல் முதல்வர்கிட்ட அனுமதி வாங்கி களத்தில் இறங்கினோம். மாதத்தின் எல்லா ஞாயிறும், அந்த மாணவர்களுக்கு பாடங்களை சுமைகளாக்காம, சுவாரசியமா கற்றுக் கொடுத்தோம். இறுதியா தேர்வு வெச்சு பார்த்தப்ப, அவங்க எல்லாரிடமும் நல்ல முன்னேற்றம் தெரிஞ்சதா... பள்ளிக்கூடத்துல எங்களப் பாராட்டினாங்க. இன்னும் பல பள்ளிகளோட பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு'' எனும் இவர்களின் அமைப்புக்கு, நடிகர் பாலாஜி தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் நன்றியுடன் குறிப்பிட்டார். சாய்ராம் கல்லூரியின் பி.இ., இறுதியாண்டு மாணவி அக்ஷயாவின் பேச்சில் வேகம். ''நல்விதைகள் உறுப்பினர்கள் எல்லாரும் வெறும் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாம... ஆத்மார்த்தமா இணைஞ்சுருக்கோம். ஆரம்பத்தில் கல்வி சம்பந்தமான உதவிகளையே முன் எடுத்துச் செய்தோம். இப்போ ரத்ததானம், மாற்றுத் திறனாளிகள்னு எல்லா பக்கமும் செயல்படுறோம். இந்த முகாம்ல எங்க அமைப்புல இருந்து 70 பேர் ரத்ததானம் செஞ்சிருக்கோம். இது எங்களோட முதல் முயற்சி. இனி, ஆண்டுதோறும் குறைந்தது நான்கு ரத்ததான முகாம்களாவது நடத்தணும்னு முடிவு செய்திருக்கோம்'' என்றார் சமூக அக்கறை கொண்டவராக. ''இதுவரைக்கும் யார்கிட்டயும் பண உதவி கேட்டுப் போய் நிக்கல. எங்களால என்ன முடியுமோ அதை வெச்சுதான் பல்வேறு உதவிகள் செய்துட்டு வர்றோம். எங்க உறுப்பினர்களில் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 100 ரூபாயும், வேலை செய்றவங்க எல்லாரும் 200 ரூபாயும் கொடுக்கறாங்க. அந்தப் பணம்தான் சேவைகளுக்கான முதல். பெற்றோர் இல்லாத மாணவர்கள் ராஜேஷ், கிஷோர்னு ரெண்டு பேரோட படிப்புக்கு முழுமையா பொறுப்பேற்று, ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு வர்றோம். இன்னும் எங்க உறுப்பினர்களோட எண்ணிக்கை நிறைய விரியணும்... 'நல் விதைகளோ’ட உதவிகளும்!'' - நல்ல பல எதிர்காலத் திட்டங்களை மனதில் வைத்து முடித்தனர் 'நல் விதை’யினர்!

'மாதவிடாய்’... ஆண்களுக்கான பெண்களின் படம்!

''இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!'' - 'மாதவிடாய்’ என்கிற தலைப்பில், விழிப்பு உணர்வு படத்தை சமீபத்தில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.ஏ.ராமசாமி ராஜா ஹாலில் வெளியிட்டபோது கீதா - இளங்கோவன் தம்பதி பகிர்ந்த நம்பிக்கை வார்த்தைகள் இவை! இளங்கோவன், தென்னக ரயில்வேயில் துணைப் பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார். கீதா, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தில், ஊடக தகவல் அலுவலராக பணியாற்றுகிறார். படத்தைப் பற்றி பேசிய அதன் இயக்குநர் கீதா இளங்கோவன், ''மாதவிடாய் என்று சொல்லக்கூடிய மாதாந்திர ரத்தப்போக்கு, பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு நிகழ்வு. அதைப் பற்றிய அறிவியல் புரிதல், எல்லா பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கிறதா? மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் என்ன? இந்த வசதிகள் சரிவர கிடைக்கின்றனவா? இப்படி மாதவிடாய் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதும், அதைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவதும்தான் நோக்கம். 38 நிமிடம் ஓடக்கூடிய இந்த ஆவணப் படத்தில், 55 பெண்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். இதை, ஆவணப்படம் என்பதைவிட, ஆண்களுக்கான பெண்களின் படம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றி, அதிகமான ஆண்களுக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. தெரிந்தால்தானே புரிந்துகொண்டு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள். அதற்கு இந்தப் படம் நிச்சயம் வழி வகுக்கும்'' என்றவர், ''மாதவிடாய் குறித்து செயற்கையான பல கற்பிதங்கள் சமுதாயத்தில் இருப்பதால், இது தொடர்பான விஷயங்களும், சவால்களும் வெளிப் படையாகப் பேசப்படுவதில்லை. இதனால் பெண்களுக்கு ஏற்படுகின்ற உடல்நிலை குறைபாடுகளும், அசௌகரியங்களும் உரிய முக்கியத்து வத்தையும், கவனத்தையும் பெறாமலே போய்விடுகின்றன. மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் துணி அல்லது நாப்கினை அகற்றும் வசதி, சுகாதாரமான, போதுமான தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை நகரங்களில்கூட அமைக்கப்படுவதில்லை. இதன் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்று... கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரை இட்டுச் செல்லக் கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் என்பது புதிர் அல்ல, அசுத்தமோ தீட்டோ அல்ல என்பதை எல்லோருக்கும் உரக்கச் சொல்லி, உதிரப் போக்கின் போது பெண்ணுக்குத் தேவைப்படும் வசதிகளைப் பெறுவது அவளின் உரிமை, அதை செய்து கொடுப்பது இந்தச் சமுதாயத்தின் கடமை என்பதை இந்த ஆவணப்படம் வலியுறுத்தும்'' என்ற கீதா, ''இப்படி ஒரு படம் எடுக்கப் போவதை என் கணவர் இளங்கோவனிடத்தில்தான் முதன் முதலில் சொன்னேன். உடனேயே புரிந்துகொண்டு 'சரி' என்று சம்மதித்ததோடு, இந்தப் படத்தை எடுத்து முடிக்கும் வரை எனக்கு உதவிசெய்தார். இதை எடுத்து முடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டோம், ஒரு குழுவாக நாங்கள் இணைந்து இதை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் இந்தப் படம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது'' என்று இந்தப் படத்தை எடுக்க பக்கபலமாக இருந்த கணவர் இளங்கோவன் மற்றும் தன் குழுவுக்கு நன்றி கூறினார். ''பெண்களுக்கு நன்மை விளைய, இந்த ஆவணப்படத்தை ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டும்! இந்தப் படம், நிச்சயம் ஆண்கள் மத்தியில் மாதவிடாய் பற்றிய சந்தேகங்களை தீர்ப்பதோடு... சரியான விழிப்பு உணர்வும் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை'' - படத்தைப் பார்வையிட்ட அனைவரின் மனதிலும் 'மாதவிடாய்’ குறும்படம் விதைத்த நம்பிக்கை இது!

திடீர் சமையல்

மீல்மேக்கர் டிக்கிஸ் தேவையானவை: மீல்மேக்கர் - 20, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். -------------------------------------------------------------------------------- கீரை தால் கிரிஸ்பி தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், முருங்கைக்கீரை - ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி... பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும். -------------------------------------------------------------------------------- மூங்தால் பனீர் சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - முக்கால் கப், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... பூண்டு - பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் அடை தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஸ்வீட் சோயா தேவையானவை: சோயா உருண்டைகள் - 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு - 100 கிராம், மைதா - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி... ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். -------------------------------------------------------------------------------- புதினா மசாலா சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- வாழைப்பூ வெங்காய அடை தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 6, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ - ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி... இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, ஸ்வீட் கார்ன் - 2, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு. செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- மேத்தி சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2 சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன். -------------------------------------------------------------------------------- காரசார வேர்க்கடலை பொடி தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட... சுவை அள்ளும்! -------------------------------------------------------------------------------- ஆந்திரா பருப்பு பொடி தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு. செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும். -------------------------------------------------------------------------------- மசாலா இட்லி தேவையானவை: இட்லி - 10, வெங்காயம், தக்காளி - தலா 2, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி... சுடச்சுட பரிமாறவும். -------------------------------------------------------------------------------- மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம். -------------------------------------------------------------------------------- ஹனி சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், தேன் - ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- கிரீன் ரெட் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் - 10, புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும். -------------------------------------------------------------------------------- கேழ்வரகு முருங்கைக்கீரை அடை தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) - அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும். -------------------------------------------------------------------------------- நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ், டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி... கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும். -------------------------------------------------------------------------------- முந்திரி பொடி தேவையானவை: முந்திரி - 20, பாதாம் - 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும். -------------------------------------------------------------------------------- பட்டாணி ஊத்தப்பம் தேவையானவை: தோசை மாவு - 4 கப், துருவிய கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - சிறிதளவு. செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து... மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும். -------------------------------------------------------------------------------- மூங்தால் பெசரட் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும். -------------------------------------------------------------------------------- ஸ்வீட் கார்ன் சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி... பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஸ்பைஸி ரவா கிச்சடி தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு. செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும். -------------------------------------------------------------------------------- ஆலு பாலக் கட்லெட் தேவையானவை: பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் - 4, பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா மாவு - அரை கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- சோயா ஆனியன் பெசரெட் தேவையானவை: சோயா உருண்டைகள் - 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு - ஒன்றரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும் சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- பூண்டு துவையல் தேவையானவை: உரித்த பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும். -------------------------------------------------------------------------------- பிரெட் வெஜ் புலாவ் தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 6, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் - ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக 'கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு 'கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும். -------------------------------------------------------------------------------- வெஜ் சாண்ட்விச் தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 10, புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா - கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- பட்டாணி சீஸ் பன் தேவையானவை: பன் - 4, சீஸ் துருவல் - அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு. செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து... மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும். --------------------------------------------------------------------------------

நமக்குள்ளே....

சமீபத்தில், உலகத்தையே கலங்கடித்த விஷயம்... ஜெசிந்தாவின் தற்கொலை! மங்களூரைச் சேர்ந்த ஜெசிந்தா... லண்டன், கிங் எட்வர்ட் மருத்துவமனையின் நர்ஸ். இளவரசர் சார்லஸின் மருமகள் கேட் வில்லியம், அங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையின் தொலைபேசி ஒலிக்கிறது. 'சார்லஸ் மற்றும் ராணி எலிசபெத் பேசுகிறோம்' என்றபடி ஆண், பெண் குரல்கள் அதில் ஒலிக்க... ஆடிப்போன ஜெசிந்தா... இணைப்பை இன்னொரு நர்ஸுக்கு மாற்றுகிறார். அதன் பிறகு, 'இளவரசர் சார்லஸ் மற்றும் ராணி போல மருத்துவமனைக்கு சாமர்த்தியமாகப் பேசி, அரசாங்க ரகசியத்தைக் கறந்துவிட்டோம்' என்றபடி மருத்துவமனை உரையாடல், ஆஸ்திரேலிய நாட்டின் எஃப்.எம் ரேடியோ ஒன்றில் ஒலிக்க... உலக அளவில் ஏகபரபரப்பு! 'அரச குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டோமே' என்கிற குற்ற உணர்ச்சி வாட்டியெடுக்க... உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார் ஜெசிந்தா. பிரபலங்களைப் போல் குரலை மாற்றிப் பேசி, தொலைபேசி மூலமாக பிறரை ஏமாற்றுவதை நகைச்சுவை நிகழ்ச்சியாக செய்துவரும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், 'எங்கள் விளையாட்டால், ஓர் அப்பாவியின் உயிர் பறிபோய் விட்டதே என்கிற குற்றவுணர்ச்சி, ஒவ்வொரு நாளும் எங்களை வாட்டி எடுக்கிறது' என்று கண்ணீர் பேட்டி கொடுக்கிறார்கள் இப்போது. 'அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு' என்பதை இச்சமூகத்துக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்ட... இரண்டு குழந்தைகளின் தாயான 46 வயது ஜெசிந்தாவின் உயிர் பறிபோனதுதான் கொடுமை. 'நகைச்சுவை' என்கிற பெயரில் இங்கேயும்கூட தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெளிநாடுகளை ஒப்பிடும்போது... இங்கே 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்து டெரர் கிளப்புவது... காதில் 'ஊய்ய்' என்று சத்தமிடுவது... என 'டீஸிங்' செய்துவிட்டு, கடைசியில் 'கிஃப்ட்' என்று எதையாவது கையில் திணிக்கிறார்கள்! அந்த நேரத்தில் 'தேமே' என்று டி.வி-க்கு போஸ் கொடுத்தாலும், நாலு பேருக்கு மத்தியில் பட்ட அவமானம்... திரையில் பார்த்த பிறகு, பலரிடம் இருந்தும் பாயும் கேலிப் பார்வை என்று எத்தனை எத்தனை மன உளைச்சல்கள்? மற்றவர்களை கேலிப்பொருளாக்கி, ஊரை சிரிக்க வைப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமையைக் கொடுத்தது?!

களை கட்டுது... சீஸன் எட்டு !

டிசம்பர் மாதம்... சென்னையில் இசைக் காலம்! இந்த சீஸனில், திருவையாறையே, சென்னைக்கு அழைத்து வந்து, காமராஜர் அரங்கில், அமர வைத்து கடந்த எட்டு ஆண்டுகளாக 'சென்னையில் திருவையாறு’ என்று அசத்தி வரு கிறார்... 'லஷ்மன் ஸ்ருதி’ ஆர்க்கெஸ்ட்ரா நிறுவனர் லஷ்மணன்! சென்னை மாநகரில் இருக்கும் ஒவ்வொரு சபாவிலும் ஒவ்வொரு விதமான இசை வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்க... மூத்த தலைமுறையோடு, இளைய தலைமுறையும் சங்கமிக்க வைப்பதுதான் 'சென்னையில் திருவையாறு' ஸ்பெஷல்! ''அந்தக் காலத்தில் கர்னாடக சங்கீத கச்சேரி என்றாலே, பெரியவர்கள்தான் ரசித்து வந்தனர். இன்று குழந்தைகளும் இளைய தலைமுறையினரும் கச்சேரிகளுக்கு அதிகமாக வருவது சந்தோஷத்தைத் தருகிறது. காரணம், பாட்டு, நடனம், கதாகாலட்சேபம், உபன்யாசம், சிதார் என நிகழ்ச்சியை கலகலப்பூட்டுவதுதான். மேலும், கண்களைக் கவரும் விதத்தில் மேடையை மெருகூட்ட, வித்தியாசமான பேக்கிரவுண்ட், நேர்த்தியான அலங்காரம், சவுண்ட் செட்டிங், மணம் வீசும் சூழல், 'எல்.இ.டி. ஸ்க்ரீன்’ என மெனக்கெடுவதுடன் நாவுக்கு விருந்தாக உணவுத் திருவிழாவும் இணைந்திருப்பதால் கச்சேரி களைகட்டுகிறது'' என்று குஷியோடு சொல்லும் லஷ்மணன், ''ஒவ்வொரு வருடமும் 500-க்கும் மேல் விண்ணப்பங்கள் வந்தாலும், தகுதியின் அடிப்படையில் புதிதாக 14 பேருக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். இசை மேதைகளான உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ, சௌம்யா போன்ற பிரபலங்கள் தொடர்ந்து 8 வருடங்களாக இதில் பாடி பெருமை சேர்த்துள்ளனர்'' என்றார் உற்சாகமாக! இதோ... டிசம்பர் 18 முதல் 25-ம் தேதி வரை நடக்க இருக்கும் 'சீஸன் எட்டு’க்கான 'சென்னையில் திருவையாறு’ கச்சேரிகளை... இந்த வருடம் கலகலப்பாக்க வரும் புதுவரவுப் பெண்களின் இசை வார்த்தைகள் இங்கே..! -------------------------------------------------------------------------------- பூஜா முருகன் (பரதம்): ''நான் வித்யாமந்திர் பள்ளியில ப்ளஸ் ஒன் படிக்கிறேன். பத்து வருடங்களா நீரஜா ஸ்ரீநிவாசன்தான் என் குரு. நிறைய மேடைகளில் ஆடியிருந்தாலும்... காமராஜர் அரங்கத்துல ஆடப் போறதை நினைச்சா, பெருமையா இருக்கு. தினமும் ரெண்டு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். நேரம் கிடைக்கறப்பல்லாம் பேட்மின்டன், பேஸ்கட் பால் விளையாடுவேன். நிறைய ஓவியப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கேன். பாட்டு கிளாஸும் போயிருக்கேன். ஆனா, பரதம்தான் எனக்கு முழு மூச்சு. இந்தக் கச்சேரியில ஆடறதுக்கு பெருமாள் பாடல்களா தேர்ந்தெடுத்திருக்கேன். நிச்சயம் எல்லாரும் ரசிப்பாங்க!'' -------------------------------------------------------------------------------- சாஸ்வதி பிரபு (பாட்டு): ''நான் எம்.எஸ்சி சைக்காலஜி கிராஜுவேட். சங்கீதத்துல லால்குடி ஜெயராமன் சார்தான் என் குரு. நானே கம்போஸ் பண்ணி, சில ஆல்பங்கள் வந்திருக்கு. அப்புறம்.... சூப்பரா சமைப்பேன்! கர்னாடக சங்கீதத்தை அதன் அழகு மாறாம பிரதிபலிக்கிற விதமா நிறைய நிரவல், ராகம், ஸ்வரம் போட்டு பக்தி மார்க்கத்துக்கு அழைச்சுட்டு போற மாதிரியான பாடல்கள், அம்பாள் பாடல்கள்னு தேர்ந்தெடுத்திருக்கேன் இந்தக் கச்சேரியில் பாடறதுக்கு. இப்ப இருக்கற தலைமுறைகிட்டயும் மார்க் வாங்கணும்னு ஆவலோட காத்திட்டு இருக்கேன்!'' -------------------------------------------------------------------------------- சுகன்யா கவுர் (பரதம்): ''என் குரு... ஊர்மிளா சத்யநாராயணன். பரதத்தோட யோகா, உடற்பயிற்சி, கைடன்ஸ்னு அத்தனையையும் கத்துத் தருவாங்க. அப்பா பஞ்சாபி, அம்மா தமிழ். நான் ஆர்க்கிடெக்சர் மாணவி. டான்ஸ் கிளாஸ், யோகா, ஸ்விம்மிங்னு உடம்பை பத்திரமா பார்த்துக்குறேன். எப்போ எல்லாம் கச்சேரி வருதோ, அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலயே ஜங்க் ஃபுட்ஸ், சாஃப்ட் டிரிங்ஸ் எதுவும் குடிக்காம, வீட்டுச் சாப்பாட்டை மட்டுமே சாப்பிடுவேன். நிறைய ஊர்களில் டான்ஸ் புரோகிராம் நடத்தியிருக்கேன். அதேபோல மத்தவங்களோட கச்சேரியையும் மிஸ் பண்ணிடாம பார்க்க நினைப்பேன். ஒவ்வொருத்தரோட நடனத்துலயும் ஏதாவது ஒண்ணு ஸ்பெஷலா இருக்குமே?! 'கீப் லேர்னிங் அண்ட் கீப் ஆன் லேர்னிங்'தான் என் பாலிஸி!'' -------------------------------------------------------------------------------- ராகினிஸ்ரீ (பாட்டு): ''இங்க பாடற வாய்ப்புக் கிடைச்சது... என் பாக்கியம். கச்சேரியில் பாட தமிழ்ப் பாடல்களா தேர்ந்தெடுத்திருக்கேன். 'அர்த்தம் புரிஞ்சு பாடறப்ப, பாடறவங்களுக்கும் சரி... கேட்கறவங்களுக்கும் சரி... ஒருவித திருப்தி இருக்கும்’னு என் குரு, கலைமாமணி ஸ்ரீவசந்த்குமார் சார் சொல்லியிருக்கார். பி.ஏ.சோஷியாலஜி முடிச்சுருக்கும் நான்... வெஸ்டர்ன், லைட் மியூஸிக், கர்னாடக சங்கீதம், தமிழ்ப் பாடல்கள்னு இசையில் என்னவெல்லாம் இருக்கோ.... அத்தனையையும் கத்துக்கிட் டிருக்கேன். நிறைய கச்சேரிகளும் பண்ணியிருக்கேன். பியானோ கூட வாசிப்பேன். நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும்கூட. குரலை வெச்சு என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ, அத்தனையும் கத்துக்கிட்டு அசத்தணும்!'' --------------------------------------------------------------------------------

கர்ப்பப்பை ஆபரேஷன்...கல் நெஞ்ச டாக்டர்...

உயிருடன் இருக்கும் மனைவியையே கண்டு கொள்ளாத கணவர்கள் இருக்கும் காலம் இது. ஆனால், தவறான சிகிச்சையால் இறந்துபோன தன் மனைவிக்காக, 25 வருடங்களாக நீதி கேட்டு போராடி வெற்றி பெற்றுள்ளார் 84 வயது சிங்கி. தவறு செய்த மருத்துவருக்கு, நீதிமன்றம் ஒருநாள் தண்டனை அளித்ததுடன், மொத்தம் 85 லட்சம் ரூபாயை நஷ்டஈடாக தரவும் உத்தரவிட்டுள்ளது! ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சி.சிங்கி. இவருடைய மனைவி லீலா சிங்கி, 1977-ல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த பத்து வருடங்களில் லீலாவுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. எனினும், நுரையீரலுக்கும் புற்றுநோய் பரவி, கர்ப்பப்பையையும் பாதித்துவிட்டது. அந்த சமயத்தில் பணியின் காரணமாக அமெ ரிக்காவில் இருந்தார் சிங்கி. அதனால், நியூயார்க் நகரிலிருக்கும் ஸ்லோன் கேத்தரிங் நினைவு மருத்துவமனையில், பிரபல புற்றுநோய் மருத்துவர் எர்னஸ்ட் கிரீன்பர்க்கிடம் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனை செய்த டாக்டர், 'அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை எடுப்பதால் லீலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என அறி வுறுத்தி, மருந்துகளை மட்டும் பரிந்துரைத்துள்ளார். சிலகாலத்துக்குப் பிறகு, மனைவியுடன் இந்தியா திரும்பியவர், மருத்துவ பரிசோதனைக்காக மும்பை யின் பிரபல பாம்பே ஹாஸ்பிடலுக்கு 1987-ல் லீலாவை அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த புற்று நோய் பிரிவு தலைவரும், மத்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் பிரஃபுல்லா தேசாய், 'உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்க வேண்டும்' என பரிந்துரைக்க... ஏற்கெனவே அமெரிக்க டாக்டர் அளித்த ஆலோசனையை எடுத்துச் சொன்னார் சிங்கி. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிய தேசாய், தம் உதவியாளராக இருந்த மருத் துவர் ஏ.கே.முகர்ஜியிடம், லீலாவின் அடிவயிற்றை ஓபன் செய்த பிறகு, தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு, வேறு சர்ஜரியில் மூழ்கினார். அதன்படியே செயல்பட்ட டாக்டர் முகர்ஜி, லீலாவின் கர்ப்பப்பை, அகற்ற முடியாத நிலையில் சீரியஸாக இருப்பதைக் கண்டு, தேசாயிடம் கூற... 'அப்படியே மூடி தையல் போடு' என்று ஆபரேஷனை முடித் தார் தேசாய். பிறகு வீடு திரும்பிய லீலாவுக்கு, வலி அதிகமானது. அவருடைய செயல்பாடு களும் முடங்கி, சுமார் 14 மாத நரக வேத னைக்குப் பிறகு... 89-ம் ஆண்டில், தன்னு டைய 46 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே... சிங்கி பதிவு செய்த வழக்கின் மீது நடந்த விசாரணையில் மும்பையின் கிரிமினல் நீதிமன்றம், 2001-ல் டாக்டர் தேசாய்க்கு ஒருநாள் சாதாரண தண்டனை மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மும்பை உயர் நீதிமன்றத்தில் தேசாய் அப்பீல் செய்ய, அந்த மனு கடந்த அக்டோபரில் தள்ளுபடியானது. உச்ச நீதிமன்றத்துக்கு ஓடினார் தேசாய். அங்கிருந்து கடந்த நவம்பர் 20 அன்று வெளியான தீர்ப்பு... கீழ் கோர்ட் கொடுத்த ஒரு நாள் தண்டனையை உறுதி செய்ததுடன், நஷ்டஈடாக 70 லட்சம், மருத்துவ செலவுக்காக 15 லட்சம்... ஆக மொத் தம் 85 லட்ச ரூபாயை சிங்கிக்கு, தரவேண்டும்' எனக் கூறி, தேசாயை அதிர வைத்துவிட்டது. தற்போது மும்பையிலிருக்கும் மகள் வீட்டில் தங்கியிருக்கும் 84 வயது சிங்கியிடம் பேசினோம்! ''இது என் மனைவி லீலாவுக்குக் கிடைத்த வெற்றி!'' என்று ஈரத்தில் மின்னிய கண்களுடன் பேசினார் சிங்கி! ''பாம்பே ஹாஸ்பிடலின் புற்றுநோய்ப் பிரிவு முன்னாள் தலைவர் மீது தனக்கிருந்த பகைமையைத் தீர்த்துக் கொள்ள, என்னுடைய மனைவியின் உயிருடன் விளையாடிவிட்டார் தேசாய். முன்னாள் தலைவரின் மாணவர்தான் ஏ.கே.முகர்ஜி. அவரை வேண்டுமென்றே பிரச்னை யில் சிக்க வைத்து, முன்னாள் தலைவர் மற்றும் முகர்ஜி இருவரின் எதிர்காலத்தையும் கெடுப்பது தான் தேசாயின் முக்கியக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. என் மனைவி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னதாகத்தான இந்த விஷயங் களை எல்லாம் நான் கண்டுபிடித்தேன். உடனே, லீலாவின் நிலைக்கு தேசாயின் கவனக் குறைவே காரணம் என மும்பை போலீஸ் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் இரண்டு இடங்களிலும் புகார் அளித்தேன். இதை விசா ரித்த கவுன்சில், தேசாயின் தவறை கோடிட்டுக் காட்டிய பின், 1991-ல் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது போலீஸ். 25 ஆண்டு களுக்குப் பின் நீதி கிடைத்திருக்கிறது!'' என்றவர், ''டாக்டர் தேசாயைத் தண்டித்து அவரிடம் பணம் பெற வேண்டும் என்பது என் குறிக்கோள் அல்ல. அவர் செய்த தவறை உணர்ந்தாலே போதுமானது. இப்போது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். என்றாலும், தேசாய்க்கு மத்திய அரசு அளித்த பத்மவிபூஷண் விருதையும் திரும்பப் பெற வேண்டி அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன். தேசாய் போன்ற மருத்துவர்கள், இந்த வழக்கையே ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நோயாளிகளின் உயிருடன் விளையாடும் விபரீ தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசாய் தரவிருக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை முழுவதையும் வைத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக் காக ஒரு டிரஸ்ட் அமைத்து, அவர்களின் மருத் துவ சிகிச்சைக்காக செலவு செய்வேன்'' என்றவர், ''இறந்த மனைவிக்காக இந்த வயதிலும் போராடி இருக்கிறீர்களே..? என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். என் மனைவி இறக்கும் போது, 'தேசாய் போன்ற மருத்துவர்களை சும்மா விடக்கூடாது’ என்று எனது கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க கதறினாள். அதைத்தான் நிறைவேற்றியிருக்கிறேன். நீதி கிடைக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகி இருந்தாலும், விடாமல் போராடியிருப்பேன். என் மனைவிக்கு, ஒரு டாக்டர் இழைத்த அநியாயத்தை, என்னுடைய பேத்தி சிறுமியாக இருக்கும்போது மடியில் கிடத்தியபடி கூறி இருக்கிறேன். அப்போது, 'நான் நன்றாகப் படித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு மருத்துவராக வாழ்ந்து காட்டுவேன்' என்று கூறினாள். இப்போது அவள் உண்மையிலேயே மருத்துவராகி, நியாயமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு சிறுமியைக்கூட பாதித்த இந்தச் சம்பவம், அன்புக் கணவனான என்னை பாதிக்காமல் இருக்குமா?'' எனக் கேள்வி எழுப்பிய சிங்கி, சமூகவியல் மற்றும் பொருளா தாரத் துறைகளில் இருபது நூல்களை எழுதி யுள்ளார். ''நியாயம், தண்டனை, அபராதம் என்பதை எல்லாம்விட, உண்மையில் என் மனைவி மீது நான் வைத்திருந்த அன்பே... என்னை 25 ஆண்டு களாக இடைவிடாமல் போராட வைத்துள்ளது. மனைவி என்பவள் நம் வீட்டுக் கடமைகள் செய்யும் மனுஷி என்றே ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவள் நம்மில் பாதி. அப்படி என் உயிருக்கு நிகராக நான் நேசித்த என் மனைவியை இழந்த வலிதான், இந்த 84 வயதிலும் அவளுக்காக என்னைப் போராட வைத்தது. ஆண்களுக்கு என் வேண்டுகோள். உங்கள் மனைவியை நேசியுங்கள்... அந்த அன்பே வாழ்வில் ஜெயிக்கும் வல்லமையை உங்களுக்குத் தரும்!'' - பூரிப்புடன் முடித்த சிங்கியும் ஒரு புற்று நோயாளி!