பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

பெயின்டர் தேவை, பிளம்பர் தேவை என்று யாராவது கேட்டு வந்தால், அந்த வேலை தனக்குத் தெரியும் என்று யாரும் ஆஜராக மாட்டார்கள். ஆனால், தலைவலி என்று சொல்லிப் பாருங்கள்... ஆளுக்கொரு வைத்தியம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அந்தளவுக்கு இந்தியத் திரு நாட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடி மகனுமே தன்னை எம்.பி.பி.எஸ். படிக்காத குட்டி டாக்டராகவே நினைத்துக் கொள் கிறார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு அது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு என் டாக்டர் நண்பர் ஒருவருக்கு தலைவலி அதிகமாக, அதற்குரிய ஸ்பெஷ லிஸ்ட் மருத்துவரிடம் செல்லாமல் இரண்டு ஆண்டுகளாக தானே சிகிச்சை எடுத்துக் கொண்டார். முடிவில் அவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து, 34 வயதி லேயே உயிரிழந்த சோகத்தை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. அன்றைய நாளில் இருந்த எல்லா ஆய்வுக் கூட சோதனைகளையும் மேற்கொண்ட அவர், ரத்த அழுத்தத்தை மட்டும் ஏனோ சோதிக்கவே இல்லை. அவருடைய மனைவி யும் ஒரு டாக்டர் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு மருத்துவரே, தன் பிரச்னைக் குரிய ஸ்பெஷலிஸ்ட்டிடம் செல்லாமல், தனக்குத் தானே மருத்துவம் பார்த்து காப்பாற்றிக் கொள்ள முடியாதபோது... சாமான்ய மக்களால் எப்படி சுய மருத்துவத்தால் தற்காத்துக்கொள்ள முடியும்? செல்ஃப் மெடிக்கேஷனின் ரிஸ்க்-ஐ புரியவைக்க, இதைவிட எச்சரிக்கும் விதமான, சோக மான எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா என்ன? உடலின் நோய்க்கூறு இயல் - அதாவது பெத் தாலஜி (Pathology) எனப்படும் மருத்துவப் பிரி வில், ஒவ்வொரு நோயும் உடலில் எவ்விதமான மாறுதல்கள் உண்டாக்கும் என்று அறிந்து, நோயின் போக்கு (Course), அதன் தீர்வுக்கான கணிப்பு (Prognosis), நோயினால் வரக்கூடிய சிக்கல்கள் ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் மேற்பார்வையில் இவை பற்றிய விரிவான அலசல் ஏதுமின்றி... 'மார்பு சளிக்கு இந்த மருந்து' என்று பொதுவாக உட்கொள்வது அபத்தம். உதாரணமாக, சளி என்பது நோயல்ல. சுவாச மண்டலத்தின் உள்ளே நுழைந்துள்ள ஒரு கிருமியை அகற்ற தற்காப்புக்கென உடலில் சுரக்கும் திரவப் பொருள்தான் சளி. சிலசமயம் கிருமிக்கு பதில் வேறு நச்சுத் துகள்கள் அல்லது புகையாலும் சளி ஏற்படலாம். இதை உடலிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் சுவாச மண்டலத்தின் உட்புறச் சுவர் முழுவதும் உள்ள சீதப்படலம் (Mucous Membrane)...கோழை அல்லது நீரைச் சுரக்கிறது. அதன் விளைவாக உடலில் நச்சு நுழை யாமல் நீர்த்துப் போகும். ஆனால், படையெடுக்கும் கிருமியைப் பற்றி கவலைப்படாமல் தற்காப்புக் காகச் சுரக்கும் சளியை அறவே நீக்கிவிட உடனடியாக சிகிச்சை செய்கிறோம். காய்ச்சல் என்பதுகூட உடல் தன்னைக் காத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிதான். கிருமி ஒன்று உள்ளே நுழைகிறது எனில், அதைக் கொல்லும் முயற்சியில் உடல் தன் வெப்பத்தைக் கூட்டுகிறது. அதில் கிருமி அழியாமல் போராடும். அதன் விளைவுதான் நாம் உடல்வலி, தலைவலி எனத் தவிப்பது. ஆனால், கிருமியை வெல்லவிடாமல் செய்யும் உடல் வெப்பத்தை, நாம் மாத்திரைகள் போட்டுத் தடுத்து விடுவதோடு, ஒரு நுண்ணுயிர்க் கொல்லி - அகண்ட திறன் வரிசை நுண்ணுயிர் கொல்லி (பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக்) உட்கொண்டு, உடலின் தற்காப்புத் திறனை (Immunity) வளர விடாமல் செய்கிறோம். சுயமருத்துவம் ஏன் கூடாது என்பது இப்போது புரிந்திருக்கும். சரி, சுயமருத்துவம் எடுத்துக் கொள்வ தனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? பொதுவாக, நாம் உட்கொள்ளும் எந்தப் பொருளும் செரிமானமாகி, உடலில் கல்லீரலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை அனைத்தும் வெளியேறுவது சிறுநீரகங்கள் வழியாகத்தான். எனவே, நாம் எடுத்துக்கொள்ளும் சுயமருந்துகளின் பாதிப்பு, சிறுநீரகங்களைத்தான் பெரிதும் தாக்கும். இவை பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அடிக்கோடிடப்படும் காரணங்களைப் பகிர் வது, உங்களையும் முன்னெச்சரிக்கை ஆக்கும். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரகம் பழுதடைந்தோ அல்லது நோயுற்றோ உள்ளவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர், இதயம் செயல் திறனிழப்பு கொண்டவர்கள் மிக கவன மாக இருக்க வேண்டியவர்கள் என்கின்றன ஆராய்ச்சிகள். 'நான் வெறும் தலைவலி மாத்திரை தான் சாப்பிடுவேன். இதுக்கு ஆராய்ச்சி அளவுக்கு அறிவுரை சொல்லணுமா?’ என்கிறீர்களா..? கவனிக்க... சிறுநீரகங்கள் மிக அதிகம் சேதமடைவது வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால்தான். இதை அனால்ஜீஸிக் நெஃப்ராபதி (Analgesic Nephropathy) என்றே அழைக்கிறார்கள். இவை தவிர, ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் மாத்திரைகூட தீங்கு செய்யலாம். அந்தக் காலத்தில் வீட்டி லேயே வைத்தியம் பார்த்துக் கொண்டார்கள் எனில், சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு முதலுதவிதான் செய்வார்களே தவிர, எல்லா நோயையும் குணப்படுத்த கூடிய மட்டும் முயல மாட்டார்கள். இன்று சமையல் பொருட்களில்கூட கலப்படம் வந்துவிட்ட நிலையில், அஞ்சறைப் பெட்டி வைத்தியம்கூட உத்தரவாதம் இல்லாதது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, மெடிக்கல் ஷாப்களில் நோய்களைச் சொல்லி மாத்திரைகள் வாங்கி விழுங்குவதும், நம் மருத்துவ அறிவை (!) மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் அபாயமானவை. அந்த முறையற்ற மருந்துகள் சிறுநீரகங்களைத்தான் குறி வைத்துத் தாக்கும், முடிவில் நம்மையே தகர்க்கும் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும்! நோயாளியாக இருப்பது தவறில்லை... தனக்குத் தானே டாக்டராவதுதான் மிகப் பெரிய தவறு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக