பிரபலமான இடுகைகள்

புதன், 22 டிசம்பர், 2010

எறும்புகளின் ராஜ்ஜியத்தில் மனித அடிமைகள் ?

''அட... இந்த எறும்புங்க தொல்லை தாங்கலையே... எப்படி மூடி வெச்சாலும் சர்க்கரை டப்பாவுக்குள்ள புகுந்து, படுத்தி எடுக்குதுங்க. அதுவும் இந்த பத்தாவது மாடி வரைக்கும் எப்படித்தான் அதுங்களால ஏறி வர முடியுதோ...’'
- இப்படியெல்லாம் தினம் தினம் கரித்துக் கொட்டிக் கொண்டுதானே இருக்கிறீர்கள். எதற்கும் கொஞ்சம் முன்யோசனையுடன் இருங்கள். ஒரு காலத்தில் இந்த எறும்புகளின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட அடிமைகளாகக்கூட மனித இனம் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆம்...  ஒரு காலத்தில், அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அத்தனை உயிரினங்களும் 'டைனஸோர்'களுக்கு (ஞிவீஸீஷீsணீuக்ஷீ) கட்டுப்பட்டு இருந்தன. அப்போது நிகழ்ந்த ஒரு மாபெரும் பிரளயத்தில் டைனஸோர் இனம் அடியோடு அழிந்து போனது. அதைத் தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக, பல்வேறு  மாற்றங்கள் நிகழ்ந்து, தற்போது மொத்த உலகமும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள்!
காலம், உலகம்... என எல்லாமே சுழற்சி முறையில், அதாவது ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும் தன்மை கொண்டவை. ஆகவே, ஒரு கட்டத்தில் உலகின் மீது மனிதன் கொண்டிருக்கும் ஆதிக்கமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் நியதி. சரி, மனிதனுக்குப் பிறகு இந்தப் பூவுலகை யார் ஆள்வார்கள் என்று கற்பனை செய்து பார்த்தால்... கண்முன்னே சிரிக்கின்றன எறும்புகள்!
ஏன் கூடாது? பூமிக்கு மேலேயும் சரி, அடியிலும் சரி... எல்லா இடங்களிலும் நீக்கமற பரவிக்கிடப்பவை எறும்புகள்தான். 'உலகில் உள்ள எல்லா மிருகங்களையும் எடை போட்டால், மொத்த எடையில் 25 சதவிகிதம் எறும்புகள்தான்' என்கிறார்கள் ஆய்வாளர்கள். எறும்புகளுக்கு நம்மைவிட புத்தி அதிகம். கற்பனாசக்தியும் அதிகம்!
நம்மைப் போல நகரங்களையும் சமூகத்தையும் நிர்மாணிக்கும் திறன் கொண்டவை. அதிகாரிகள், ஏவலர்கள், விவசாயிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள்... என எறும்புகளின் காலனியில் பல சமூக அடுக்குகள் உண்டு. நம்மைப் போலவே உபகரணங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவை. எறும்புகளை உற்றுக் கவனித்தால்... குச்சி வடிவில் இருக்கும் சிறிய துரும்புகளை, உபகரணங்களாகப் பயன்படுத்துவதை பார்க்க முடியும். அவற்றுக்கு மருத்துவமும் தெரியும் என்று சொன்னால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவற்றுக்கு சிந்திக்கவும், திட்டமிட்டு வேலை செய்யவும் தெரியும்.
பரிணாம வளர்ச்சி தத்துவப்படி, குரங்கிலிருந்து உருவான மனிதன், ஆரம்ப கட்டத்தில் வேட்டைக்காரனாகத்தான் காடுகளில் திரிந்தான். விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், ஓர் இடத்தில் குடியமர ஆரம்பித்தான். மனிதனுக்கு அடுத்தபடியாக விவசாயம் செய்யத் தெரிந்த ஒரு ஜீவன், எறும்புகள்தான்.
ஆன்டினி, அக்ரோமிர்மெக்ஸ் போன்ற ஒரு சில வகை எறும்புகள் விவசாயம் செய்து சாப்பிடுகின்றன. இப்படி ஒன்று இரண்டு அல்ல, 200 வகை எறும்புகளுக்கு விவசாயம் செய்யத் தெரியுமாம். இப்படிப்பட்ட எறும்புகளை 'லீஃப் கட்டர்கள்’ என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள்.
இலைகளின் மேற்பரப்பில் இருக்கும் மெழுகு போன்ற பகுதியை அகற்றிவிட்டு, இலையை நன்றாக மென்று, மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சான் தோட்டத்தில் புதைக்கின்றன எறும்புகள். அப்படி புதைக்கப்பட்ட இலைகளில் இருக்கும் (எறும்புகளின்) எச்சில், ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்துகிறது. இதன் காரணமாக இலைகளில் இருக்கும் புரதமும், கார்போ ஹைட்ரேட்டும் தனித்தனியாக பிரிந்து 'கான்கிலிடியா’ எனப்படும் பூஞ்சான் உணவு உற்பத்தியாகிறது. அதாவது, சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 470 கிலோ அளவுக்கு ஒரு காலனியில் பூஞ்சான் மகசூல் செய்யப்படுகிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். எறும்புகளைப் பொறுத்தவரை, இது ஒரு மகத்தான மகசூல் இல்லையா?!
பலம் படைத்த எறும்புகள் அந்த இலைகளை சின்னச் சின்ன துண்டுகளாக கத்தரிக்கும். சக்தி குறைந்த எறும்புகள் அவற்றை மென்று மண்ணில் புதைக்கும். இப்படி வேலைகளைத் தங்களின் திறமைக்கும், சக்திக்கும் தகுந்த மாதிரி பிரித்துக் கொண்டு செய்யும் எறும்புகள்... இந்த உணவு தயாரிக்கும் வேலையின்போது பலதரப்பட்ட நுணுக்கங்களை பயன்படுத்துகின்றன. நாம் விவசாயத் தில் பயன்படுத்தும் களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல் போன்ற யுக்திகளை எறும்புகளும் கையாள்கின்றன. பாலைத் தயிராக்கும் யுக்திக்கு சமமான ஒரு யுக்தியை எறும்புகளும் பயன்படுத்து கின்றன.
உணவுக்காக மனிதர்கள் ஆடு, மாடு வளர்ப்பதைப் போல எறும்புகளும் கால்நடைகளை வளர்க்கின்றன. எறும்புகளுக்கு கால்நடை மாதிரி இருப்பது 'ஆப்பிட்ஸ்’ என்ற ஒரு வகை பூச்சிகள். மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது மாதிரி எறும்புகள் இந்தப் பூச்சிகளை ஒரு சில செடிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றன. பிறகு தங்களுக்கு தேவைப்படும்போது அந்த பூச்சிகளின் வயிற்றில் சேர்ந்திருக்கும் இலைகளின் சாற்றை, அந்தப் பூச்சிகளின் வயிற்றை அழுத்தி வாய் வழியாக கறந்துவிடுகின்றன. எல்லா எறும்புகளும் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதில்லை. எறும்புகளின் சமூகத்திலும் மாடு மேய்ப்பதற்கென்று தனியாக இருக்கும் ஓரினம்தான், பூச்சிகளின் வயிற்றில் இருந்து தாவரச் சாற்றை சேகரித்து, தங்கள் காலனியில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்கின்றன!
மேலே குறிப்பிட்ட 'ஆக்ரோமிர்மெக்ஸ்’ வகை எறும்புகளின் காலனி, அதாவது புற்று, 30 மீட்டர் ஆழத்துக்கும் 100 மீட்டர் அகலத்துக்கும்கூட இருக்கும். இது போன்ற ஒரு காலனியில் 80 லட்சம் எறும்புகள்கூட இருக்கும்!
என்ன... எறும்புகளை மரியாதையோடு பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக