பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஓட்டைப் பானை

இரண்டு பானைகளையும் தடியின் இரு புறமும் தொங்கவிட்டு தினமும் தண்ணீர் சுமந்து செல்லும் அந்த மனிதன்..


இரண்டில் ஒன்றில் ஒரு சிறு கீறல்..அதன் விளைவாய் ..ஒரு பானையில் முழுக் கொள்ளளவும்..மற்றதில் பாதியும் மட்டுமே
அவனால் தண்ணீர் கொண்டு செல்ல முடிந்தது..

நல்ல பானை..அந்த கீறல் பானையை நக்கலாகப் பார்ப்பதும்..கீறல் பானை வெட்கித் தலை குனிவதும் வாடிக்கை யாகி
விட்டன..


ஆண்டுகள் இரண்டு கடந்தோடின..ஒரு நாள் துக்கம் தாங்காமல் கீறல் பானை அவனிடம் கேட்டது..


நீங்கள் தினமும் என்னை பல மைல் தூரம் சுமக்கிறீர்கள்.. ஆயினும் என்னால் பாதி யளவு தண்ணீர் தானே உங்களுக்கு வழங்க முடிகிறது..
எனக்கு பெருத்த அவமானமாக உள்ளது..


அவன் சொன்னான் ....


நீ சொல்வது சரி தான்..ஒன்று கவனித்தாயா..?


வரும் வழியெங்கும் உனது பக்கம் மட்டும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை..


நீ சிந்திய நீர் வீண் போகவில்லை..நான் தான் மலர்ச் செடிகளை நட்டு வைத்தேன்..


இங்குள்ள பெண்களின் தலையில் அழகுடன் அணிந்திருப்பது..நம் வீட்டு வரவேற்பறை..பூஜை அறை அனைத்திலும் இந்த மலர்களே..


அது மட்டுமல்ல..கல்லும் முள்ளும் நிறைந்த இந்தப் பாதையின் ஒரு புறம் மட்டும் நந்தவனம்..
அதுவும் உன்னால் தான் இதெல்லாம் முடிந்தது..


அன்றிலிருந்து அந்தப் பானை தனது கீறலை...குறையை மறந்தது..நல்ல பானையும் நக்கலை விட்டொழித்தது..









நீதி

நாம் அனைவரும் "அந்த நந்தவனத்து ஆண்டி" செய்த ஓட்டைப்பானைகளே...


யாரிடம் தான் "கீறல்" இல்லை..


ஒவ்வொரு மனதிலும் ஆயிரம் கீறல்கள்..


குறைகளை மறப்போம்..குறைவின்றி உழைப்போம்


நிறைகளை மட்டும் நினைப்போம்.. நிம்மதியாய் வாழ்வோம்..











.








"முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!'

புதுச்சேரியின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுனர் சசி பிரபா:

சின்ன வயசுல இருந்தே, எனக்கு வண்டி ஓட்டுறதுக்கு பிடிக்கும். இரண்டாவது படிக்கும் போதே, கியர் பைக் ஓட்ட ஆசை ஏற்பட்டது; ஆனால், கற்றுத் தர யாரும் இல்லை. வண்டியின் முன்சீட்டில் அமர்ந்து, அப்பாவின் கை மீது கை வைத்து, வண்டி ஓட்டி, என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.என் 15வது வயதில், வீட்டுக்கு வந்த நண்பரிடம், "என்பீல்டு' பைக்கை வாங்கி, புதுச்சேரியின் பிரதானச் சாலைகளில் வலம் வந்தேன். அதுவே, என் முதல் பைக் பயணம். 16வது வயதில், கார் ஓட்ட ஆசைப்பட்டு, அப்பாவிடம் கூறிய போது, அம்பாசிடர் காரை எனக்கு பரிசாக அளித்தார்.

என் ஆசைக்கு, அப்பா தடை சொல்லவே இல்லை.அதன்பின், பஸ், லாரி என தொடர்ந்து, இப்போது, ஜே.சி.பி., பொக்லைன் வரை, அனைத்தும் எனக்கு அத்துப்படி. இவைகள் மட்டுமல்லாமல், பரதம், வயலின், மிருதங்கம், கராத்தே, நீச்சல் என அனைத்தும் எனக்கு, கை வந்த கலை. என் திறமைக்கும், வளர்ச்சிக்கும் எனக்கு துணை நின்றவர், என் அப்பா.

பிறந்தோம், படிச்சோம், வேலைக்கு போய் சம்பாதிச்சோம் என்றிருக்க எனக்கு பிடிக்கலை. வாழ்வது ஒருமுறை; அந்த வாழ்க்கையில், ஒரு சாதனையாளர் ஆவதே என் விருப்பம்.புதுச்சேரியில், மாணவர்களுக்காக இயக்கப்படும் பஸ் ஓட்டுனராக வேண்டும் என்பது தான் என் ஆசை. புதிய துறைகளில் தடம் பதிக்க, பெண்கள் முன்வர வேண்டும். தகுந்த பயிற்சியும், முயற்சியும் இருந்தால், முடியாதது ஒன்றும் இல்லை.


வியாழன், 1 செப்டம்பர், 2011

நோன்புத் திருநாளின் பெருமைகள்

நோன்புத் திருநாளின் பெருமைகள்

ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

ஐவகை கடமைகள்

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் இஸ்லாமியராக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(ரமலான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.

இறைதூதர் அளித்த நாள்

முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை கேட்டபோது, பண்டைய காலம் தொட்டு விளையாடுவதற்காகவும். பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது முகம்மது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவ்விரண்டு திருவிழாக்களுக்கும் பதிலாக சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளார். அவை குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!, மற்றொன்று ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்! என்று அறிவித்தார்கள்.

நோன்பின் மகிமை

ஒன்றும் இல்லாமல் பட்டினி கிடப்பது வேறு. பசியின் கொடுமையை உணரவேண்டும் என்பதற்காகவும், அகந்தை, ஆணவத்தை ஒடுக்கி சிறந்த மனிதராக உயரவேண்டும் என்பதற்காகவுமே ஒருமாத காலம் பசியோடு நோன்பிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். இது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமை என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளே ஈகைத் திருநாள். ஒரு மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை ரமலான் மாதத்தின் கடைசி நாளுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என இறைவனால் வழங்கபட்ட திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

தானத்தினால் ஏற்படும் இன்பம்

"ஈதல்' என்பது ஒருவகை இன்பமாகும். அந்த இன்பத்தை உணராதவர்தாம், தம்முடைய செல்வத்தை இழந்து நிற்கும் கொடிய நெஞ்சமுடையோராவர் என்பதையே வள்ளுவர்

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.” என்று கூறியுள்ளார். இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதால் பெறுபவரும், வழங்குபவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி கொள்ள வழிகோலும்.

ஈகை கொடுத்தல்

பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி ஸல் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

"மனித நேயம்" என்பதற்கு, ஈகைப்பண்பும் இரக்கச் சிந்தையுமே சிறந்த சான்றுகளாகும். ரமலான் மாதத்தில் நோற்ற நோன்புக்கு ஷவ்வால் முதல் நாள் அன்று விடுமுறை. அன்று நோன்பிருப்பது நபி வழியன்று! மனம் விரும்பிய உணவை ரசித்து சாப்பிட்டு, குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மகிழ்ந்திருத்தல் அன்றைய நிகழ்வாகும்.

ஈகையின் கடமை

தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் வேண்டிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் ஈதுல் ஃபித்ர் அல்லது ஈகைப்பெருநாள் என அழைக்கப்படுகிறது.